இன்றைய அவசர வாழ்வில் பொதுவாகவே மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் கூடுதல் இணைப்பாக கோவிட் -19 தொற்று, ஊரடங்கு, நெருங்கியவர்களின் இழப்பு என மனதை பாதிப்படையச் செய்யும் விஷயங்களும் சேர்ந்துகொள்கின்றன. இந்தச் சூழலில் மக்களின் மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தபோது, `தேசிய தொலை மனநல மருத்துவத்திட்டம்' (National Tele Mental health programme) தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். உளவியல் பிரச்னைகளுக்கு தொலைதூர வழியிலேயே தீர்வும், உளவியல் ஆலோசனையும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் சாராம்சம்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``கோவிட் பெருந்தொற்று அனைத்து வயதினர் மத்தியிலும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கியுள்ளது. உளவியல் சார்ந்த மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும், மக்களின் மனநலனை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திட்டத்தின்படி 23 தொலை மனநல மருத்துவ மையங்கள் தொடங்கப்படும்.

இவை அனைத்தும் பெங்களூரில் செயல்படும் NIMHANS (National Institute of Mental health and Neuroscience) மருத்துவ நிறுவனத்தைத் தலைமையாகக் கொண்டு செயல்படும். தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளுக்கு பெங்களூர் ஐஐடி உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே பெருந்தொற்று காலத்தில், NIMHANS-ன் பேரிடர் மேலாண்மைக் குழு ஹெல்ப்லைன் எண் மூலம் நாடு முழுவதுமுள்ள மக்களின் மனநலம் மற்றும் சமூக உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய மத்திய அரசு தற்போது குழந்தைகளுக்காக `சம்வேத்னா' என்ற தொலை மனநல சேவையை வழங்கி வருகிறது. இந்தச் சேவையின் மூலம் பயம், மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.