Published:Updated:

`எனக்கு கொரோனா இருக்கா... இல்லையா?' -இருவேறு ஆய்வு முடிவுகளால் கலங்கும் சென்னைக் கர்ப்பிணி

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

சென்னையைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்றும் தனியார் பரிசோதனை ஆய்வகத்தில் நெகட்டிவ் என்றும் ரிப்போர்ட் வந்துள்ளது.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதாகும் கர்ப்பிணி. இவருக்கு வரும் 16-ம் தேதி டெலிவரி ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் பிரசவம் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டினர் அவரைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துவந்தனர். அதோடு பிரசவத்துக்காக தயார் நிலையிலும் இருந்துவந்தனர். இந்த நிலையில், மாதவரம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சென்றார். அப்போது, `உங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும்' என்று கூறிய மருத்துவர்கள், கர்ப்பிணிக்கு 2-ம் தேதி கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதுவரை இல்லாத புதிய உச்சம்! - தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
#NowAtVikatan
கர்ப்பிணி
கர்ப்பிணி
மாதிரி படம்

செக்அப் முடிந்து வீடு திரும்பிய கர்ப்பிணியை மாநகராட்சி அதிகாரிகள் செல்போனில் தொடர்புகொண்டனர். `உங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர வேண்டும். உங்கள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வரும்' என்று தகவல் கூறினர். அதனால் கர்ப்பிணியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சூழலில் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை முடிவை நம்பாமல் 5-ம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆய்வகத்துக்கு கர்ப்பிணி அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சில மணி நேரத்தில் முடிவும் தெரிவிக்கப்பட்டது. அதில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதற்குள் கர்ப்பிணியை மாநகராட்சி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர். தனியார் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என வந்ததும் கர்ப்பிணியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்தப் பரிசோதனை ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றனர்.

மருத்துவமனை
மருத்துவமனை
`அண்ணன் இறந்த பிறகு விபரீத முடிவெடுத்த தங்கை?' -சின்னத்திரை நடிகர், நடிகைக்கு நேர்ந்த சோகம் #Chennai

தனியார் பரிசோதனை ரிப்போர்ட்டை அங்குள்ள மருத்துவர்களிடம் கர்ப்பிணியின் குடும்பத்தினர் காண்பித்தனர். அதற்கு அங்குள்ள மருத்துவர்கள், `தனியார் ஆய்வகத்தின் முடிவு தவறாக இருக்கும். ஆனால், அரசு சார்பில் எடுக்கும் முடிவில் தவறு வர வாய்ப்பில்லை' என்று கூறினர். அதனால் கர்ப்பிணியின் குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அரசு மருத்துவர்கள், `நீங்கள் கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று விவரத்தைக் கூறுங்கள்' என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக் முகமது அலி தலைமையில் கர்ப்பிணியின் குடும்பத்தினர், ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குள்ள டீனிடம் கர்ப்பிணியின் கொரோனா பரிசோதனை முடிவை காண்பித்தனர். அப்போது அவரும், `தனியார் ஆய்வகத்தில்தான் தவறு நடந்திருக்கும்' என வாதாடினார். ஆனால், கர்ப்பிணியின் குடும்பத்தினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர்.

`மார்ச் 3-ல் மனைவி மரணம்; 2 மாதங்களாக 6 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை' - ஆன்லைன் புகாரில் அதிரடி
தனியார் ஆய்வக ரிப்போர்ட்
தனியார் ஆய்வக ரிப்போர்ட்

அதற்கு மருத்துவமனையில் உள்ளவர்கள், `இந்தக் கர்ப்பிணிக்கு எது நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. மேலும், நீங்கள் இனி அரசு மருத்துவமனையில் சேர முடியாது' என்று கூறி கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் முதல் இன்று வரை கர்ப்பிணிக்கான கொரோனா சிறப்பு வார்டில் புழல் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அதனால் அவருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, ``அரசு மருத்துவமனை சார்பில் கர்ப்பிணிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. அதனால், கர்ப்பிணி குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் கட்டணம் செலுத்தி கொரோனா பரிசோதனை செய்தனர். முடிவு வருவதற்குள் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், ஆம்புலன்ஸில் கர்ப்பிணியின் வீட்டுக்கு வந்து அந்த வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும்விதமாக நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.

புழல் ஷேக் முகமது அலி
புழல் ஷேக் முகமது அலி

பின்னர் கர்ப்பிணியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அரசு சார்பில் எடுக்கப்பட்ட அறிக்கையிலும் தனியார் ஆய்வக அறிக்கையிலும் மாறுப்பட்ட முடிவுகள் வந்துள்ளதால் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எனவே, கொரோனா பரிசோதனையில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நேராமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது" என்றார்.

இதில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணி கூறுகையில், `நான் வைட்டமின் சத்துகள் நிறைந்த உணவுகளையும் கபசுரக் குடிநீரையும் பருகிவருகிறேன். அதனால் நிச்சயம் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. தற்போதுள்ள பரிசோதனை முடிவால் எனக்கு கொரோனா இருக்கா இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது' என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``கர்ப்பிணிக்கு 2 தடவை பரிசோதனை செய்த பிறகுதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் ஆய்வக ரிப்போர்ட்டில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக கர்ப்பிணி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே கர்ப்பிணி ரிப்போர்ட் குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு