Published:Updated:

`கொரோனாவால் ஏற்பட்ட அசாத்திய மாற்றம்!' - கிருமிநாசினியைத் தயாரிக்கும் நூற்றாண்டு தொழிற்சாலை

cordite factory
cordite factory

நூறாண்டுகளுக்கு மேலாக வெடிமருந்து உற்பத்தியில் ஈடுபட்டுவந்த மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனம், இன்றைக்கு கிருமிநாசினி தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது .

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. மனிதர்கள், தங்களின் வெளிநடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக்கொண்டு ஊரடங்கில் உள்ளனர். மற்ற இடங்களைப்போல தமிழகத்திலும் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

cordite factory
cordite factory

இந்த திடீர் தாக்கத்தால், உலகில் நம்பமுடியாத பல மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த சுகாதாரப் பேரிடரில் மருத்துவ, சுகாதார உபகரணங்களுக்கு உலகம் முழுக்கவே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரயில்வே முதல் காவல்துறை வரை முகக்கவசம், கிருமிநாசினி தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன.

cordite factory
cordite factory

இந்த நிலையில், அருவங்காட்டில் இயங்கிவரும் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை, தற்போது கிருமிநாசினி தயாரிப்பில் ஈடுபட்டு முதல் கட்டமாக அதை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு பகுதியில், 1904-ம் ஆண்டு முதல் கார்டைட் தொழிற்சாலை இயங்கிவருகிறது. ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலை, தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது.

cordite factory
cordite factory

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹேண்ட் சானிடைஸர் எனப்படும் கை சுத்திகரிப்பு திரவத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், "இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிட்டட் (எச்.எல்.எல்) நிறுவனம், ஹேண்ட் சானிடைஸரை உற்பத்திசெய்து தருமாறு வெடிமருந்து தொழிற்சாலையை கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள வெடிமருந்து தொழிலக வாரிய பொது மேலாளர் ஹரிமோகன் உத்தரவின் பேரில், தொழிற்சாலையில் முதல்முறையாக 13 ஆயிரம் லிட்டர் சானிடைஸர் உற்பத்தி தொடங்கப்பட்டது.

Hand Sanitizer
Hand Sanitizer

முதல்கட்டமாக 1500 லிட்டர் சானிடைஸர் தயாாிக்கப்பட்டு, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள எச்.எல்.எல் நிறுவனத்திற்கு லாரி மூலம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் அதிகாரிகள், ஊழியர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வேலை செய்து வருகின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு