Published:Updated:

` பள்ளி, கல்லூரி, மால் இல்லை; மதுக்கடைகள் உண்டு!' - புதுவை ’கொரோனா’ அப்டேட்ஸ்

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நம் மாநிலத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. பிரான்ஸ், மலேசியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலிருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப் பகுதிகள், பேருந்து நிலையம், விமானம் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் நிரந்தர மருத்துவக் குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளை வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு நடைபெறும் மாணவர்களுக்குப் பொருந்தாது. வணிக வளாகங்கள், மால், உடற்பயிற்சிக் கூடங்கள், சண்டே மார்க்கெட் போன்றவற்றையும் வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தக்கூடாது. அதேபோல திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். விடுறையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பொது இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு வருவாய்த்துறை மூலம் ரூபாய் 11 கோடியும், மருத்துவத்துறை மூலம் ரூபாய் 7.5 கோடியும் என மொத்தம் 17.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்து ஆலோசித்து இன்னும் 2 நாள்களில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு