Published:Updated:

இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்காக 2.25 லட்சம் ரூபாய் சிறப்பு ஊசி... ஆனாலும்... என்ன நடந்தது?!

Corona Treatment
Corona Treatment ( pixabay.com )

2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் உடல்நிலை சீராகாத சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளி, இப்போது நம்முடன் இல்லை.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. விளைவு, பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக முதல்நிலை வீரர்களாகக் களத்தில் நின்றுகொண்டிருக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டுவருகிறார்கள். இவர்களில் சிலர் கோவிட்-19 வைரஸுக்கு தங்கள் உயிரையும் கொடுத்துவிட்டார்கள்.

காவல்துறையிலும் 500-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 12 நாள்கள் முழு ஊரடங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் வேளையில், பலரையும் அதிரவைத்திருக்கிறது சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளியின் மரணம்.

coronavirus
coronavirus

கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதில் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்த பாலமுரளிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. உடனே கொரோனா பரிசோதனை செய்துகொண்டது, மருத்துவமனைக்குச் சென்றது என கவனமாகவே இயங்கியிருக்கிறார். ஆனால், சிகிச்சைகள் எடுத்தும் பாலமுரளியின் உடல்நிலை சீராகவில்லை.

பாலமுரளியை மீட்பதற்காக விலையுயர்ந்த தடுப்பு ஊசிகள் போட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் தடுப்பு ஊசிகள் விலை உயர்ந்தவை என்பதால், பாலமுரளியின் குடும்பத்தினரால் அவற்றுக்குச் செலவழிக்க முடியவில்லை. தகவல் அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் 2.25 லட்ச ரூபாய் செலவில் அந்தத் தடுப்பு ஊசிகளை வாங்கித் தந்தார். அந்த மருந்தை செலுத்திய பிறகும் உடல்நிலை சீராகாத பாலமுரளி, தற்போது நம்முடன் இல்லை.

ஒருவரின் மரணித்த உடலுக்கு, சம்பந்தப்பட்டவரின் பாசிட்டிவ் பக்கங்களை உலகத்துக்கு உரக்கச் சொல்வது மிகச்சரியான இறுதி அஞ்சலியாக இருக்கும். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனிடம் பாலமுரளியைப் பற்றிப் பேசக் கேட்டோம்.

நாம் எல்லோரும் இப்போது அவரை எத்துணை கொண்டாடினாலும், அவருடைய குடும்பத்தினருக்கு இது தாங்க முடியாத இழப்புதான். அந்தக் குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பார்ப்பதற்கே மனம் பதறுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்
`கொரோனாவால் உயிரிழந்த நாட்டின் முதல் எம்.எல்.ஏ' - ஜெ.அன்பழகன் மறைவால் கலங்கும் உடன்பிறப்புகள்

``ரொம்ப நல்ல மனிதர். திறமையான ஆபீஸர். பொதுமக்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர். கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக மிகவும் மெனக்கெட்ட சின்ஸியர் போலீஸ். சென்னையின் பல இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு தந்தது, அது தொடர்பான கையேடு தந்தது என ஆக்ட்டிவ்வாக இருந்தவர். அவரைப் பற்றி இப்படி பாசிட்டிவ்வாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று மிகவும் முயன்றோம். தடுப்பூசிகள் போடப்பட்ட பின் அவர் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சை, எங்களின் நம்பிக்கை எல்லாவற்றையும் மீறி இது நடந்துவிட்டது.

பாலமுரளி உட்பட, காவல்துறையில் இருக்கிற, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற ஒருவரைக்கூட இழந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் தீர்மானமாக இருந்தோம். ஆனால், பாலமுரளியின் இழப்பு எங்களையெல்லாம் நிலைகுலையச் செய்துள்ளது'' என்று வருத்தப்பட்டவர், தொடர்ந்தார்.

கொரோனா தடுப்புப்பணியில் காவல்துறையினர்
கொரோனா தடுப்புப்பணியில் காவல்துறையினர்
`கொரோனாவால் உயிரிழந்த சென்னை இன்ஸ்பெக்டர்!' -முதல் மரணத்தால் அதிர்ச்சியில் தமிழகக் காவல்துறை

``பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். பையனுக்கு 16 வயதும், பெண்ணுக்கு 14 வயதும்தான் ஆகிறது. அவரின் மனைவி பி.ஏ கிராஜூவேட் என்பதால் அவருக்கு வேலை வழங்கப்படும்.

நாம் எல்லாரும் இப்போது அவரை எத்துணை கொண்டாடினாலும், அவர் குடும்பத்தினருக்கு இது தாங்க முடியாத இழப்பு. அந்தக் குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பார்ப்பதற்கே மனம் பதறுகிறது’’ என்கிறார் வருத்தத்துடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

அடுத்த கட்டுரைக்கு