
கோவிட்-19 பெருந்தொற்றை வெற்றிகண்டு, பொருளாதார ரீதியாக நாம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமென்றால் தடுப்பூசி மிகவும் அவசியம்.
முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. `அவசர பயன்பாடு' என்ற அடிப்படையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்:
``ஒரு நாட்டில் தயாரித்து பரிசோதிக்கப்படும் மருந்துகள் இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது அந்தந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். ஒவ்வொரு நாட்டுக்கும் மருந்துகளை அனுமதியளிப்பதற்கும் ஓர் அமைப்பு இருக்கும்.
அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அமைப்பிடம் அனுமதிபெற்ற ஒரு தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வரும்போது, அங்கு சமர்ப்பிக்கப்பட்ட மனித பரிசோதனை குறித்த அனைத்துத் தரவுகளையும் இந்தியாவிலுள்ள மருந்துக் கட்டுப்பாடு ஜெனரல் ஆஃப் இந்தியாவிடம் (டி.ஜி.சி.ஐ) சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்டவற்றை சரிபார்த்த பின்னர், அதற்கு அனுமதியளிக்க வேண்டும். தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மரபணு வம்சாவளி (Genetic Pool) இருக்கும். அதே போன்று நாட்டுக்கு நாடு மண்டலத்துக்கு மண்டலம் இந்த மரபணு வம்சாவளி வேறுபட்டிருக்கும். அதனால் தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட மரபணு வம்சாவளியினர் மத்தியில் இருந்த செயல்திறன் மற்றொரு வம்சாவளியினரிடம் இருக்கும் என்று கூற முடியாது.

அதனால்தான் வேறு வேறு மரபணு வம்சம் கொண்டவர்களிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி இந்தோனேசியா, துபாய், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனை நடைபெறுகிறது. மூன்றாம் நிலை மனித பரிசோதனையை வைரஸ் பரவல் இருக்குமிடத்தில்தான் செய்ய வேண்டும். சீனாவில் கொரோனா பரவல் இல்லை என்பதால் அங்கு பரிசோதனை நடைபெறவில்லை.
அதனால்தான் ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ரெட்டி லேப்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இந்தியாவில் பரிசோதனை செய்யப்படுகிறது. சீரம் இன்ஸ்ட்டியூட், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதால் இந்தியாவிலும் அந்தப் பரிசோதனை நடைபெறுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் பரிசோதனை செய்யப்பட்ட தரவுகளையும் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட தரவுகளையும் டி.ஜி.சி.ஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவுகள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதைப் பரிசோதித்து இந்திய மக்களுக்கு குறிப்பிட்ட அந்தத் தடுப்பூசி செல்லுபடியாகும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள் சமர்ப்பிக்கும் தரவுகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வல்லுநர் குழு (Subject Expert committee) சரிபார்க்கும். அதைத் தொடர்ந்து இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் டி.ஜி.சி.ஐ அனுமதியளிக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ``இரு தடுப்பூசிகளுக்கும் அவசர கதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 15-ம் தேதி தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்ததைப்போல் தற்போது ஜனவரி 26-ம் தேதிக்கான ஏற்பாடுகள் இவை. பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தே அவசர கதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் பற்றி மருத்துவரும் அரசியல் விமர்சகருமான சுமந்த் சி.ராமனிடம் கேட்டோம்:
``தடுப்பூசிக்கான மூன்று கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னர் அதன் முடிவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். எத்தனை பேருக்கு பரிசோதனை நடைபெற்றது, தடுப்பூசி வழங்கியவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன, எந்தெந்த வயதினருக்கு பிரச்னைகள் ஏற்பட்டன, எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு, ஆன்டிபாடி உடலில் உருவானது, எத்தனை நாள் கழித்து உருவானது என்பவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான தரவுகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில்தான் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும். பிரிட்டனில் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு இந்த நடைமுறைகளைப் பின்பற்றிதான் அனுமதி வழங்கப்பட்டது.
ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் மூலத்தை வைத்து (Vaccine seed), அதே மாதிரியான தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையின் மூலமும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசியும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்க ஓர் ஆய்வு (Bridging study) நடைபெற்றது. அதன் முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவில் நடத்திய இரண்டு கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை இணைத்து நடத்துமாறு அனுமதியளிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
`அவசர பயன்பாடு' என்ற அடிப்படையில் அனுமதி வழங்குவதற்கே தரவுகள் பொதுவெளியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதை சமர்ப்பிக்காமலே அனுதியளிக்கப்பட்டுள்ளது கேள்விக்குரியது.
கோவேக்சின் நிலை என்ன?
இந்தியா தடுப்பூசி உற்பத்தியில் ஜாம்பாவானாகத் திகழ்கிறது. ஆனால், தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுக்கு போதிய அனுபவம் இல்லை. 2018-ம் ஆண்டுதான் முதன்முதலில் ரோட்டோ வைரஸ் தடுப்பூசியைத் தயாரித்தது. அதற்கு முன்னால் தயாரித்ததே இல்லை. தடுப்பூசி தயாரிப்பில் அனுபவமிக்க நாடுகளுக்கே ஒரு புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு நான்கைந்து ஆண்டுகள் ஆகும். அதுபோன்ற நாடுகளே மிகவும் ரிஸ்க் எடுத்துதான் ஓராண்டுக்குள் கோவிட்-19 தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளன.
இதுபோன்ற நிலையில் தரவுகளையும் சமர்ப்பிக்காமல் அனுமதி வழங்கியிருப்பது கவலையளிக்கும் விஷயம். மேலும், அவசர பயன்பாட்டுக்கான கட்டுப்பாடான அனுமதி (Restricted use for Emergency) என்றுதான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. என்ன கட்டுப்பாடுகள் என்பதையும் தெரிவிக்கவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசிக்காவது இரண்டு டோஸ் மருந்து, 28 நாள்களில் இரண்டாவது டோஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கோவேக்சினைப் பொறுத்தவரை இந்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கர்ப்பிணிகளுக்கு கொடுக்கலாமா, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்குப் போடலாமா என எந்தத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இது மக்களிடையே தடுப்பூசி குறித்த நம்பிக்கையைக் குறைக்கும். தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது குறித்த தெளிவு ஏற்படாது.

கோவிட்-19 பெருந்தொற்றை வெற்றிகண்டு, பொருளாதார ரீதியாக நாம் அடுத்கட்டத்துக்குப் போக வேண்டுமென்றால் தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி கண்டறிவது மட்டுமே வெற்றியல்ல. வெளிப்படைத்தன்மையுடன் தரவுகளை வெளியிட்டு, தடுப்பூசியின் செயல்பாடு குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதுதான் முழு வெற்றியாகும்" என்றார் அவர்.
இரு தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு மக்கள் மனதில் தோன்றும் ஐயப்பாடுகளை நீக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இரு நிறுவனங்களுக்கிடையே மோதல்!
இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரே நாளில் ஒப்புதல் அளித்தத்தைத் தொடர்ந்து பேசிய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா, ``இதுவரை அமெரிக்காவின் ஃபைஸர், மார்டனா மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ராஜெனிகா (இந்தியாவில் கோவிஷீல்டு) ஆகிய மூன்று தடுப்பூசிகள் மட்டும்தான் திறன் வாய்ந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவேக்சின் உள்ளிட்ட பிற தடுப்பூசிகள் அனைத்தும் பாதுகாப்பானவைதான். ஆனால், வெறும் தண்ணீரைப் போன்று..." என்று பேட்டியளித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று பேட்டியளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, ``சில நிறுவனங்கள் எங்கள் தடுப்பூசியை தண்ணீர் போன்றது என்று விமர்சனம் செய்கின்றன. அதை நான் மறுக்கிறேன். நாங்கள் விஞ்ஞானிகள்" என்று தெரிவித்தார்.
பிரிட்டனில் பரவும் உரு மாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக கோவேக்சின் செயலாற்றுமா என்ற கேள்விக்கு, ``நிச்சயம் செயல்படும். இது அனுமானம் போன்று இப்போது தோன்றலாம். இவை அனைத்தையும் நிரூபிக்கும் தரவுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களும், ``இந்தியாவின் இந்த தடுப்பூசி திட்டத்தில் சிறப்பாக செயல்படுவதே முக்கியம். அதற்கான பணிகளை நாங்கள் இருவரும் மேற்கொள்வோம்" என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.