Published:Updated:

``சென்னையில் கொரோனா பரவ 2 காரணங்கள்... 4 சிஸ்டம் சிகிச்சை!'' - விளக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம்

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

"கொரோனா டெஸ்டிங் நிறைய பேர்களுக்கு எடுக்கிறார்கள். அவர்களில், பாசிட்டிவ் அறிகுறி இருப்பவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. அடுத்த சில நாள்களுக்கும் அதிகமாவதைப்போலதான் தெரியும்."

சென்னை தலைமைச் செயலகத்தில் 6,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 3,000 பேர் தினமும் பணிக்கு வந்து போகிறார்கள். அவர்களில் சுமார் 57 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ்ஸும் ஒருவர். தலைமைச் செயலக ஊழியர்களில் அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பி.ஏ-க்கள், தனிப்பட்ட உதவியாளர்கள்... இவர்கள்தாம் முதலில் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்கள் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்-களின் அறைகளுக்கு வேலையின் நிமித்தமாகப் போகும்போது, உள்ளே இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவுகிறது. அரசு செயலாளர்கள் லெவலில் ஐந்து பேர் இந்த வகையில், வீட்டுத் தனிமையில் உள்ளனர். அவர்கள் தொடர்புடைய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அதையடுத்து, வருமுன் காப்போம் அடிப்படையில் ஐந்து ஐ.ஏ.எஸ்-களையும் அவரவர் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி சொல்லிவிட்டாராம் தலைமைச் செயலாளர் சண்முகம். இப்போதெல்லாம், சண்முகம் படு உஷாராக இருக்கிறார். ஏதாவது முக்கிய ஃபைல்களைத் தனது உதவியாளர்களிடம் தராமல், அவரே கையில் எடுத்துப்போய் சக அதிகாரிகளிடம் கொடுத்து வருகிறாராம். வீடு, ஆபீஸ் தவிர மற்ற இடங்களில் உதவியாளர்கள் போகக் கூடாது. மீறி போனால், அலுவலகம் வர வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். தமிழகத்தின் நம்பர் ஒன் அதிகாரியான அவரை பிஸியான பணிகளுக்கு இடையே சந்தித்தோம்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?

கொரோனாவை ஒழிக்கவே முடியாதா? இனி வரும் காலங்களில் அதனுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டுமா?

வாழப்பழகுவது என்று சொல்வதைவிட, அதை எப்படி மக்கள் இனி டீல் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டிவரும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை 100% ஒழிக்க முடியாது. அதைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோய் தொற்று பரவல் இருக்கும். இது உச்சத்துக்குப் போகாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். தமிழக அரசைப் பொறுத்தவரையில், அனைத்து வசதி, வாய்ப்புகளையும் போர்கால அடிப்படையில் பயன்படுத்தி மிகவேகமாகத் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலே, கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம். தங்களைத்தானே அவர்கள் தற்காத்து கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே? டேஞ்சர் ஜோனை நோக்கி விரைவாகப் போயிக்கொண்டிருக்கிறதே?

நேற்றுகூட, சென்னையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டல ரீதியிலான களப் பணியாளர்கள் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அந்தக் குழுக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது உள்ளதைவிட கூடுதலாக ஸ்கிரீனிங் சென்டர்கள், அட்மிஷன் கவுன்டர்கள் என்று அமைக்கச் சொல்லியிருக்கிறோம். தற்போது சென்னையில் தினமும் 100 ஃபீவர் கேம்ப்ஸ் (முகாம்கள்) நடத்தப்படுகின்றன. அதை, 200 முகாம்களாக அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தரப்பில் 149 சென்டர்கள் இருக்கின்றன. 19 டிஸ்பன்ஸரிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் போர்கால அடிப்படையில் மருத்துவ உதவிகள் செய்யச் சொல்லியிருக்கிறோம்.

கொரோனா தொற்று என்பது வீட்டில் ஒருவருக்கு வந்தால், அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுகிறது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் அறிகுறி இல்லாதவர்கள் இரு தரப்பினரும் வெளியிடங்களில் சுதந்தரமாக நடமாகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் தொற்று அதிகமாகிறது. இதைத் தடுத்தாலே, நோய் பரவலை நிச்சியமாகக் கட்டுப்படுத்தலாம். இந்த இரண்டு விஷயங்களை ஸ்பெஷலாக கவனித்து நடவடிக்கை எடுக்கும்படி சொல்லியிருக்கிறோம். அதேபோல, கொரோனா டெஸ்டிங் நிறைய பேர்களுக்கு எடுக்கிறார்கள். அவர்களில், பாஸிட்டிவ் அறிகுறி இருப்பவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. அடுத்த சில நாள்களுக்கும் அதிகமாவதைப்போல தெரியும். ஆனால், இப்போதைய போர்கால நடவடிக்கைகளில் அவை படிப்படியாகக் குறைந்துவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

ரூரல் பகுதிகளில் நன்றாக ஒத்துழைக்கிறார்கள். அங்கெல்லாம் விஜிலென்ஸ் கமிட்டி போட்டு யாராவது புதியவர்கள் வந்தால், முதலில் கொரோனா டெஸ்ட் செய்யச் சொல்லுகிறார்கள். மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். ஒரு வாரம் தனிமைப்படுத்தல் செய்கிறார்கள். இந்த முறை நல்ல பலனை தந்திருக்கிறது. அதனால்தான், சுமார் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. அந்த முறையை சென்னையிலும் ஏற்படுத்த சொல்லியிருக்கிறோம். தெருவுக்கு தெரு விஜிலென்ஸ் கமிட்டி வந்தால்தான், நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்களே அவரவர் வீட்டிலும், சுற்றுப்புறங்களில் போலீஸும் வேலையைச் செய்ய வேண்டும்.

65 வயதைக் கடந்தவர்கள், குழந்தைகள், சர்க்கரை/பிரஷர்/கேன்சர் போன்ற நோய் உள்ளவர்கள் வெளியில் நடமாட வேண்டாம். ஒருவேளை நோய் அறிகுறி லேசாகத் தெரிந்தால், அவர்களை ஏழு நாள்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அறிகுறிகள் அதிகமாகத் தெரிந்தால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டும். ஒருசிலருக்கு நோய்த் தொற்று அதிகமாக இருப்பதே கடைசியாகத்தான் தெரியும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருசில மணி நேரங்களில் இறந்துவிடுகிறார்கள். எனவே, வீடுகளில் ஆக்ஸிஜன் லெவலைக் கண்டறியும் வகையில் கை விரலில் பொருத்தும் கருவியை வாங்கி வைத்திருப்பது நல்லது.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

நோய் பரவலைத் தடுக்க புதிய முறை ஏதாவது பயன்படுத்துகிறீர்களா?

ஒருவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று தெரிந்தால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பரிசோதனை நடத்த கான்டாக்ட் டிரேஸிங் முறையைக் கையாள்கிறோம். அவர்கள் எங்கிருந்து கொரோனா தொற்றை வாங்கினார்கள்? தொற்றுக்கு பிறகு யார் யாருக்குத் தந்தார்கள்? என்பதை அறிந்து அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துவதுதான் நல்லது. ஆனால், தொற்று உள்ளவர்கள் ஏனோ விவரங்களைச் சரிவர சொல்வதில்லை. இப்போது டெக்னாலஜி உதவியுடன் அதைக் கண்டறியும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகத் தெரிகிறது. யார் பாசிட்டிவ் அறிகுறி உள்ளவர்கள்? யார் அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்றுடன் நடமாடுகிறார்கள் என்றே தெரியவில்லையே? இவர்களால் சமூக பரவல் அதிகமாகிவிடாதா? கேரளா மாநிலம் எர்ணாகுளம் ரூரல் ஏரியாவில் தமிழ் ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திகேயன் அவர் ஏரியாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 5,000 பேர்களின் செல்போன் எண்களை வாங்கி அதை வைத்தே அவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து வெளியே நடமாட விடாமல் தடுத்தார். அதைப்போல இங்கேயும் செய்யலாமே?

இங்கேயும் அப்படிக் கண்காணிக்க உள்துறை செயலாளர் மேற்பார்வையில் டெக்னிக்கல் டீம் செயல்படுகிறது. அதன் உதவியுடன் 13 பேர்களைப் பிடித்தோம். கொரோனா தொற்று பாசிட்டிவ் அறிகுறி இருந்த 13 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தி இருக்க அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், அவர்கள் வெளியில் நடமாட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் வெளியில் சுற்றித்திரிந்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்கள். வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நாலு அல்லது ஐந்து மண்டலங்களில்தான் கொரோனா இறப்புகள் அதிகம் நடக்கின்றன. அங்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சென்னையில் மிக அடர்த்தியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பாதிப்பு தெரிகிறது. மொத்தம் 29,000 தெருக்கள் உள்ளன. அவற்றில் 4,400 தெருக்களில் நோய்த்தொற்று பிரச்னை. குறிப்பாக, 1,500 தெருக்களில்தான் கொரோனா தொற்று பிரச்னை அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று ஜுரோ லெவலுக்கு வந்த 800 தெருக்கள் இதுவரை ஃபிரீ செய்யப்பட்டுள்ளன. நேற்றுகூட, நான் ஹெல்த் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்தேன். தற்போது பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் மேலும் 750 பேர்களை (டாக்டர்கள், நர்ஸ், மருத்துவப் பணியாளர்கள்) களப்பணியில் இறக்கிவிட்டிருக்கிறோம். சமூக சேவை நிறுவனங்களை அழைத்து அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யச் சொல்லியிருக்கிறோம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்... இந்த விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து மேலும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உங்களிடம் போதுமான பெட்டுகள், மருந்துகள், டெஸ்டிங் கருவிகள் இருக்கின்றனவா?

நிச்சயமாக உள்ளன. ஆனாலும், அரசு இயந்திரங்களுக்கு ஒரு வரையறை உண்டு. அந்த லிமிட்டுக்குள்தான் நன்றாகச் செயல்பட முடியும். அந்த வரையறைக்குள் நோய்த் தொற்று சிகிச்சை விஷயங்கள் இருக்கும் வகையில் ஏராளமான உஷார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். திரும்பத் திரும்ப நான் சொல்வது... மக்கள் ஒத்துழைப்பால்தான் உள்ளது. அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை அட்வைஸ்களை ஒவ்வொரு தனிப்பட்ட மக்களுக்கு என்று அவர்கள் கருத வேண்டும். மற்றவர்களுக்குத்தான் நமக்கில்லை என்று நினைக்கவே கூடாது. அவர்கள் அரசு அட்வைஸ்களை முறையாகப் பின்பற்றினால், எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

மத்திய அரசு வழிகாட்டுதல்படி, நான்கு சிஸ்டங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, 800 கேஸ்கள் ரிப்போர்ட் ஆனால், அதில் சீரியஸ் கன்டிஷனில் உள்ள 10% பேரை கோவிட் மருத்துவமனை என்கிற பேனரில் (சிஸ்டம் 1) சேர்க்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் (சிஸ்டம் 2) வருகிறவர்கள் 20% பேரை ஹெல்த் சென்டர்களில் சேர்க்கிறார்கள். லேசான நோய் அறிகுறிகளுடன் (சிஸ்டம் 3) வருகிற 50% பேரை மைல்டு கேர் சென்டர்களில் சேர்க்கிறார்கள். 20% பேரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் (சிஸ்டம் 4) வைக்கிறார்கள்.

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

சிஸ்டம் 1

அரசு மருத்துவமனைகளில் மொத்த பெட்டுகள்: 4,944. தற்போது பயன்பாட்டில் இருப்பவை: 1,519

தனியார் மருத்துவமனைகளில் மொத்த பெட்டுகள்: 4,480. தற்போது பயன்பாட்டில் இருப்பவை: 762

சிஸ்டம் 2:

அரசு ஹெல்த் சென்டர்களில் மொத்த பெட்டுகள்: 2,960. தற்போது பயன்பாட்டில் இருப்பவை: 245

சிஸ்டம் 3:

மைல்டு கேர் சென்டர்களில் மொத்த பெட்டுகள்: 5,370. தற்போது பயன்பாட்டில் இருப்பவை: 1,664

சிஸ்டம் 4:

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்: 2137 பேர்கள்.

வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள்... இவற்றை பூர்வீகமாகக் கொண்டவர்கள் சென்னையில் பல ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவரவர் பூர்வீகங்களுக்குத் திரும்பிப்போக விரும்புவதாகச் சொல்கிறார்கள். ஏன் அவர்களை போகச் சொல்லக் கூடாது? அவர்கள் போனால், எஞ்சியிருப்பவர்களுக்கு இன்னும் சிறப்பாக மருத்துவ உதவி செய்யலாமே?

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

கோயம்பேட்டில் இருந்து வெளியூர் சென்றவர்களால் அங்கெல்லாம் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது சென்னை தவிர, வெளி மாவட்டங்கள் பலவற்றில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. இவர்கள் போனால்... என்ன ஆவது? அதேபோல, வெளிமாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்கள 3,46,000 பேர்களை இதுவரை அரசு செலவில் திருப்பி அனுப்பியிருக்கிறோம். 167 கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கிறது. அது நியாயமானது. ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வந்து பல வருடங்களாகப் பல்வேறு தொழில்களில் செட்டில் ஆகிவிட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நல்ல வசதி வாய்ப்புடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கொரோனா நேரத்தில் திடீரென அரசு செலவில் சொந்தம், பந்தங்களை பார்க்கப்போக பூர்வீக வெளிமாநில ஊர்களுக்கு முயன்றால்... இதை எப்படி அனுமதிக்க முடியும்?

அடுத்த கட்டுரைக்கு