Election bannerElection banner
Published:Updated:

``அவரை எப்படியாவது காப்பாத்திட்டா போதும்!'' - ரெம்டெசிவிருக்காகக் காத்திருக்கும் பூங்கொடி

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் காத்திருப்பவர்கள்
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் காத்திருப்பவர்கள்

வரிசையில் காத்துக்கிடக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் பசி, தூக்கம், காத்திருப்பின் வலி என எல்லாம் மறைந்து, `மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்' என்கிற பரிதவிப்பே மேலிடுகிறது.

``நான் சிதம்பரத்துல இருந்து வந்துருக்கேன். அங்கே உள்ள ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல என் வீட்டுக்காருக்கு ட்ரீட்மென்ட் போய்க்கிட்டிருக்கு. சீரியஸ் ஆகாம காப்பத்தணும்னா கண்டிப்பா `ரெம்டெசிவிர்' மருந்து வேணும்னு சொல்லிட்டாங்க. அங்கே பல இடங்கள்ல தேடியும் இந்த மருந்து கிடைக்கலை. என் அம்மாவும் அப்பாவும் வயசானவங்க... அவங்கதான் என் குழந்தையைப் பார்த்துக்கிறாங்க. சென்னையில வந்து எங்களுக்காக மருந்து வாங்கிட்டு வர்ற அளவுக்கு வேற யாரும் இல்லை. அதனால நானே கிளம்பி வந்துட்டேன். நான் சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு... இங்கேயே காத்துகிட்டிருக்கேன். ஆனா, இன்னும் மருந்து கிடைக்கலை. இன்னைக்காவது கிடைச்சுரும்னு நம்புறேன்" - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் ஒருவராக வாடிய முகத்துடன் நின்றவாறு ஒடுங்கிய குரலில் பூங்கொடி பேசப் பேச, நமக்கு அனிச்சையாகக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

பூங்கொடி
பூங்கொடி

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் ஆக்டெம்ரா மருந்துகள் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து பல இடங்களில் இந்த மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற கொடுமை அரங்கேறியது. இதனால் இந்த மருந்து தேவைப்படும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்துதான், `தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து இல்லையெனில், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அரசிடம் பெற்றுக்கொள்ளலாம்' என்று தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்து, கடந்த திங்கள் கிழமையிலிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இதற்கான விற்பனையையும் தொடங்கியது.

``தேவையான அளவு மட்டுமே மருந்து வழங்கப்படும் ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ஒரு குப்பியின் விலை 1,545 ரூபாய். இதை வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களில் யாராவது ஒருவர் நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் வாங்குபவரின் ஆதார் அட்டை, மருந்துக்கான மருத்துவரின் பரிந்துரை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று, சி.டி ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் வர வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டது.

ரெம்டெசிவிருக்காக காத்திருப்பவர்கள்...
ரெம்டெசிவிருக்காக காத்திருப்பவர்கள்...

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் மருந்துக்காகக் குவிந்த நிலையில் ஒருநாளைக்கு 150 டோக்கன்கள் மட்டுமே என்று கைவிரித்தனர் அதிகாரிகள். அதுமட்டுமல்ல, அத்தனை பேருக்கும் ஒரே கவுன்டரில் மருந்து வழங்கப்பட்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. `கொரோனாவால பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாத்துறதுக்கு மருந்து வாங்க வந்தா... திரும்பிப் போகும்போது கொரோனாவோடுதான் போகணும் போலயே...' என்று பலரும் குமுறத் தொடங்கினர். ஆனாலும் மருந்தின் அவசரத் தேவை அவர்களை வரிசையை விட்டு நகர விடாமல் வைத்தது. இதற்கிடையில், டோக்கன் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கூட்ட நெரிசல் அதிகமானதையடுத்து, நேற்று (29.4.2021) இந்த மருந்து விற்பனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலிருந்து அதற்கு அருகிலேயே உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போதைய சூழலை அறிய அங்கு நேரில் சென்றோம்... அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்துக்கிடந்தனர் மக்கள். மகனை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் அப்பா, அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் மகன்... கணவனுக்காகக் கால்கடுக்க நிற்கும் மனைவி, மனைவிக்காகக் காத்திருக்கும் கணவன், நண்பனுக்காகக் காத்திருக்கும் நண்பன் என வரிசையில் காத்துக்கிடக்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் பசி, தூக்கம், காத்திருப்பின் வலி என எல்லாம் மறைந்து, `மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்' என்கிற பரிதவிப்பே மேலிடுகிறது.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

அப்படியானவர்களில் ஒருவர்தான் பூங்கொடி, ``அவர எப்படியாவது காப்பாத்திட்டா போதும் சார். என் மகனுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்'' என்று கண்ணீர் சிந்துபவரைத் தேற்றுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. உடனே மருந்து வாங்கிக்கொண்டு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் இங்கே தங்குவதற்கான எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வந்திருக்கிறார் பூங்கொடி. இரவு முழுக்கவே அந்த மருத்துவமனை ஒட்டியுள்ள பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்து விடிந்ததும் வரிசையில் நிற்கும் அவருடைய மனநிலையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

``பக்கத்துல இருக்கிறவங்க ஹெல்ப் பண்றாங்க. எனக்கு பின்னாடி நிக்கிற தம்பி சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்தார். ஒரு இட்லிதான் சப்பிட முடிஞ்சது. சாப்டுறதுக்கெல்லாம் மனசே இல்ல சார்... என் வீட்டுக்காரர் முகமும் என் பிள்ளையோட முகமும் வந்து வந்து போகுது. அந்த உணர்வை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை, மருந்தை வாங்கிகிட்டு எப்படா ஊர் போய்ச் சேருவோம்னு இருக்கு" என்றபடி வரிசையிலிருந்து கொஞ்சம் முன்னே நகர்கிறார் பூங்கொடி.

காத்திருப்பவர்கள்
காத்திருப்பவர்கள்

அங்கே வரிசையில் நின்றவர்களில் பூங்கொடியைப் போல பலபேர் இருந்தார்கள். திருவாரூரிலிருந்தும், கோயம்புத்தூரிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் வந்து சாப்பிடக்கூட செல்ல முடியாமல் இரண்டு நாள்களாக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். ரெம்டெசிவிர் மருந்தானது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத்தான் இந்த அவதி. அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார்கள் எனக் கேட்கலாம். இதில் பலர் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்றவர்கள்.

இந்த மருந்து விற்பனையைத் தொடங்கும்போது, இது பல்வேறு மாவட்டங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது. இப்படியான இக்கட்டான சூழலில் தாமதிக்காமல் எல்லா மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்தால் பூங்கொடி போன்றவர்கள் ஒத்தையில் வந்து இப்படி வெளியூர்களிலிருந்து நாள் கணக்காக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

ரெம்டெசிவிருக்காக காத்திருக்கும் மக்கள்...
ரெம்டெசிவிருக்காக காத்திருக்கும் மக்கள்...
சென்னை: ரெம்டெசிவிர் விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு... வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகக் கூடக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு மருந்துக்காக இப்படி மக்களை அலைக்கழிப்பதும் ஒரே இடத்தில் கூடச் செய்வதும் எந்த வகையிலும் சரியான நடவடிக்கை கிடையாது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு