Published:Updated:

`காலிஃபிளவர் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் பிளாஸ்திரி; பெண்ணுக்கு வாந்தி மயக்கம்!' -ஆவடியில் அதிர்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலிஃபிளவர் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் பிளாஸ்திரி!
காலிஃபிளவர் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் பிளாஸ்திரி!

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த காலிஃபிளவர் பக்கோடாவில் ரத்த கரையுடன் பிளாஸ்திரி இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் மாலை நேரத்தில் சமோசா, பக்கோடா உள்ளிட்ட உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநின்றவூர், பெரியார் நகரைச் சேர்ந்த பானு என்ற பெண் நேற்று முன்தினம் இரவு இந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிய பின்னர், பானு அங்கு விற்பனை செய்யப்பட்ட காலிஃபிளவர் பக்கோடாவினை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பானு, அந்த பக்கோடாவினை அவரின் தங்கைக்குச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதை வாங்கி சாப்பிட்ட பானுவின் தங்கை உடனடியாக வாந்தி எடுத்து விட்டு, மயக்கமடைந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பானு, சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த காலிஃபிளவர் பக்கோடாவை சோதனை செய்திருக்கிறார். அப்போது, அதில் ரத்த கரையுடன் பிளாஸ்திரி ஒன்று இருந்துள்ளது.

அதையடுத்து, பானு தனது தங்கையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்து விட்டு, உடனடியாக தனியார் சூப்பர் மார்கெட்டிற்கு சென்று உரிமையாளரிடம் ரத்தக்கறை படிந்த காலிஃபிளவர் பக்கோடாவை காட்டி வாக்குவாதம் செய்திருக்கிறார். கூடியிருந்த வாடிக்கையாளர்கள் முன்பு பானு வாக்குவாதம் செய்ததால், ஆத்திரமடைந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பானுவிடம் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.தொடர்ந்து அங்கிருந்த கிளம்பிச் சென்ற பானு இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

பக்கோடாவில் பிளாஸ்திரி
பக்கோடாவில் பிளாஸ்திரி

பானுவின் புகாரைத் தொடர்ந்து, நேற்று காலை சம்பந்தப்பட்ட சூப்பர் மார்கெட்டிற்கு விரைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வேலவன் மற்றும் சங்கரன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டவர்கள், பக்கோடாவிற்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவிருக்கிறோம். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்திலேயே அங்கு விரைந்த பூவிருந்தவல்லி சுகாதார ஆய்வாளர் பிரபு தலைமையிலான அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்ததால் உரிமையாளருக்கு 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில், காலிஃபிளவர் பக்கோடாவில் பிளாஸ்திரி இருந்ததாகக் கூறி பானு, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு