Published:Updated:

நாளை முடியும் ஊரடங்கு… சென்னை தவிர, பஸ்கள் இயக்க வாய்ப்பு?

போக்குவரத்து
போக்குவரத்து

நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடையும் நிலையில், தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும் என்றும் அதே சமயம் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மே 29-ம் தேதி இருபதாயிரத்தைத் தாண்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 874 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா அதிரித்துவருகிறது. செங்கல்பட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சென்னை ஒரு பெரும் சவாலாக இருப்பதாக நேற்று (மே 29) முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலையுடன் குறிப்பிட்டார்.

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (மே 31-ம் தேதி) முடிவடைகிறது. ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 65,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 4,706 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் இருப்பதால், நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது அறிவித்துவருகின்றன. இதனால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட ஊழியர்களுடன் உரிய விதிமுறைகளுடன் செயல்பட்டுவருகின்றன.

மூடப்பட்ட கடைகள்
மூடப்பட்ட கடைகள்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்துகள் இல்லாத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில், பிற மாவட்டங்களைக் காட்டிலும் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருவது அரசு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடையவிருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் சில தளர்வுகளுடன் தொடருமா என்பதை விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக இதுவரை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடிதான் காணொலியில் பேசிவந்தார். ஆனால், கடந்த 28-ம் தேதி மாநில முதல்வர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல்வர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கலாம் என்று பெரும்பாலான முதல்வர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை விதிப்பது, தளர்த்துவது போன்ற முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு அதிகம் இருக்காது என்றும், மாநிலங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவெடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

விதிமீறல்
விதிமீறல்

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 30 மாநகராட்சிப் பகுதிகளில்தான் இந்தியாவின் 80 சதவிகித கொரோனா தொற்றாளர்கள் இருக்கிறார்கள். எனவே, கொரோனா தொற்று அதிகம் உள்ள நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் மத்திய அரசு அறிவுறுத்தும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் பஸ்கள், ரயில்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி போக்குவரத்து தேவையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னையில் நோய்த்தொற்று அதிகம் இருப்பதால், தற்போதைய நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது. பிற மாவட்டங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டாலும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடுகிற இடங்கள் மூடியே இருக்கும். அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இருக்காது.

வாகன சோதனை
வாகன சோதனை
தொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள்! காரணம் என்ன? - மனநல மருத்துவர்கள் விளக்கம்

பல பகுதிகளில் மேலும் தளர்வுகள், சில பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள் என்ற நிலை அடுத்து வரக்கூடிய நாள்களில் இருக்கும். இது தொடர்பான அரசின் முடிவுகளை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு