Published:Updated:

கொரோனா யுத்தம்! வீழுமா... வெல்லுமா தமிழ்நாடு?

கிருமி யுத்தம்..!
கிருமி யுத்தம்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் முடங்கிப் போய் உள்ள நிலையில் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து மீளுமா?

ஆறு கால பூஜை எதுவும் நடக்கவில்லை. அழகர் ஆற்றில் இறங்குவாரா தெரியவில்லை. குருத்து ஞாயிறுக்கு ஓசான்னா பாடிக்கொண்டு யாரும் ஊர்வலம் போகவில்லை. அல்லேலுயா சத்தங்கள் அடங்கிப்போய் விட்டன. வெள்ளிக்கிழமை மதியத்திலும் பள்ளிவாசல்களில் பாதங்கள் கழுவிய ஈரம் காணமுடியவில்லை.

கருவறைகள் இருளடைந்து கிடக்கின்றன. கடவுளர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். உலகத்தின் மன்றாட்டு ஓங்கி ஒலிக்கிறது. அது பூமிக்குள்ளேயே எதிரொலித்து அடங்குகிறது. எந்தக் கடவுளின் படைப்பு என்று தெரியவில்லை. உலகமே மண்டியிட்டுக் கிடக்கிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற வைரஸிடம்.

என் சாதிக்காரனே என் இனத்துக்காரனே என்னைத் தொடக்கூடாது என்கிற `தீண்டாமை', உலகமெங்கும் உருப்பெற்றிருக்கிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், மண்டபங்களின்றித் தள்ளிப்போகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, வருமானவரி ரெய்டுகள், மத்தியப் பிரதேச அரசியல் மர்மங்கள், ஊழல் வழக்குகள் எல்லாம் மறந்து போயின. அடுத்து ராணுவம் வருமா, எமர்ஜென்ஸி வருமா என்று தேசமெங்கும் விவாதங்கள் சூடு பறக்கின்றன.

கொரோனா அச்சம், எல்லா தேசங்களின் எல்லையையும் எளிதில் ஊடுருவும் பயங்கரவாதமாகியிருக்கிறது. எப்போது இதெல்லாம் முடிவுக்கு வருமென்று திக்கு தெரியாமல் தவிக்கிறது மனிதகுலம். முதலில் விழுந்த சீனா முதலிலேயே எழுந்துவிட்டது. இத்தாலியும் அமெரிக்காவும் இக்கட்டிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன. இந்தியாவும் ஊரடங்கை அறிவித்துவிட்டு, கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கு எல்லா திசைகளிலும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது.

முதலில் ஒரு நாளுக்கு மட்டும் சுய ஊரடங்கைக் கடைப் பிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, இரண்டே நாள்களில் 21 நாள் கட்டாய ஊரடங்கைப் பிறப்பித்து, நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே முடங்கச் சொல்லியிருக்கிறார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட 4 மணி நேரத்தில் ஊடரங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் அன்று மாலை வரையிலும் வேலை பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள், அன்றாடக் கூலிகள், ஊர் விட்டு ஊர் சென்று வணிகம் செய்யும் சிறு வணிகர்கள், குடும்ப நிகழ்வுகளுக்காக, அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியூர் சென்றவர்கள் என்று நாடு முழுவதும் பல கோடி மக்கள், ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர்.

உணவுக்கும் ஊதியத்துக்கும் வழியில்லை என்ற நிலையில், எப்படியாவது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட வேண்டுமென்று துடித்து, ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் லட்சோப லட்சம் மக்கள் திரள, அந்தக்காட்சிகளைப் பார்ப்பதற்கே பகீர் என்றிருந்தது.

கோயம்பேடு
கோயம்பேடு

சென்னை கோயம்பேட்டில் கூடிய கூட்டம், அடிவயிற்றைக் கலக்கினால், டெல்லியிலும், உத்தரப் பிரதேசத்திலும் கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது நெஞ்சு முழுவதும் சூடாகிக் கொதித்தது. அசாதாரண சூழ்நிலைக்கு அச்சாரம் போட்டது அந்தநாள்.

இத்தனை பெரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் ஓர் அரசு, அடித்தட்டு மக்களை அவரவர் இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு எந்தவிதமான முன்னேற்பாட்டையும் செய்யவில்லை. பிழைப்பு தேடி குடும்பங்களையும் சொந்த மண்ணையும் விட்டுவிட்டு வெளியே வந்தவன், இருந்தாலென்ன செத்தாலென்ன என்பதைப் போலத்தான் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருந்தன. அந்தக் கூட்டங்களில் எத்தனை பேருக்குக் கொரோனா தொற்று இருந்திருக்கும், அவர்களால் எத்தனை பேருக்குப் பரவியிருக்கும், அவர்கள் இப்போது எத்தனை பேருக்குப் பரப்பிக் கொண்டிருப்பார்கள் என்பதையெல்லாம் கற்பனை செய்தால் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

`டெல்லி நிஜாமுதீன்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்' ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

கொரோனா ஒன்றும் இந்தியாவில் பிறந்த தொற்று அல்ல. சீனாவில் பிறந்து எங்கெங்கோ பரவி, அங்கிருந்துதான் ஏதோ சில வெளிநாட்டுப் பயணிகள் மூலமாகத்தான் இங்கே நுழைந்திருக்கிறது. இத்தனைக்கும் சீனா இந்தியாவின் அண்டை நாடுதான். பக்கத்திலுள்ள நாட்டிலிருந்தோ, வேறு எங்கிருந்தோ இந்தத் தொற்று இந்தியாவுக்குள் வந்தால் என்னவாகும் என்பதை யூகித்து, தொலைநோக்குடன் மத்திய அரசு செயல்பட்டிருந்தால் பிப்ரவரியிலிருந்தே வெளிநாட்டுப் பயணிகளைத் துல்லியமாக மருத்துவப் பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்க முடியும். அவர்களால் மற்றவர்களுக்குப் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்திருக்க முடியும். ஆனால், சர்வதேச விமான நிலையங்களில் சரியான முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.

``நான் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தபோது எனக்குக் காய்ச்சல் இருந்தது, வீட்டிற்குச் சென்று பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும் என்னை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டார்கள்!’’ என்று சாதாரணமாகச் சொன்னார், கொரோனா தொற்று உறுதியான நபர் ஒருவர்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

ஸ்பெயின் நாட்டிலிருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்குக் கொரோனா அறிகுறிகள் இருந்தபோதும் விமான நிலையத்திலிருந்து எப்படியோ வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். அதற்குப் பிறகுதான், ஸ்பெயினில் தன்னுடன் பணியாற்றிவருக்கு கொரோனா எனத் தெரிந்த பின்பு, இவரும் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குப் போன பின்புதான் அவரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள். அவர் வந்த டாக்ஸி ஓட்டுநர், அவர் வீட்டிலிருந்தவர்கள் என அனைவருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் ஒரு சோறுப்பதங்கள்தான்... மத்திய, மாநில அரசுத்துறைகளின் அலட்சியமும் பொறுப்பின்மையும்தான் இன்றைக்கு இந்தியாவையே முடக்கிப்போடுவதற்கு அடிப்படைக் காரணமாகி இருக்கிறது. வெறும் 14 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளிடம் கடுமை காட்டாமல் கோட்டை விட்டதன் விளைவாகத்தான் இன்றைக்கு 130 கோடி மக்களையும் முடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு விமான நிலைய ஆணையத்தைக் கையில் வைத்திருக்கும் அமைச்சரும் மத்திய அரசும்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டுமென்று சாடுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த விஷயத்தில் தாமதமாகத்தான் மத்திய அரசு விழித்துக்கொண்டது என்பதே நிஜம். அதற்குப் பின்பு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு, 1,70,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புச் சலுகைகள் என மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவைதான். அதிலும் குறிப்பாக ``நம் தேசத்தில் கையில் பணமின்றியும் உணவின்றியும் யாரும் பசியில் வாடக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை அறிவிக்க உள்ளோம்'' என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது மெச்சத்தக்க விஷயம்தான்.

ஆனால் வெளிநாட்டுப் பயணிகளை முறையாகப் பரிசீலிக்காமல் சமூகத்துக்குள் ஊடுருவ அனுமதித்தது, ஊரடங்கை அறிவிக்கும் முன் பல கோடி மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தராதது என மத்திய, மாநில அரசுகள் செய்த தவறுகளின் விளைவை, இனி அடுத்தடுத்து வரும் வாரங்களில்தான் அறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் விஷயத்தில், நாம் சில வாரங்கள் பின் தங்கியிக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணன், அடுத்த சில வாரங்களில் கொரோனா சமூகப் பரவல் சுனாமியைப் போல மிக வேகமாகும் என்று எச்சரிக்கிறார். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணம், மிகமிகக் குறைவான அளவிலான பரிசோதனைகள் நடக்கிறது என்பதுதான் காரணமென்கிறார்கள் மருத்துவத் துறையினர். லட்சக்கணக்கான மக்களை பரிசோதனை செய்யுமளவிற்குக் கூட நம்மிடம் மருத்துவ வசதிகள் நம் தேசத்தில் இல்லை என்பதுதான் உண்மையும் கூட.

நாடு தழுவிய ஊரடங்கிற்கு இந்தியா தயாராக இருந்ததா?

கொரோனா தொற்று ஒருவருக்கு இருந்தால் அவர் மூலமாகப் பலருக்கும் பரவுவது உறுதியாகியுள்ளதால் சமூகப்பரவல் வேகமாகும் என்பதை மறுப்பதற்கில்லை. கோவையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் அவருடைய குழந்தை, அவருடைய தாயார் மற்றும் வீட்டு வேலையாள் என மூவருக்குப் பரவியிருக்கிறது. இதே வேகத்தில் தொற்று பரவினால் நிலைமை மிக மோசமாகுமென்பது நிச்சயம். ஆனால் இதன் தீவிரத்தையும் பாதிப்பையும் பெரும்பான்மை மக்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

தமிழக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை
தமிழக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை

கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் கட்டமைப்பு வசதிகளிலும் பின் தங்கியுள்ள வடமாநிலங்களில் கொரோனா தொற்றைப் பற்றியே அறியாத மக்கள் பல கோடிப்பேர் இருக்கின்றனர். ஆனால் அந்த மாநிலங்களுக்கெல்லாம் கொரோனா பரவும் அபாயம் அதிகமில்லை. கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு, தொழில் எனப் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகமுள்ள கேரளா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குத்தான் கொரோனா அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது.

மற்ற மாநிலங்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனவோ தெரியவில்லை. தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதைப் போலவே மக்கள் அடர்த்தி, பொதுப் போக்குவரத்து போன்ற சமூகப்பரவல் அதிகமாவதற்கான காரணிகளும் அதிகமாக இருக்கின்றன. அதனால் அரசால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாத விஷயமாகும். தமிழக மக்கள் அனைவரும் அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே உயிர் பலிகளில்லாத ஒரு தீர்வு கிடைக்கும்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக மக்கள் பலருக்கும் இந்தத் தொற்றின் தீவிரமும் ஊரடங்கின் அவசியமும் பற்றிப் புரிந்ததாகவே தெரியவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளன்று இரவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல ஆயிரம் பேர் கூடியதற்காவது, எப்படியாவது சொந்த ஊருக்கு, வீட்டுக்குப் போக வேண்டுமென்று குவிந்தார்கள் என்று ஒரு காரணத்தைச் சொல்லலாம்.

அதற்கு மறுநாளிலிருந்தும் நிலைமை சரியாவதாகவே தெரியவில்லை. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதுவதும் கோயம்பேடு சந்தையில் உரசி இடித்துக்கொண்டு காய்கறிகள் வாங்குவதும் இன்று வரையும் தொடர்கிறது. திருப்பூரில் இறைச்சிச் சந்தையும் மீன் சந்தையிலும் குவிந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனே சமூக ஊடகங்களில் வேணடுகோள் விடுக்கும் நிலை ஏற்பட்டது.

மோடி - ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
மோடி - ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
`பெண்ணுக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப உறவுகள்!'- அச்சத்தில் அரியலூர் மக்கள்

அடங்காமலும் அச்சமில்லாமலும் வலம் வரும் மக்களை உள்ளூர் போலீசை மட்டுமே வைத்துக்கொண்டுக் கண்டிப்பதும் தண்டிப்பதும் சாத்தியமே இல்லாத விஷயமாகத் தோன்றுகிறது. இத்தகைய மக்களால் கொரோனா சமூகப்பரவல் அதிகமாகி, அதனால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதன் உச்சமாக தேசத்துக்கே பேரிழப்புகளும் உண்டாகுமோ என்ற அச்சவுணர்வு எழுந்துள்ளது. இதை உணர்ந்தே தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மெடிக்கல் எமர்ஜென்ஸியைக் கொண்டு வரவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

அப்படிக் கொண்டுவரப்படும்பட்சத்தில் தமிழகம் முழுவதும் ராணுவம் அல்லது துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். அந்த எமர்ஜென்ஸி எத்தனை மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது தெரியாது. அடுத்த ஆண்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் நிலையில், கொரோனா ஏற்படுத்தியுள்ள தற்போதுள்ள அசாதாரணச் சூழல் நிஜமானதா, மிகைப்படுத்தலா என்ற சந்தேகங்களும் பலருக்கு எழுகின்றன.

ஏற்கெனவே மத்திய அரசுக்கு அடிமையைப் போல தமிழக அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கொரோனா என்ற காரணத்தை வைத்து தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படும். அதனால் கொரோனா தொற்று, தொழில்கள் முடக்கம், பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பு எனப் பல முனைத் தாக்குதலை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

பல இயற்கைச் சீற்றங்களிலிருந்து மனிதமும் மக்களும் தமிழகத்தை எழ வைத்த வரலாறு உண்டு. இப்போது மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசும் கைகோக்க இந்த இடர் தாண்டி தமிழகம் வெல்ல வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

அடுத்த கட்டுரைக்கு