Published:Updated:

`இரண்டாவது இடம் டு ஒற்றை இலக்கம்!' -கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீளும் கோவை

கோவை
கோவை

சென்னைக்கு அடுத்து அதிகப்படியாக பாதிக்கப்பட்டிருந்த கோவை, தற்போது கொரோனாவிலிருந்து வேகமாக மீண்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது கோவைதான். `24 மணிநேரத்தில் 22 பேர் பாதிப்பு, மூன்று நாள்களில் 59 பேருக்கு கொரோனா வைரஸ்' என்று கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புவரை கோவை தொடர்பான செய்திகள் அனைத்தும் பதைபதைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

கோவை
கோவை

ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக கோவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருந்தது. அதேநேரத்தில், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் வேகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அதாவது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்க, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதுமான நிலை நீடித்துவந்தது.

முக்கியமாக, கடந்த 7 நாள்களாக கோவையில் கொரோனாவால் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. இதனால் மாநிலத்திலேயே கொரோனா நோயாளிகள் அதிகம் குணமடைந்த பகுதி என்ற பெருமையைப் பெற்றது கோவை. கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 16 பேர் நேற்று வீடு திரும்பினர்.

கோவை
கோவை

அவர்களில் 12 பேர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் கோவையில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம் 9 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை தரவுகள்படி, தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஆனால், சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டிருந்த கோவை சிவப்பு மண்டலத்தில் இருந்து, ஆரஞ்சு மண்டலத்துக்குச் சென்றுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ``மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மிகப்பெரிய படை அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது.

கோவை
கோவை

நோயாளிகளும் நன்கு ஒத்துழைப்பு வழங்கினர். கொரோனா பாதித்தவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுத்து வருகிறோம். தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் ஒரு வாரத்துக்குள் குணமடைந்துவிடுவார்கள். விரைவில் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக மாறும் என நம்புகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு