Published:Updated:

அவசர எண் ‘108’... அதிகரிக்கும் உடலுறுப்பு திருட்டு! தீர்வு என்ன...?

`108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதையே வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.’

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

‘அவசரம்’ என்றவுடன் நினைவுக்கு வரும் ஒருசில விஷயங்களில் ஒன்றாக, ‘108’ என்ற தொலைபேசி எண்ணும் இந்தியர்களின் மனதில் பதிந்துள்ளது. தூரத்தில் நடக்கும் விபத்துகளைப் பார்த்து உடனடியாக ‘108’-க்கு அழைத்து தகவல் சொல்லும் மானுட நேயமிக்க மனிதர்கள் தமிழகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், 108 ஆம்புலன்ஸின் செயல்பாடுகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் மனிதத் தன்மையற்றவையாக உள்ளன. விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும், இது மனித உடல் உறுப்பு திருட்டுக்கு வழிவகுப்பதாகவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகின்றன. இதற்காகத் தனியார் மருத்துவமனைகளிடமிருந்து தனியாகப் பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இவற்றை உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது, சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்தேறிய முறைகேடுகள். சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னணிகளை விசாரிக்கையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தத் தனியார் மருத்துவமனையிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு விபத்துக்குள்ளான நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் செய்திகளாக வெளிவந்துள்ள நிலையில், இது தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் நம்பகத்தன்மை மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நேர்மையான அரசு மருத்துவர்கள் சிலர், “108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதையே வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதேபோல் சில அரசு மருத்துவர்களும் நேயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சில நேரங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளே தனியார் மருத்துவமனைகளைத்தான் நாடிச் செல்கின்றனர். அதற்கான காரணம், அரசு மருத்துவமனைகளின் மீது அதிகரித்து வரும் நம்பிக்கையில்லா தன்மைகள்தான். இந்த நிலையைப் போக்க ஆட்சியாளர்கள் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களும் நோயாளிகளுக்கான நம்பிக்கையை அளிக்க வேண்டும். ஆனால், சில அரசு மருத்துவர்கள் - தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே உள்ள தொடர்புகளின் காரணமாக சுயநலனுடன் செயல்படுகின்றனர்” என்றனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் நேர்மையான ஊழியர்கள் சிலர், “ஒரு சக ஊழியராகப் பார்க்கும்போது இதைச் சொல்லக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தில் நடைபெற்று வரும் தவறுகள்தான் இந்த முறைகேடுகளுக்கான அடிப்படைக் காரணங்களாகும். இவற்றைத் தனியார் மருத்துவமனைகள் தங்களின் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அதிக அளவிலான பணம் செலவழிக்கின்றனர். அந்த ஊழியர்களுக்கு பார்ட்டி வைப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாள்களில் அவர்களுக்கான போனஸ் தொகை வழங்குவது என அரசு செய்ய வேண்டியவற்றை எல்லாம் இந்தத் தனியார் மருத்துவமனைகள் நிறைவேற்றுவதுதான் இந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களாக அமைகிறது. மருத்துவத்தில் தனியார் துறையின் அபரிமிதமான வளர்ச்சிதான் இந்தப் பிரச்னைக்கான காரணங்கள்” என்றார்கள்.

சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை முழுமையாக அரசுடைமையாக்குவதுதான் இந்தப் பிரச்னைகளைத் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கான முதல் வழிமுறை. தற்போது செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 95 சதவிகிதம் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் அரசு செலவு செய்கிறது. மீதமுள்ள 5 சதவிகித நிதியைத்தான் EMRI நிறுவனம் செலுத்துகிறது. ஆகையால், தனியார் பொது நிறுவனங்கள் இணைந்து நடத்துவதை விடுத்து முழுமையாக அரசே இவற்றைக் கையகப்படுத்தி நடத்த வேண்டும். அதேபோல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பணியிடங்களையும் அரசு நிரந்தரமாக்கி அவர்களை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும்.

Ambulance
Ambulance

இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையில் முறைகேடுகளானது, பல நேரங்களில் உடல் உறுப்புகளின் திருட்டுக்காகத்தான் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான மையங்களை உருவாக்கி அதற்குத் தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பெறக்கூடிய உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைகளில்தான் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். அதேபோல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் மாநிலக் கட்டுப்பாட்டு மையங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகளை நீக்க வேண்டும். அரசு மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை நோக்கி நகர்தல் அவசியம். மருத்துவத் துறையின் சமீபத்திய தொழில்நுட்பமாக 3டி பயாலாஜிக்கள் பிரின்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. அதன்மூலமாக நம்முடைய மனித உறுப்புகளை மீள் உருவாக்கம் செய்ய முடியும். இதன்மூலமாக உடல் உறுப்புகள் திருட்டுக்கும் அவை வழிவகுக்கும் ஆம்புலன்ஸ் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

மற்ற ஊழியர்களுக்கான ஊதியத்தைவிட 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் என்பது மிகவும் குறைவு.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவராமன், “இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமைக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்தான் காரணம் என்பது மாதிரியான பிம்பங்கள் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், அவை மட்டும் காரணங்கள் அல்ல. இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தில் வேலைசெய்து வந்த அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனை நடந்த முறைகேட்டிலும் தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுபோல பல நிர்வாகிகளுக்கும் இது மாதிரியான குற்றச்சாட்டுகளில் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

மற்ற ஊழியர்களுக்கான ஊதியத்தைவிட 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் என்பது மிகவும் குறைவு. ஆனால், இந்த வேலை நேரம் என்பது மட்டும் அதிகம். இது, பணிச்சுமையை உருவாக்குகிறது. இவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன, பல தனியார் மருத்துவமனைகள். அந்த ஊழியர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆம்புலன்ஸ் சேவையை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பட்சத்தில் இந்த முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கலாம்” என்றார்.

Ambulance
Ambulance

முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்களின் மீதான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இது மாதிரியான தொடர் பிரச்னைகளுக்கான காரணங்களையும் கண்டறிந்து தீர்வுகாணும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டியது அவசியம்!

விபத்தில் மயக்கமடைந்த இன்ஜினீயரிங் மாணவிகள்! - தங்கச் செயினைத் திருடிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்