Published:Updated:

சிகிச்சையில் அலட்சியம், ஸ்கேன் எடுக்க பணம்... திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மையில் நடந்தது என்ன?

ஆகஸ்ட் 14-ம் தேதி என் மீது ஃபேன் கழன்று விழுந்தது. உடனே டாக்டர்கிட்ட காட்டினேன். அவர் ஸ்கேன் எடுக்கணும்னு எழுதிக் கொடுத்தார். ஆனா அங்க போனா 500 ரூபாய் இருந்தாதான் ஸ்கேன் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அவங்க நிர்வாகத்துல நடந்த தப்புக்கு பாதிக்கப்பட்ட என்கிட்டயே பணம் கேட்டாங்க.

Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH)
Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH)

திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் அனுஜெயஸ்ரீ. மாற்றுத்திறனாளியான இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக அவரின் தாய் ஜேம்ஸ்மேரி உடனிருந்து கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி ஜேம்ஸ்மேரி தன் மகள் அனு ஜெயஸ்ரீக்கு உணவு கொடுத்துவிட்டு தானும் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அனுஜெயஸ்ரீ படுக்கைக்கு மேலே இருந்த மின்விசிறி திடீரென கழன்று ஜேம்ஸ்மேரி மீது விழுந்தது. இதில் ஜேம்ஸ்மேரி உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

James Mary with Jayashree
James Mary with Jayashree

இதையடுத்து அங்கிருந்த செவிலியர்கள் ஜேம்ஸ்மேரியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்ததுடன் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். அதன்படி மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் எடுக்கும் அறைக்கு ஜேம்ஸ்மேரி சென்றார். அங்கிருந்த மருத்துவக் கண்காணிப்பாளர் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனில் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கறாராகக் கூறியுள்ளார். அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததால், ஸ்கேன் எடுக்காமலே தன்னுடையை மகள் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அனுஜெயஸ்ரீ உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளி சங்க திருச்சி மாவட்ட தலைவர் ஜெயபால் அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து ஜேம்ஸ்மேரி விரிவாகக் கூறினார். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த விபத்துக்கு பொறுப்பேற்காமல் சிகிச்சை அளிக்க பணமும் கேட்ட சம்பவம் அவரை அதிருப்தியடையச் செய்தது. உடனே ஜேம்ஸ்மேரிக்கு ஸ்கேன் எடுக்க மறுத்த மருத்துவக் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து ஜெயபால் விளக்கம் கேட்டார். அதற்குப் பதிலளித்த மருத்துவக் கண்காணிப்பாளர், ஸ்கேனுக்கான பணத்தைக் கட்ட முடியாது என்றதுடன் அதற்கான தொகை மருத்துவமனையிடம் இல்லை என்று கைவிரித்துள்ளார்.

Mahatma Gandhi Memorial Government Hospital
Mahatma Gandhi Memorial Government Hospital

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தில் பிரச்னை பற்றிக்கூறிய ஜெயபால், தம்முடைய அமைப்பின் சார்பாக மருத்துவமனை டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறினார். இதுபற்றி மருத்துவமனை டீன் கேள்விப்பட்டதும் ஜெயபாலை அழைத்து பாதிக்கப்பட்ட ஜேம்ஸ்மேரிக்கு சிகிச்சை அளிக்கவும், ஸ்கேன் பரிசோதனையை இலவசமாகச் செய்வதாகவும் உறுதியளித்தார். அத்துடன் மருத்துவமனையில் உள்ள பழைய மின்விசிறிகளை பழுதுபார்ப்பதாகக்கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம், கூலி வேலை பார்த்துதான் குடும்பம் நடத்துறோம். மகள் உடம்பு சரியில்லாததால வேலைக்கும் போகலை, கையில பணமும் இல்ல. அதனால ஸ்கேன் எடுக்காம வந்துட்டேன்.
ஜேம்ஸ்மேரி

சம்பவம் குறித்து ஜேம்ஸ்மேரியிடம் கேட்டோம்.

"ஆகஸ்ட் 14-ம் தேதி என் மீது ஃபேன் கழன்று விழுந்தது. உடனே டாக்டர்கிட்ட காட்டினேன். அவர் ஸ்கேன் எடுக்கணும்னு எழுதிக் கொடுத்தார். ஆனா, அங்க போனா 500 ரூபாய் இருந்தாதான் ஸ்கேன் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அவங்க நிர்வாகத்துல நடந்த தப்புக்கு பாதிக்கப்பட்ட என்கிட்டயே பணம் கேட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம், கூலி வேலை பார்த்துதான் குடும்பம் நடத்துறோம். மகள் உடம்பு சரியில்லாததால வேலைக்கும் போகலை, கையில பணமும் இல்ல. அதனால ஸ்கேன் எடுக்காம வந்துட்டேன். மறுநாள் வலி அதிகமாயிருச்சுனு டாக்டர்கிட்ட போனேன் அவர் மறுபடி ஸ்கேன் எடுக்கச் சொல்லியும் பணம் இல்லாததால ஸ்கேன் எடுக்கல.

James Mary
James Mary

உடைஞ்ச ஃபேனைக்கூட அஞ்சு நாளாகியும் சரி பண்ணல. அதனால கொசுக்கடிலதான் படுத்து தூங்கினோம். நானும் பெருசா எதையும் எடுத்துக்காம என்னோட பொண்ணைப் பத்தி நினைச்சிக்கிட்டே என் உடம்பு மேலயும் கவனம் செலுத்தல. ஜெயபால் அண்ணன்கிட்ட சொன்ன பிறகு, அவர் தலையில அடிபட்டா அலட்சியமா இருக்கக் கூடாது. எதிர்காலத்துல பிரச்னையாகிடும்னு சொல்லி என்னைத் திட்டுனார். இதைப் பத்தி டீன் கிட்ட பேசினதுக்குப் பிறகுதான் ஆகஸ்ட் 19-ம் தேதி ஃபேனை சரி பண்ணுனதோட, எனக்கு ஸ்கேனும் எடுத்தாங்க. நடந்த விஷயத்தை டீன்கிட்ட முன்னாடியே டாக்டருங்க சொல்லிருக்கணும். ஆனா, யாரும் சொல்லாம விட்டுட்டாங்கனு நினைக்கிறேன்'' என்று சொன்னார் ஜேம்ஸ்மேரி.

மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி ஜெயபாலிடம் பேசும்போது, "நான் மாற்றுத்திறனாளி சங்க திருச்சி மாவட்டத் தலைவரா இருக்கிறேன். நான் யதார்த்தமா வந்து பார்க்கும்போதுதான் ஜேம்ஸ்மேரி நடந்த பிரச்னை பற்றி சொன்னாங்க. ஏன் ஸ்கேன் எடுக்க மாட்டேன்கிறீங்கனு மருத்துவக் கண்காணிப்பாளர்கிட்ட கேட்டா, பணம் கொடுத்தாதான் எடுப்போம்னு அந்த டாக்டர் சொன்னார். அதுக்கு பணம் கொடுத்தா ரசீதுகூட கொடுப்போம்னு மருத்துவக் கண்காணிப்பாளரும் சொன்னார். இந்தச் சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தோட அலட்சியம்தான் காரணம்.

Jayabal
Jayabal

அதோட இங்க நடந்த சம்பவத்தால காயம்பட்டதுக்கு ஸ்கேன் எடுக்கிறதுக்கு எங்ககிட்ட எப்படிப் பணம் கேக்கிறீங்கனு கேட்டேன். அதுக்கு எங்கக்கிட்ட பணம் இல்லைனு சொல்றார் கண்காணிப்பாளர். நான் போராட்டம் நடத்தப்போறதா சொன்னதும்தான் டீன் எங்ககிட்ட பேசினார். அதுக்கு அப்புறமாதான் பிரச்னை முடிஞ்சது. திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த ஒரு பிரச்னை மட்டுமல்ல. புதுசா கட்டியிருக்கிற பில்டிங்லகூட பல ஃபேன் ஓடாது. இப்படி நிறைய பிரச்னை இருக்கு. அது விஷயமாவும் நடவடிக்கை எடுக்கணும்னு டீன்கிட்ட சொல்லிருக்கேன்'' என்றார்.

இந்த விஷயத்தை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் ஸ்கேன் எடுக்க பணம் கேட்ட சம்பவத்தை முழுமையாக மறுத்தார்.

"நான் பணம் கேட்டதாகக் கூறுவது உண்மையல்ல. பாதிக்கப்பட்ட ஜேம்ஸ்மேரி என்பவர் என்னிடம் வந்து, யாரோ ஒருவர் ஸ்கேன் எடுக்க 500 ரூபாய் பணம் கட்டும்படி கூறியதாக என்னிடம் கூறினார். நானும் ஆமாம் 500 ரூபாய் கட்டினால்தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்றேன். இதுபற்றி ஜெயபால் தொலைபேசியில் கேட்டபோது, `ஸ்கேன் எடுக்க பணம் கட்ட வேண்டும். அதற்கான ரசீதை தந்துவிடுவோம்' என்றேன்.

Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH)
Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH)

அதன் பிறகுதான் மருத்துவமனையில் நிகழ்ந்த விபத்துக்கு மருத்துவமனை நிர்வாகம்தானே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். உடனே நான், அவரை நேரடியாக வருமாறு கூறினேன். ஸ்கேன் செய்து பார்க்குமளவுக்கு பெரிய காயம் இல்லை. ஜேம்ஸ்மேரியை அட்மிஷனாகச் சொன்னபோது அவர் அதை மறுத்துவிட்டார்" என்றார்.

இந்தச் சம்பவம் மருத்துவமனையில் நடந்ததால் மருத்துவமனை டீன் அர்ஸியா பேகத்திடம் இதுகுறித்துக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது...

"இந்த சம்பவம் நடந்தது ஆகஸ்ட் 14-ம் தேதி. ஆனால், எனக்கு ஆகஸ்ட் 19-ம் தேதிதான் தெரியவந்தது. உடனடியாக எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தேன். மற்ற கட்டடங்களில் உள்ள பழைய ஃபேன்களையும் மாற்ற அறிவுறுத்தினேன். உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. ஜெயபால் மருத்துவக் கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதால், அவரும் அலட்சியமாக இருந்துவிட்டார். ஜேம்ஸ்மேரியை அட்மிஷன் ஆகும்படி சொன்னதற்கு, அவர் மகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பதால் அட்மிஷனாக மறுத்துவிட்டார்.

Scan Test
Scan Test
Pixabay

நான் மருத்துவக்கல்லூரி துணை முதல்வராக இருக்கிறேன். நிரந்தர டீன் வரும் வரை பொறுப்பு டீன் ஆக மட்டுமே பணியாற்றி வருகிறேன். பலர் மருத்துவமனை தொடர்பாக சில குறைகளை கூறியுள்ளனர். நாங்களும் அதுகுறித்து ஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய உள்ளோம். ஜேம்ஸ்மேரியின் மகள் அனுஜெயஸ்ரீக்கு சி.டி ஸ்கேன் எடுக்க 2,500 ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அந்தத் தொகையைக்கூட எங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர்தான் கொடுத்து உதவியுள்ளார். நிறைய பாசிட்டிவ்வான நிகழ்வுகள் எங்கள் மருத்துவமனையில் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டனர். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிறுசிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். அவற்றை சரி செய்யும் கடமை எங்களிடம் உள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்போம்" என்றார் டீன் அர்ஸியா பேகம்.

இந்த சம்பவத்தில் ஜேம்ஸ்மேரியின் முதுகுப் பகுதியில் மின்விசிறி இறக்கை விழுந்து காயம் ஏற்பட்டதும், அதற்கான சிகிச்சை மற்றும் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோல மின்விசிறியை சரிசெய்திருக்க வேண்டும். அவற்றையெல்லாம் செய்யாமல் காலம் தாழ்த்தியதுடன் பிரச்னை பெரிதானபிறகே அதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது.

Medical Service
Medical Service

ஜேம்ஸ்மேரிக்கு உதவ சிலர் இருந்ததால் இந்தப் பிரச்னை உடனடியாக தீர்க்கப்பட்டது. ஆதரவற்ற யாரேனும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான தீர்வு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே. மருத்துவமனை நிர்வாகம் தங்களை நம்பி வரும் நோயாளிகளுக்கு உடனடி தீர்வை வழங்குவதுடன் மருத்துவமனையில் உள்ள குறைகளை சரிசெய்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.