Published:Updated:

பிரஸ் மீட்டில் நீங்கள் மாஸ்க் அணிவதில்லை.. ஏன்?! -பீலா ராஜேஷிடம் ஒரு கேள்வி

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்போதிலும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona
Corona
pixabay

மேலும், கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து இதுவரை 50 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. தொடர்ந்து அச்சம் தரும் வகையில் கொரோனா தாக்கம் தமிழகத்தில் பரவி வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா
கொரோனா

இதற்கிடையே, கொரோனா குறித்த இன்றைய நிலவரத்தை சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். ``தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58 பேர் நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேரும் அரசு முகாமில் 130-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 63,380 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 25 அரசு ஆய்வகங்கள் 9 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கும், கோவையில் மேலும் 7 பேருக்கும், சென்னையில் மேலும் 9 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும், மதுரையில் மேலும் 14 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 34 மாவட்டங்களில் வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பீலா ராஜேஷ், ``கொரோனாவை பொது சுகாதார அவசர நிலையாக WHO ஜனவரியில் அறிவித்த உடனே விமான நிலையங்களில் பரிசோதனையை ஆரம்பித்துவிட்டோம். அப்போது வுகானில் மட்டும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் தொற்று கண்டறியும் முன்னரே முன்னோடி மாநிலமாக தேவையான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக 146 கோடிக்கு கொள்முதல் செய்தது தமிழகம்தான். அதுமட்டுமில்லை, மாஸ்க், வென்டிலேட்டர் எனத் தேவையான அனைத்தும் முன்னெச்சரிக்கையாகவே அப்போதே ஆர்டர் செய்தோம். தமிழகத்தில் கொரோனா தாக்கம் கண்டறியும் முன்னரே, சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் அது வந்துசேர்ந்துவிடும். மேலும், பல ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை குறைக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம். அதற்கேற்ப அரசு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்று விவரங்களை அடுக்கினார்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

அப்போது நிருபர் ஒருவர், `பிரஸ் மீட்டில் நீங்கள் மாஸ்க் அணிவதில்லை.. ஏன்' எனக் கேள்வி எழுப்பினார். ``மாஸ்க் அணிவதற்கு என்று தனியாக விதிமுறைகள் உள்ளது. ட்ரிபிள் லேயர் மாஸ்க், N95 மாஸ்க் ஆகியவை சுகாதாரப் பணியாளர்கள் அணிய வேண்டும். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட, நோயால் அவதிப்படுபவர்கள் என்றால் மாஸ்க் பயன்படுத்தலாம். மற்றபடி, நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைக் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கைகளைச் செய்தால் போதும். அப்படி மாஸ்க் போட வேண்டும் என்றால் திரும்பப் பயன்படுத்தக்கூடிய மாஸ்குகளைப் பயன்படுத்தினால் போதும்" என்று அதற்கு விளக்கம் கொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு