Published:Updated:

கொரோனாவுக்கு பாரம்பர்ய மருந்து: ஆந்திராவில் அங்கீகாரம்; தமிழகத்தில் குண்டர் சட்டமா?

ஆந்திராவில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ஆந்திராவில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

`ஆந்திரத்தில் பாரம்பர்ய மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகத் தெரிவித்ததும் அம்மாநில் அரசு அதை அணுகி ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு தெரிவித்தவரை கைது செய்திருக்கிறது.' என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டணம் என்ற இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தைப் பின்பற்றும் அனந்தையா என்பவர் தயாரிக்கும் மருந்துகளை கோவிட் நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பர்ய மருத்துவம் பார்த்து வருகிறார்.

கோவிட் நோயாளிகளுக்கு லேகியம் மற்றும் தீவிர பாதிப்புள்ளவர்களும் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்தவர்களுக்கும் கண்களில் போடுவதற்கான சொட்டு மருந்தையும் அவர் பரிந்துரைக்கிறார். மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுகளில் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் லேகியத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது அரசு. கண்களில் ஊற்றும் சொட்டு மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதியளிக்கவில்லை.

அனந்தையா
அனந்தையா

அந்த மருந்துக்கு அனுமதியளித்தாலும் கோவிட்-19 நோயாளிகள் அலோபதி மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில், ``கண்களில் விடப்படும் சொட்டு மருந்தின் செயல்திறன் குறித்து உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும் அதில் சேர்க்கப்பட்டுள்ள தேன், மிளகு, பச்சைக் கற்பூரம், கருஞ்சீரகம் உள்ளிட்ட மூலிகை மருந்துப் பொருள்களால் தீங்கு ஏற்படாது என்றாலும், அது கோவிட் தொற்றைக் குணமாக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மருந்து பற்றி ஆய்வு நடத்திய நெல்லூர் ஆட்சியரால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் குழுவினர், அனந்தையா தகுதிபெற்ற ஆயுர்வேத மருத்துவர் அல்லர். மேலும் அவர் கூறும் மருந்துகளுக்கான சூத்திரங்கள் ஆயுர்வேத மருந்துகளில் இல்லை என்றும் தெரிவித்தனர். இதுபற்றி பேட்டியளித்த அம்மாநிலத்தின் ஆயுஷ் துறையின் ஆணையர் வி.ராமுலு, ``அனந்தையாவால் வழங்கப்படும் மருந்துகள் ஆயுர்வேத மருந்துகள் கிடையாது. அந்த மருந்துகளினால் எதுவும் பக்கவிளைவுகள் ஏற்பட்டதற்கான புகார்களும் வரவில்லை.

Representational Image
Representational Image

எனவே, மக்கள் இந்த மருந்தை துணை மருந்தாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எடுத்துக்கொள்ளலாம். கண்களில் விடப்படும் சொட்டு மருந்து குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் மதிப்பிடப்படும்" என்று தெரிவித்துள்ளார். ஆந்திர அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து மருந்தை மாநிலம் முழுவதும் விநியோகிக்கும் பணிகளை அனந்தையா தொடங்கியுள்ளார்.

தமிழகத்திலும் கோவிட்-19 முதல் அலையின்போதே அதற்கு தன்னிடம் மருந்து உள்ளதாக பாரம்பர்ய மருத்துவத்தைப் பின்பற்றும் திருத்தணிகாசலம் அறிவித்தார். அவர் தகுதி பெற்ற சித்த மருத்துவர் இல்லை என்றும், கொள்ளை நோய் சட்டத்துக்கு புறம்பாக மருந்துகளைப் பரிந்துரைக்கிறார் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையத்திடமிருந்து புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். இருப்பினும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாரம்பர்ய மருத்துவம்
பாரம்பர்ய மருத்துவம்

இந்த விவகாரத்தில் இரண்டு அரசின் அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. `ஆந்திரத்தில் பாரம்பர்ய மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகத் தெரிவித்ததும் அம்மாநில் அரசு அதை அணுகி ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு தெரிவித்தவரிடம் என்ன மருந்து இருக்கிறது என்பதைக்கூட கண்டுகொள்ளாமல் அவரை கைது செய்திருக்கிறது. அவருடைய மருந்துகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்' என்பது போன்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றித் திருத்தணிகாசலத்திடம் பேசினோம். ``எந்த ஒரு பின்பலமும் இல்லாத ஒரு சாமானிய வைத்தியரின் மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசின் இந்த தைரியமான முடிவு வரவேற்கத்தக்கது. அதற்குப் பின்னால் ஊடகங்கள், சமூகவலைதளங்கள், அரசியல் எனப் பல்வேறு பங்களிப்புகள் உள்ளன. நான் 2020-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதியே இந்த நோயைக் குணப்படுத்த என்னிடம் மருந்து உள்ளது.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

மருந்தைக் கொடுத்த 48 மணி நேரத்திலேயே முன்னேற்றம் தெரியும் என்று தெரிவித்தேன். முதல் அலையின்போது சீனாவின் அறிவியல் ஆலோசகர் என்னை வந்து சந்தித்து நான் கண்டறிந்த மருந்துகளைக் கேட்டறிந்தார். மனிதாபிமான அடிப்படையில் அது பற்றிய விவரங்களைக் கொடுத்தேன். அனைத்து மருந்துகளின் சாறுகளுமே சீனாவில் கிடைக்கின்றன. நான் அளித்த மருந்தில் சேர்க்கப்பட்டிருந்த மூலிகைகளில் எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதையும் அங்கு கிடைக்கும் மூலிகைகளையும் பயன்படுத்தி மருந்துகளை அளித்தனர். என்னைச் சந்தித்த 15 நாள்களிலேயே சீனாவில் நோய்க் கட்டுப்படுத்தப்பட்டது. என்னுடைய பங்களிப்பைப் பாராட்டியும், அந்த மருந்துகளை சீனாவுடன் இணைந்து ஆராய்ச்சி நடத்தலாம் என்றும் கடிதம் அனுப்பப்பட்டது. (அவை தன்னுடைய மொபைல் போனில் இருப்பதாகவும், அது தற்சமயம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருப்பதால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்))

நான் சொன்ன மருந்துகளையெல்லாம் இப்போது சித்த மருத்துவர்கள் கோவிட் சிகிச்சைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். நான் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் மருந்துகளைப் பற்றிச் சொன்னேன். கிட்டத்தட்ட 300 - 400 பேரை மருந்துகளால் குணப்படுத்தியிருக்கிறேன். 90 சதவிகிதத்துக்கும் மேல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களைக்கூட சிகிச்சையால் குணப்படுத்தியிருக்கிறோம். ஆதாரபூர்வமாக சிகிச்சையளிக்கப்பட்டது. அந்த மருந்துகளை பொதுமக்களும் சித்த மருத்துவர்களும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு நான் மருந்து இருப்பதாகச் சொன்னபோது என்னுடைய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தனர். உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆயுஷ் அமைச்சகம் என அனைத்தின் கதவுகளையும் தட்டிவிட்டேன். ஐ.சி.எம்.ஆரிடம் 500 பக்க தரவுகளைச் சமர்ப்பித்தேன். ஆனால், அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. அதைப்பற்றிய விசாரணைக்குக்கூட என்னை அழைக்கவில்லை. இப்போதும் என்னுடைய மருந்துகளை ஆய்வுக்குட்படுத்துவது கஷ்டமான காரியம் இல்லை. என்னுடைய மருந்துகளை சுய விருப்பத்தின் பேரில் எடுத்துக்கொள்வதற்காக ஒரு லட்சம் பேர் தயாராக உள்ளனர். 48 மணி நேரத்தில் இந்த மருந்தால் முன்னேற்றத்தைக் காண முடியும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் கைது செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏன் என்னுடைய மருந்துகளை ஆய்வுக்குட்படுத்தவில்லை என்றும் பாரம்பர்ய மருத்துவர்களை ஏன் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறீர்கள் என்றும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை. ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தையாவும் பாரம்பர்ய மருத்துவர்தான்.

அவருடைய மருந்துகளை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. தமிழக அரசு நினைத்தால் என்னுடைய மருந்துகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த முடியும். என்னுடைய மருந்துகளையும் அதன் சூத்திரங்களையும் தமிழக அரசிடம் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். ஏற்கெனவே என்னிடம் இருக்கும் தரவுகள், 2-ம் அலையில் குணப்படுத்தியவர்களைப் பற்றிய விவரங்கள், தரவுகளையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். இன்னும் அடுத்தடுத்து அலைகள் வரும் என்கின்றனர். அந்த வகையில் என்னுடைய மருந்துகளை ஆய்வுக்குட்படுத்தி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அளிக்க வேண்டும்" என்கிறார்.

ஆந்திரா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றிய கருத்துகளைக் கேட்பதற்கு மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜிடம் பேசினோம்.

``நாட்டு மருந்து என்பது சாமானியனிடமிருந்து உருவாவது. அது முறையாக ஆவணப்படுத்தி எழுதப்படுகிறது. அதன் மூலம் எழுதப்பட்ட அமைப்புக்குள் (Codified System) அவை செல்கின்றன. இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்றும்தான் எழுதப்பட்ட அமைப்புக்குள் இருக்கின்றன. சித்த மருத்துவத்தை முறைப்படுத்தி கல்லூரிப் படிப்பாக மாற்றி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுபோன்று மருந்துகளைப் பற்றிப் பேசும்போது அதை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு
சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு

ஆந்திராவில் நடந்ததையும் தமிழகத்தில் நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அனந்தையா சமூகப் பயன்பாட்டுக்காக இலவசமாக மக்களுக்கு மருந்துகளை வழங்கிவந்தார். அதை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் நன்கு பயனளித்ததாகத் தெரிவித்துள்ளனர். அதிகளவில் மக்களைக் கவர்ந்த காரணத்தால் அடுத்தகட்டமாக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியது.

திருத்தணிகாசலம் விவகாரத்தில் அவர் கூறும் மருந்துகளில் இருக்கும் மூலப்பொருள்கள் பாதி கபசுரக் குடிநீரிலேயே உள்ளன. அது புதிய மருந்தும் கிடையாது. மேலும், சித்த மருத்துவ இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட மருந்துகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தி அதன் அடிப்படையில்தான் தற்போது கோவிட் சிகிச்சைக்கு சித்த மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு ஓராண்டாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒரு மருந்து இருப்பதாகத் தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால், அடுத்தகட்டமாக அதை ஆறிவியல்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குறைந்தபட்சமாக முதற்கட்டமாக அந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் உண்டா என்பதை ஆராய வேண்டும். தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி தரவுகள் உருவாக்கப்பட்டால்தான் அதை மருந்தாக ஏற்றுக்கொள்ள முடியும்" என்றார்.

Representational Image
Representational Image
AP Illustration/Peter Hamlin

திருத்தணிகாசலம் விவகாரம் குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தில் பணியாற்றும் அதிகாரியைத் தொடர்புகொண்டோம். பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அவர் பகிர்ந்துகொண்டவை...

``நடைமுறையில் உள்ள சட்டதிட்டத்தின்படி எவ்வளவு பெரிய ஆய்வகம் வைத்திருந்தாலும் ஒரு மருந்துக்கு இரண்டு நாள்களில் அனுமதி வழங்குவது என்பது இயலாத காரியம். அதுமட்டுமல்ல கொரோனா மருந்துக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் ஆயுஷ் அமைச்சகத்திடம்தான் உள்ளது. சட்டப்படி மாநில அரசால் அனுமதி வழங்க முடியாது. ஆகையால், `ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத லேகியத்துக்கு அனுமதி’ என்று வெளியாகும் செய்தியின் உண்மையான பின்னணி என்ன என்பது தெரியவில்லை.

அடுத்ததாக திருத்தணிகாசலம் சொல்லும் மருந்துக்கு ஏன் அனுமதியளிக்கவில்லை என்ற கேள்விக்கு வருவோம்… அவரது மருந்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் அவர் அனுமதி வேண்டி முறைப்படி விண்ணப்பிக்கவே இல்லை. தன்னிடம் ஒரு மருந்து இருக்கிறது என்று சொன்னால் அவர்தான் அதுகுறித்து நிரூபிக்க வேண்டும். அரசு எப்படி ஆராய்ச்சி செய்யும்? ஒரு மருந்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். அப்படிச் செலவழித்து அந்த மருந்து பயனளிக்கும் என்று உறுதி செய்யப்பட்டால் அதன் ஃபார்முலா யாரிடம் இருக்கும்? அந்த ஃபார்முலாவை அவர் அரசிடம் கொடுத்துவிடுவாரா?

COVID-19
COVID-19
அனந்தையாவின் ஆயுர்வேத லேகியத்திற்கு அனுமதி; கண் மருந்துக்கு தடை; ஆந்திர அரசு சொல்லியிருப்பது என்ன?

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பாரத் பயோ டெக் தடுப்பூசி உருவாக்கியிருக்கிறது எனில், அவர்கள்தான் ஆய்வு செய்து கிளினிக்கல் டிரையல்களையெல்லாம் முடித்து அனுமதி வாங்கியிருக்கின்றனர். அரசா வாங்கியிருக்கிறது? சித்தா, ஆயுர்வேதா என்று வரும்போது மட்டும் ஏன் அரசு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் என்பது புரியவில்லை.

அதற்காகத் திருத்தணிகாசலத்தின் மருந்தை ஆய்வுசெய்ய செலவழிக்க அரசு தயங்குகிறது என நினைக்காதீர்கள். ஒருவர் தன்னுடைய ஃபார்முலாவை அரசுக்கே கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னாலும்கூட உடனே அரசு அந்த மருந்து ஆராய்ச்சியில் இறங்கிவிடாது. அவர் சொல்கிற ஃபார்முலாவுக்கு அறிவியல் அடிப்படையிலான தரவுகள் இருக்க வேண்டும். ஆராய்ச்சிகளுக்கான அடிப்படை இருக்க வேண்டும். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒருவர் சொன்னால் அதையெல்லாம் அரசு ஆராய்ச்சி செய்ய முடியுமா?” என்ற கேள்வியுடன் முடித்தார்.

பொதுவாகவே, `வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்' என்கிற கதையாக வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் ஓடோடி போய் ஆதரிப்பதுதான் இங்கே வழக்கமாக இருக்கிறது. அதேசமயம், `உள்ளூர் மாடு விலை போகாது' என்கிற கதையாக, உள்ளூரில் இருக்கும் உண்மைகள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டே வருகின்றன. இது தொடர்கதையாக நீடிக்கக்கூடாது என்பதுதான் நமது விருப்பம். ஆக்ஸிஜன், தடுப்பூசி என்கிற போது அமெரிக்கா வரை பேசும் அரசாங்கங்கள்... காலகாலமாக இங்கே இருக்கும் நாட்டுவைத்தியத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்துகின்றன. தடுப்பூசிக்காக பல கோடிகளை செலவழிக்கத் தயாராக இருக்கும் அரசாங்கங்கள், குறைந்தபட்சம் இங்குள்ள நாட்டு வைத்தியர்கள் சொல்வதில் என்னதான் இருக்கிறது என்று காது கொடுக்கக்கூட தயங்குவதுதான் வேதனை. இனியாவது காதுகொடுத்துக் கேட்டு, குறைந்தபட்சம் அதில் ஏதாவது உண்மைகள் இருக்கிறதா என்கிற முதல் கட்ட பரிசோதனைக்காவது முயற்சி செய்யலாமே!

எச்சரிக்கை: `தமிழக சித்த மருத்துவர்களில் சிலர் கொண்டிருக்கும் ஈகோ மனப்பான்மை காரணமாக, ஒருவர் மற்றவரை அங்கீகரிக்க மறுப்பது என்பது நீண்டகால பிரச்னையாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் திருத்தணிகாசலம் மீது சிலர் அதிரடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்' என்கிற குற்றச்சாட்டும் ஏற்கெனேவே இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தையும் மனதில்கொண்டே இந்தப் பிரச்னையை அரசாங்கம் அணுகவேண்டும். இல்லையென்றால், பாஸிட்டிவ்வா... நெகட்டிவ்வா என்பதை ஒரு நாளும் கண்டறியவே முடியாது!

அடுத்த கட்டுரைக்கு