Published:Updated:

`அரசு மருத்துவமனை பணியாளரைத் தொடர்ந்து நர்ஸிங் மாணவி' - கோவைக்கு அதிர்ச்சி கொடுத்த கொரோனா பாதிப்பு

கோவை
கோவை

கோவை அரசு மருத்துவமனை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, தமிழகத்தில் கடந்த மாதம் பரவிய தொற்றைவிட, தற்போது பரவும் வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோவை
கோவை

கோவையில், கடந்த சில வாரங்களாக வெளியூர்களிலிருந்து வருகின்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் செயற்கைக் கால் பொருத்தும் பிரிவில், 27 வயதான ஆண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் மனைவியின் வளைகாப்புக்காக விழுப்புரம் சென்றுள்ளார். ஊரடங்கு உத்தரவால் கோவைக்குத் திரும்ப முடியவில்லை. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு பணிக்குத் திரும்பிய அவரை, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை
கோவை

இதையடுத்து, வீட்டில் தனிமையில் இருந்த அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால், அவராகவே முன்வந்து பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதித்த இளைஞர் பயணித்த விமானம்; சென்னை ரிட்டர்ன் ட்ரிப்! - கோவை சர்ச்சை

இதைத் தொடர்ந்து, அவர் பணி செய்த இடம் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, திருப்பூரிலிருந்து வந்த, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 19 வயதான நர்ஸிங் மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை
கோவை

மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கோவைக்குத் திரும்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர், சென்னை மயிலாப்பூரிலிருந்து 36 வயதுப் பெண், டெல்லியிலிருந்து திரும்பிய 42 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு