Published:Updated:

கொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? #VikatanFactCheck 

Corona Fact Check
Corona Fact Check

'மற்ற நாடுகளைவிட கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு இந்தியாவில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்துக் காணலாம்...

உலகமெங்கும் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு, இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதோடு, இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

இந்த நோய்க்கு மருந்து கண்டறியும் பணியில், உலகின் பல்வேறு நிறுவனங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அத்துடன் குறைந்த விலையில் நோய் கண்டறிய சோதனைக் கருவிகளையும் உருவாக்கிவருகிறது.

இந்த நிலையில், பல நாடுகள் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக மற்றும் குறைந்த கட்டணத்துடன் வழங்கி வருவதாகவும். இந்தியாவில் சோதனைக்கான கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகிவருகிறது.

Vikatan Fact Check
Vikatan Fact Check

இந்தப் பதிவின் உண்மைத் தன்மையை விகடன் பேக்ட் செக் குழு பரிசோதித்தது.

இரான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா பரிசோதனைகளை இலவசமாகச் செய்கின்றன. வங்கதேசத்தில் ரூ. 300 மற்றும் பாகிஸ்தானில் ரூ. 500 கட்டணம். ஆனால் இந்தியாவில் ரூ.4,500 கட்டணம்" என்று ஒரு பதிவு வைரல் ஆகிவருகிறது.

Fake News
Fake News

இந்தியாவில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆய்வகங்களில், இந்தப் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதுவும் அதிகபட்ச கட்டணமாக ரூ. 4,500 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அதேபோல், அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள மற்ற நாடுகளின் கட்டண விவரங்களும் தவறானவை. மற்ற நாடுகளில் கோவிட் -19 சோதனைக்கான கட்டண விவரங்களைப் பின்வருமாறு காணலாம்

Fake News
Fake News

சீனா

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவில், சோதனைகள் இலவசமாக செய்யப்படுவதில்லை. சில சீன பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், அங்கே ஒரு கொரோனா வைரஸ் சோதனைக்கு சுமார் 370 யுவான் செலவாகும். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3,800.

அமெரிக்கா & ஐரோப்பா

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் சோதனைக் கட்டணங்கள் அவர்களின் காப்பீட்டுத் திட்டங்களின் தன்மையைப் பொறுத்தது. ஆனால், சமீபத்திய அறிக்கைகளின்படி, அமெரிக்க மெடிகேர், கோவிட் -19 சோதனைகளின் கட்டணங்களை வெளியிட்டுள்ளது. இது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் இந்த சோதனைகளுக்கு 35 டாலர்கள் . இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 2,600 ரூபாய்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டு நாடுகளும் கோவிட் -19 சோதனைக் கருவிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

இலங்கை

செய்தி அறிக்கையின்படி, இலங்கை அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகபட்சமாக ரூ .6,000 செலவில் கோவிட் -19 சோதனைகளை நடத்த அனுமதி கொடுத்துள்ளது.

வங்கதேசம்

வங்கதேசத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக் கிட்டுக்கு அந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இந்த சோதனை கிட்டின் விலை ரூ 250- 300க்கு கிடைக்கும்.

பாகிஸ்தான்

அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

இந்தியா

அரசு மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து, என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு, கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 4,500 நிர்ணயம் செய்துள்ளது.

Fake News Post
Fake News Post
vikatan

மேலும், சோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவிட்-19 பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. இதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்தக் கருவியின் விலை ரூ.80,000. ஒரு சிங்கிள் கருவியின் மூலம் 100 நோயாளிகளைப் பரிசோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவின் பரிசோதனை கட்டணம்குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் செய்தி தவறானது.

அடுத்த கட்டுரைக்கு