Published:Updated:

கொரோனா 144 தடை உத்தரவு... சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளில் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வார்கள். 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன் அனைத்துப் போக்குவரத்துகளும் முடக்கப்படும்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழக அரசு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில், நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக்குப் பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9,424 பேர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் சுமார் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் பச்சை ஸ்டிக்கரை மாநகராட்சி நிர்வாகம் ஒட்டி வருகிறது. அந்த ஸ்டிக்கரில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் காலம், நபரின் பெயர், அவர்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி என அனைத்து தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

சென்னை ரங்கநாதன் தெரு
சென்னை ரங்கநாதன் தெரு
படங்கள்: சந்துரு செல்வம்

மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷிடம் பேசினோம்,

''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணிகளில் எவ்விதமான இடைஞ்சலும் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வார்கள். 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளர்கள் எவ்வித தடைகளுமின்றி துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி நிர்வாகத்தால் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 100 பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

இது அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட அதிகரிகாரிகள் மேற்பார்வையின் கீழ் செயல்படும். மேலும், தங்களது சொந்த வாகனங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக வரும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது அடையாள அட்டையைக் காவல்துறை அல்லது ராணுவத்தினரிடம் காண்பித்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் அனைத்து உணவகங்களும் மூடப்படும் சூழல் உருவாகும். இதனிடையே, மாநகராட்சி பணியாளர்களுக்கு உணவு வசதிகளில் எவ்வித தடையும் இன்றி கிடைப்பதற்காக அம்மா உணவகங்களில் இலவச உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பணியாளர்களின் வசதிக்காக, இரவு 9 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், பொது மக்கள் அன்றாட தேவைகளுக்காகப் பொருள்கள் வாங்கக் கூடிய மளிகைக் கடைகள் திறந்திருக்கும். கடைகளில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினருடன் மாநகராட்சி நிர்வாகத்தினரும் ஈடுபட உள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடும் இடங்களில் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல் துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், 24 மணி நேர சேவைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி நிர்வாகப் பணிகளைக் கண்காணிப்பதற்காகவும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யாரேனும் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட விரும்பினால் அவர்களை ஒருங்கமைப்பதற்காக தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், தொலைபேசி வாயிலாக அவர்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக ஐந்து மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், பிற அடிப்படை பிரச்னைகளை சரி செய்வதற்காக 10 பொறியாளர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது.

சென்னை சென்ட்ரல்
சென்னை சென்ட்ரல்

நோய் பரவலைத் தடுப்பதற்காக மாநகராட்சி முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின், தொடர்ச்சியாக குளோரின் தெளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில், அதிக தண்ணீர் கொள்ளளவு கொண்ட 500 டேங்கர் லாரிகள் பணியில் ஈடுபட உள்ளன. மேலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களுக்குத் தேவையான சுகாதார உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

`ஆன்லைன் கவுன்சிலிங்; ஒரேநாளில் 276 டாக்டர்கள் நியமனம்!' -பிளான் சி-யை கையிலெடுத்த கேரளா #corona

வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள 3,000 வீடுகளுக்கு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. இது, தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க உதவுவதோடு, அவர்கள் வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும். மேலும், கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வர நேர்ந்தால் அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கக் கூடும். இந்தப் பணியில் காவல் துறையினரோடு ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபட உள்ளனர்'' என்றார் அவர்.

கொரோனா ஸ்டிக்கர்
கொரோனா ஸ்டிக்கர்

இந்தநிலையில், ''வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இது குறித்து சுகாதார துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ''வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் அரசின் அறிவுரைகளை ஏற்காது வெளியே சுற்றித் திரிந்தால் அவர்களது பாஸ்போர்டை முடக்குவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்படும்'' என்றார்.

இந்நிலையில், காவல் நிலையம் வருவோர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் காவல்துறை கூட்டங்களை வரும் 31-ம் தேதி வரை நடத்தக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு