Published:Updated:

`` வயதானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம்" -மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா கொரோனா பதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் முக்கிய இடம் வகிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகளவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையின் தாக்கம் யாரும் எதிர்பார்க்காத அளவு பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலும், ஆம்புலன்ஸிலும் காத்திருக்கும் அவலத்தை நாம் கண்முன்னே பார்த்தோம். இவ்வளவு ஏன் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்குக் கூட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

இரண்டாம் அலையில் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை வைரஸ் பரவல்தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இந்தியாவில் உருவான டெல்டா வகை வைரஸ் தற்போது உலகளவில் 130 நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா கொரோனா பதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரைச் செப்டம்பர் 28-ம் தேதி நிலவரப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 33,697,581, இதில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 32,958,002 பேர். பாதிப்பால் இறந்தவர்கள் 4,47,406 பேர்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,58,923. இதில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 26,06,153 பேர். கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,509 பேர். தமிழகத்தில் மே மாத காலகட்டத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் சென்றது. தினசரி பாதிப்பு 36,000-க்கும் அதிகமாக இருந்தது. இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தினசரி பாதிப்பு 1,500 என்ற அளவிற்கு வந்தது. கடந்த சில தினங்களாகத் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை நிலவரம் என்ன?

சென்னையைப் பொறுத்தவரைச் செப்டம்பர் 26-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 23,033 - தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 190. தொற்று உறுதியாகும் சதவிகிதம் வெறும் 0.8 சதவிகிதமாகவே உள்ளது. இதே கோவையை எடுத்துக்கொண்டால், 10,814 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 196 நபர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று சதவிகிதம் 1.8 சதவிகிதமாகும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
ரா.ராம்குமார்

சென்னையில் உள்ள மொத்த ஆக்சிஜன் படுக்கைகளில் எண்ணிக்கை 8,484 - இதில் தற்போது 612 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7872 படுக்கைகள் காலியாக உள்ளன. ஐ.சி.யூ படுக்கைகளில் எண்ணிக்கை 1,956 - இதில் 175 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டு, 1,781 படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையில் மட்டும் 13,098 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல சென்னையில் உள்ள கொரோனா கேர் சென்டர்களில் உள்ள 3,944 படுகைகளில் 115 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரம் என்ன?

செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு, 1,509 ஆகவும். கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 16,620 ஆக இருந்தது. அன்றைய தினப்படி மேற்கொள்ளப்பட்ட மொத்த ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,54,718. செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 1,658 ஆகவும். சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,636 ஆகவும் இருந்தது. அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,50,740 ஆகும். செப்டம்பர் 23-ம் தேதி தினசரி பாதிப்பு 1,745 ஆக அதிகரித்திருந்தது.

கொரோனா பணி
கொரோனா பணி

சிகிச்சையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,121 ஆக உயர்ந்தது. அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 1,60,057 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 27-ம் தேதி அன்று தினசரி பாதிப்பு 1,657 ஆகவும். சிகிச்சையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,261 ஆகவும் இருந்தது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் எண்ணிக்கை 1,51,880 ஆகும். இந்த தேதியில் தமிழகத்தில் 100-க்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் என்று பார்த்தால், கோவை (189), சென்னை (186), ஈரோடு (117), செங்கல்பட்டு (113) ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டும் தான். தஞ்சாவூர் மற்றும் திருப்பூரில் தொற்றின் எண்ணிக்கை என்பது ஏற்றம் இறக்கமாகவே உள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை ஏறி இறங்குவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறதே தவிரத் தொற்று முழுமையாகச் சரியாகவில்லை. இதனைப் பொதுமக்கள் உணர வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளால் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மிக ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். அதே சமயத்தில் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 41 லட்சத்திற்கும் அதிகமானவர்களே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தங்களின் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம். முதல் மற்றும் இரண்டாம் அலையில், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்குதான் பாதிப்பு அதிகமாக இருந்தது." என்றார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசியவர், ``தமிழகத்தில் அதிக அளவிலான ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. படுக்கை வசதி முதல் ஆக்சிஜன் வசதி வரை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மூன்றாம் அலை வராமல் இருப்பதற்கான அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேவை இல்லாது மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசியும், முகக்கவசமும் தான் நம்மைக் காப்பாற்றும் ஆயுதங்கள். சிறிய அலட்சியம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்த நேரிடலாம். பொதுமக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு