Published:Updated:

பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; நீலகிரி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டிய முதல்வர்!

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு முதல்வர் பாராட்டு
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு முதல்வர் பாராட்டு

``100 சதவிகித இலக்கை எட்டுவதற்கு அனைவரது கூட்டு முயற்சியே காரணம். நீலகிரியில் உள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை அடுத்த இலக்காக முன்னெடுத்து அதையும் விரைவில் எட்டுவோம்"

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் தீவிர முன்னெடுப்பாலும், அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சியாலும் நீலகிரியில் முன்மாதிரியான சிறப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரது கூட்டு முயற்சியாலும் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையை இந்த மாவட்டத்தில் மிக வெற்றிகரமாக எதிர்கொண்டது அரசு இயந்திரம். தொடர்ந்து கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் வகையில் நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக இ-ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.

பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி
பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; இலக்கை எட்டிய முதல் மாவட்டம்!

கொரோனா முதல் அலையைப் போலல்லாமல் தற்போதைய இரண்டாவது அலை நீலகிரி பழங்குடிகளையும் வெகுவாக பாதித்தது. எண்ணிக்கை அளவில் மிகக்குறைவாகவே வாழ்த்துவரும் 6 வகையான பழங்குடியின மக்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி அவசியம் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய அனைத்து பழங்குடிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கியது.

சுகாதாரத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என அரசின் அனைத்துத் துறையினரும் வனத்திலும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தடுப்பூசியைக் கண்டாலே காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் பழங்குடிகளிடம் படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வந்தனர்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு முதல்வர் பாராட்டு
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு முதல்வர் பாராட்டு
காட்டூர்: 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி... நிகழ்ந்தது எப்படி?

இந்த நிலையில், ``நேற்று முன்தினத்துடன் நீலகிரியில் வாழும் 21,800 பழங்குடிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் 100 சதவிகித இலக்கை அடைந்த முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்" என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த முயற்சியை முன்னெடுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சியரை நேரில் வரவழைத்துப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

முதல்வரிடம் பாராட்டைப் பெற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விகடனின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் பேசினோம். ``100 சதவிகித இலக்கை எட்டுவதற்கு அனைவரது கூட்டு முயற்சியே காரணம். நீலகிரியில் உள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை அடுத்த இலக்காக முன்னெடுத்து அதையும் விரைவில் எட்டுவோம்" என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு