Published:Updated:

கொரோனா: தமிழத்தில் செயல்படும் ஆய்வகங்கள் போதுமா? மருத்துவர்கள் கருத்தும் அரசுத் தரப்பு பதிலும்

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தமிழகத்தில் இந்த நோயைக் கண்டறிவதற்கான, ஆய்வகங்கள் குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

சீனா - வுஹான் நகரம்
சீனா - வுஹான் நகரம்
AP

இதில், இந்தியாவில் 198-க்கும் பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திலிருந்து இருவர். தமிழகத்தில், இதுவரை 98 பேர் கண்காணிப்பில் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறையின் செய்திகள் கூறுகின்றன. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவந்தாலும், அவை போதுமானது இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள். குறிப்பாக, தமிழகத்தில் இந்த நோயைக் கண்டறிவதற்கான, ஆய்வகங்கள் குறைவாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை, திருவாரூர், திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய நான்கு இடங்களில் கொரோனா ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் தமிழக அரசு உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நான்கு ஆய்வகங்களிலுமே, சரியான முறையில் பரிசோதனை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் மருத்துவர்கள்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

இதுகுறித்துப் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், ``தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் போதுமானதாக இல்லை. சளி, காய்ச்சல் என்று வருபவர்களுக்குப் பரிசோதனை குறைவாக நடக்கிறது. தற்போது உள்ள நான்கு ஆய்வகங்களில், ஓர் ஆய்வகத்தில் அதிகபட்சமாக 90 பேருக்கு மட்டுமே சோதனை செய்ய முடியும். ஆனால், இதுவரை தமிழகத்தில் 100 பேருக்குக்கூட இந்தப் பரிசோதனைகள் நடக்கவில்லை. இந்த விவகாரத்தில், உலகத் தலைவர்கள் பலரும், இந்தியாவில் போதுமான ஆய்வகங்கள் இல்லை என்பதால், நோய் கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனமோ, `டெஸ்ட் டெஸ்ட் டெஸ்ட்' என்று, பல நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில்அந்தளவிலான பரிசோதனைகள் நடைபெறவில்லை.

குறிப்பாக , இத்தாலியிலிருந்து அறிகுறியுடன் வந்தவரை, இந்திய அரசாங்கம் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டது. இந்தியாவில், இதுவரை 5,000 பேர் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விவரங்களைக் கூடுதலாக்கி, 10,000-க்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்ததாக ஒரு மாயத் தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்றே, தமிழக அரசும் செயல்படுகிறது. தமிழகத்தில் இருக்கின்ற ஆய்வகங்களில், சுமார் 5,000 பேர் வரை பரிசோதனை செய்யலாம். ஆனால், அப்படியான பரிசோதனை நடைபெறவில்லை.

மருத்துவமனையில்...
மருத்துவமனையில்...

குறிப்பாக, அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதாலேயே, இப்படியான நிலை தொடர்வதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்குப் பரிசோதனை செய்தால்தானே நோய் இருப்பதாகத் தெரியும். ஆனால், இங்குதான் பரிசோதனையே நடைபெறவில்லையே என்று கவலை தெரிவிக்கின்றனர். அதனால் உண்மையில் இந்த அரசுக்கு நல்லபெயர் வரவேண்டுமென்றால், சளி, காய்ச்சல், இருமல் என்று வரும் அனைவரையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் எழிலன், ``தமிழகத்தில் கொரோனாவுக்கான கண்காணிப்பு மற்றும் பரிசோதனை என்பது குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. இங்குள்ள நான்கு ஆய்வகங்களில் மட்டும் பரிசோதனை நடத்தினால் போதாது. மேலும் ஆய்வகங்களை, தமிழக அரசு தொடங்க வேண்டும். தற்போது, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யும் முறையைச் செயல்படுத்துமாறு தமிழக அரசு கூறியுள்ளது. அதேபோன்று, தனியார் ஆய்வகங்களையும் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு நடைபெற்றால், மேலும் கொரோனா தாக்கம் இருப்பவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும்" என்றார்.

எழிலன், மருத்துவர்
எழிலன், மருத்துவர்

மருத்துவர்களின் கருத்துகள் குறித்து தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் வடிவேலனிடம் கேட்டபோது, ``கொரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் சென்னை, திருவாரூர், திருநெல்வேலி, தேனி ஆகிய நான்கு ஆய்வகங்களிலும் தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, இதுவரை 222 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றுவருகிறது. பரிசோதனை தொடர்பான விவகாரத்தில், இதுவரை எந்தவித குற்றச்சாட்டும் எங்களிடம் வரவில்லை. 

சளி, காய்ச்சல், இருமல் என்று வரக்கூடிய  அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து  வருவோரைக் கண்காணித்து, அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக்கு பரிசோதனை தேவையில்லை. மேலும், முன்னெச்சரிக்கையாக கூடுதலாக மூன்று ஆய்வகங்களின் தேவை தற்போது அவசியம்  என்பதால், மத்திய அரசின் அனுமதிகேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக அந்த ஆய்வகங்களில் பரிசோதனைகள் தொடங்கப்படும். இதுவரை தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே நிலையங்கள் உட்பட மொத்தம் 1170 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பும் நடைபெற்றுவருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு