Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மகாராஷ்டிரா அரசு குற்றச்சாட்டு

ராஜேஷ் தோபே
ராஜேஷ் தோபே

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக மகாராஷ்டிரா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில்தான் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துவரும் நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பன்வெல், சாங்கிலி, சதாரா, புனே போன்ற இடங்களில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இது தவிர மாநிலம் முழுவதும் ஒரு சில நாள்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிரா அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், அதை திசைதிருப்ப கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிவிப்பதாகவும் கருத்து கூறியிருந்தார். இதற்கு மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அளித்துள்ள பதிலில், ``கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. மத்திய அரசு மீது புகார் சொல்ல விரும்பவில்லை.

ராஜேஷ் தோபே
ராஜேஷ் தோபே

மத்திய அரசுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். சமீபத்திய கொரோனா தடுப்பூசி ஒதுக்கிட்டுப் பட்டியல் கிடைத்திருக்கிறது. அதில் மகாராஷ்டிராவுக்கு 7.5 லட்சம் டோஸ் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு 48 லட்சமும், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சமும், குஜராத்துக்கு 30 லட்சமும், ஹரியானாவுக்கு 24 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

12 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 4.5 லட்சம் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. வாரத்துக்கு 40 லட்சம் டோஸ் தேவைப்படுகிறது.

தடுப்பூசி இல்லாமல் தற்போது சதாரா, சாங்கிலி, பன்வெல் போன்ற பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அதிகப்படியான கொரோனா டோஸ் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே இந்தியாவிலும் அது போன்று அனுமதிக்க வேண்டும்.

மகாராஷ்டிரா: மீண்டும் லாக்டெளன் அச்சம்... மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள்

மகாராஷ்டிராவில் தடுப்பூசி மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்தெசிவிர் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெம்தெசிவிர் மருந்தை மத்திய அரசு போதிய அளவில் வழங்க வேண்டும். இந்த மருந்து 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் சாமானிய மக்களும் பயனடைவர். இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு