Published:Updated:

`1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள்; அறிகுறி இல்லாதவருக்கும் தொற்று!’ - பிரஸ்மீட்டில் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``பெரிய நாடுகளிடமிருந்து பெற்ற பாடத்தைக்கொண்டு செயல்படுவோம். முடிந்தவரை மக்கள் வீட்டிலே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அத்தியாவசியத் தேவைகள் முடிந்தவரை எளிதாகக் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா நிலவரம் தொடர்பாகப் பேசி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் வீரியம் படிப்படியாக அதிகரித்துவருவதை நாம் பார்க்கிறோம்.

வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு டோர் டெலிவரி செய்கிறோம். சென்னையில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாக நடமாடும் காய்கறிக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்
முதல்வர் பழனிசாமி

தமிழகத்தைப் பொறுத்தவரை வைரஸைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் 17 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. மேலும் 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அந்த 21 இடங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். அனைத்தும் செயல்படத் தொடங்கினால் பரிசோதனை இன்னும் துரிதமாக நடக்கும்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
Representational image

மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு இருக்கின்றன. மேலும் 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு இன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று துரிதப் பரிசோதனைக் கருவிகள் என்று சொல்லப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனையின் வேகம் அதிகரிக்கும். வரும் 9 -ம் தேதி அந்தக் கருவிகள் கிடைக்கும் . சீனாவிலிருந்து கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. 10 -ம் தேதி முதல் பரிசோதனைகள் தொடங்கும். முப்பது நிமிடங்களில் இந்தப் பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும்.

தமிழத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளோம். வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு அந்த மாநில முதல்வர்களிடம் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் கிடைக்க பேசி வருகிறோம். அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.500 கோடி கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து நிதி அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஊரடங்கு
ஊரடங்கு

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்று கேட்கறீர்கள்... கொரோனாவைத் தடுப்பதில் முக்கியப் பங்கு மக்களுக்கு இருக்கிறது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தொற்று நோய் மிக வேகமாகப் பரவுகிறது. அறிகுறி இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலே தொற்று ஏற்படுகிறது. அப்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். காவல்துறையினர் கஷ்டத்தையும் மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான். இந்தக் கடுமையான நேரத்திலும் வெயிலில் அவர்கள் பணியாற்றுவதைப் பார்க்கிறோம்.

அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் அதைப் புரிந்து நடக்க வேண்டும். மக்களைத் துன்புறுத்துவது எங்கள் நோக்கம் கிடையாது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மக்கள்தான். வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு டோர் டெலிவரி செய்கிறோம். சென்னையில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும்விதமாக நடமாடும் காய்கறிக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். சில இடங்களில் இவை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. படிப்படியாக மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள் என்று எங்களுக்குக் கிடைத்த தரவுகள்படி ஆலோசனை நடத்தியுள்ளோம். ஒருவேளை அந்தப் பட்டியலில் இல்லாத யாராவது மாநாட்டுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று திரும்பி இருந்தால் அந்தத் தகவலை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். நோய் என்பது இயல்பானது. அதை அவர்கள் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். இது அவர்கள் குடும்ப நலன் சார்ந்ததும் கூட. குடும்பத்துக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

பெரிய நாடுகளிடமிருந்து பெற்ற பாடத்தைக் கொண்டு செயல்படுவோம். முடிந்தவரை மக்கள் வீட்டிலே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அத்தியாவசியத் தேவைகள் முடிந்தவரை எளிதாகக் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு