Published:Updated:

`சமூகப் பரவல் என்றால் இப்படி நின்றபடி பேச முடியுமா?' -சேலத்தில் கேள்வியெழுப்பிய முதல்வர் பழனிசாமி

ஈரடுக்கு மேம்பாலம்
ஈரடுக்கு மேம்பாலம்

``புற்றுநோய், சர்க்கரைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களே இறந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு" என்கிறார் முதல்வர் பழனிசாமி.

``கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை மறைக்கவில்லை, மறைக்கவும் முடியாது. இதனால் அரசுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது?'' எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரிப்பன் வெட்டும் முதல்வர
ரிப்பன் வெட்டும் முதல்வர

தமிழகத்திலேயே நீளமான சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இந்தப் பாலத்திற்கு கடந்த 14.1.2016 அன்று அடிக்கல் நாட்டினார். இப்பாலம், ஏ.வி.ஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையும், குரங்குச் சாவடி முதல் 5 ரோடு, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, அண்ணா பூங்கா வரையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மேம்பாலத்தின் மதிப்பு 441 கோடி ரூபாய் ஆகும்.

இப்பாலத்தின் ஒரு பகுதியான ஏ.வி.ஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரை 2.6 கி.மீட்டர் மேம்பாலத்தை கடந்த 7.6.2019 அன்று திறந்துவைத்தார் முதல்வர். இன்று, குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான 5 கி.மீட்டர் மேம்பாலத்தைச் திறந்துவைத்தார். இதற்காக, குரங்குச்சாவடியில் விழா மேடை அமைக்கப்பட்டது.

பிறகு, ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரையும் ஏ.வி.ஆர் மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரையும் சூட்டினார்.

கொடி அசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர்
கொடி அசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர்

மேம்பாலத்தை திறந்துவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சேலத்தில் போக்குவரத்து நெரிசலைப் போக்கவும் விபத்துகளைக் குறைக்கவும் திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர், செவ்வாய்ப்பேட்டை எனப் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய திட்டங்கள் கண்முன் காட்சியளிக்கின்றன.

கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை மறைக்கவில்லை, மறைக்கவும் முடியாது. மறைப்பதால் அரசுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நபருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல, இதுவரை 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 326 பேர் மட்டுமே மரணம் அடைந்திருக்கிறார்கள்.

அதிலும் புற்றுநோய், சர்க்கரைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களே இறந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. சேலத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 2,000 படுக்கை வசதிகளும் 5,000 படுக்கைகளும் தயார்நிலையில் உள்ளன. இந்தியாவில் அதிக வெண்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளன.

பேருந்து
பேருந்து

கொரோனா வைரஸ் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. மாறி இருந்தால் நாம் இங்கு நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டோம். சென்னை நெரிசலான பகுதியாக இருப்பதால் ஒருவருக்கு கொரோனா வந்தால் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புப் பணியினாலும், அவர்களின் திறமையினாலும் நம்மை காப்பாற்றிவருகிறார்கள். மருத்துவர்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு