Published:Updated:

அகதிகள் முகாம்களில் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ எந்த அளவுக்கு உள்ளது? #SpotVisit

இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள்

தமிழகத்தில் அமைந்திருக்கும் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலையை நினைத்தால் மனதில் அச்சமே குடிகொள்கிறது. தமிழகத்தில் உள்ள 107 முகாம்களில், சுமார் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையின் கீழ் அகதிகளாகப் பதிவுபெற்று வசித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொடூரமான தாக்குதலை நடத்திவருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேசெல்கிறது. மத்திய மாநில அரசுகள், கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாகி விடக் கூடாது என்பதற்காக தேசிய ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இது ஒருபுறமிருக்க, மக்கள் இந்தப் புதிய சூழலுக்குள் வாழப் பழகிக்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டுவருகிறார்கள். அதிலும், அகதிகள் முகாம்களில் வாழும் மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறார்கள். வெளியில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவரும் இந்த அரசுகள், மிகவும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்கு பணிக்கப்பட்ட முகாம் மக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்களைக் கடும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா
கொரோனா
Vikatan

இலங்கை அகதிகள் முகாம்களில், ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் ஒரே வாசல்தான். வீடுகளும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். தவிர, தண்ணீர் பிடிப்பதற்கும் பொதுக்குழாய்க்குதான் வரவேண்டும். பொதுக்கழிப்பறையையே பயன்படுத்த வேண்டும். தினமும் ரேஷன் பொருள்களுக்காகக் காத்திருக்க வேண்டும். அங்கும் கூட்டம் கூடக்கூடிய சூழல்தான் இருக்கிறது. இந்த நிலையில், அரசு கடைப்பிடிக்க வலியுறுத்தும் 'சோஷியல் டிஸ்டன்சிங்' எல்லாம் அங்கே சாத்தியம்தானா?

அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்

"கொரோனா பத்தின எல்லா விஷயங்களையும் செய்தியில கேட்டுத்தான் தெரிஞ்சிக்குறோம். எப்போவும் வந்து கூட்டி சுத்தம் பண்ணும் ஆளுங்க மட்டும் வந்துபோறாங்க. நேத்து கழிவறையிலையும் தண்ணீர் தொட்டியிலையும் குளோரின் தெளிச்சாங்க. மத்தபடி, ஹெல்த் இன்ஸ்பெக்டர் உட்பட எந்த அரசாங்க அதிகாரிகளும் வந்து பாக்கல. அரசாங்கம் கண்டுக்கலைனாலும் எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்க தற்சுகாதாரமா இருக்கோம். அதோட, எங்க முகாம் இளைஞர்களும் மாணவர்களும், நிர்வாகக் குழுவினரும் நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும் சொல்றாங்க.

முகாம்
முகாம்

அரசாங்கம், யாரும் வீட்ட விட்டு வெளியே வராம இருந்தாலே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுறாங்க. நாங்க வாழ்ந்துட்டு இருக்குற இந்த முகாம் சூழல்ல, எங்களால எப்படி வெளிய வராம இருக்க முடியும். பாத்ரூம், குடிதண்ணி இப்படி எல்லா அத்தியாவசிய தேவைகளும் எங்களுக்குப் பொதுவான முறையில இருக்குறதால எங்களால எப்படி வெளிய வந்து கூட்டம் கூடாம இருக்க முடியும். மக்கள் ரொம்ப நெருக்கமா வாழுற இடம். ஒருத்தருக்கு பாதிப்பு வந்தாகூட, மொத்த முகாமுக்கும் அது பாதிப்பை உண்டாக்கும்.

இப்போ மத்திய அரசாங்கம் அறிவிச்சிருக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு, மொத்தமா எங்க வாழ்க்கைய மாத்திப் போடுற மாதிரி இருக்கு. அரசாங்கம் கொடுக்குற சம்பளம், புள்ளைங்களுக்கு படிக்குறதுக்காக வாங்குன கடனுக்கு வட்டி கட்டவே பத்தாது. இப்படி இருக்குற சூழல்ல, அடுத்த நாளுக்கான சாப்பாடுங்குறது கேள்விக்குறிதான்.

எங்க முகாம்ல இருக்குற சிலரோட வீடு, கால் நீட்டி படுத்துத் தூங்குறதுக்கே பத்தாதுங்குற சூழல்ல, எங்க புள்ளைங்க வீட்டுக்குள்ளையே 21 நாள்கள் இருக்குறது கடுமையான மன உளைச்சலைத்தான் அவங்களுக்குக் கொடுக்குது. பெரியவங்க நாங்க, இலங்கையில நடந்த போர்ச் சூழல்ல வீட்டுக்கு உள்ளேயும், பதுங்குகுழிக்கு உள்ளேயும் இருந்து பழகுனதால, இந்த நாள்கள் எங்களுக்கு பெருசா தெரியல. ஆனா, குழந்தைங்க பாவம் ரொம்பச் சிரமப்படுறாங்க'' என்கிறார் ஆதங்கமாக.

முகாம் மக்கள்
முகாம் மக்கள்

இந்நிலையில், இதுகுறித்து அகதிகள் முகாமில் வசிக்கும் சரவணன் என்பவர் பேசும்போது,

''கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம்வாழ் மக்களிடம் ஓரளவுக்கு இருக்கிறது. இருப்பினும், அரசு வலியுறுத்தும் 'சோஷியல் டிஸ்டன்சிங்'கைக் கடைப்பிடிப்பதற்கு எங்களுடைய முகாம் சூழல் எங்களுக்கு ஒத்துழைப்பு தராது. அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் ஒன்றுகூடவேண்டிய சூழல் நிலவுவதால் சமுகப் பரவல் குறித்த பயம் எங்களிடையே அதிகம் இருக்கிறது.

கொரோனா தொற்று ஏதோ ஒரு வகையில் யாரேனும் ஒருவருக்கு ஏற்பட்டால்கூட, அது ஒட்டுமொத்த முகாமையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லுதல், வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் வருகையால் அவர்களுடன் தொடர்பில் இருத்தல் எனப் பல காரணங்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், தொற்று ஏற்படாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுப்பதோடு, முகாமுக்கு ஒரு மருத்துவக் குழுவை நியமித்து, மக்களுக்கு அறிவுரை வழங்குவதோடு கொரோனா பரிசோதனையும் செய்ய வேண்டும்.

``ஈழ அகதிகளை இரண்டு விதமான அணுகுமுறைகளில் கையாளுகிறார்கள்!” அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினி

அரசாங்கம் ஒரு சில நிவாரணப் பொருள்களை அறிவித்திருக்கிறது. ஒரு சில முகாம்களில் மட்டுமே ரேஷன் கடைகள் முகாமுக்கு உள்ளேயே இருக்கிறது. பெரும்பான்மையான முகாம்களில், முகாமை விட்டு வெளியே செல்லவேண்டிய சூழல்தான் இருக்கிறது. இதைத் தவிர்த்து, முகாமிற்கு உள்ளேயே அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசால் வழங்கப்படும் பணக்கொடையை பயோமெட்ரிக் முறையில் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்று அவற்றைப் பெற வேண்டும். இதைத் தவிர்த்து, அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தினால், கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். பயோமெட்ரிக் முறையும் தற்போது ஆபத்தானதுதான். மேலும், பண நெருக்கடி இல்லாமல் சமாளிப்பதற்காக, அடுத்த மாதத்துக்கான பணக்கொடையை முன்கூட்டியே வழங்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைக்கிறார் சரவணன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

''அகதிகள் முகாமின் கட்டமைப்பு, நோய் பரவுவதற்கான சூழலை எளிதில் ஏற்படுத்திவிடும் என்பதால், மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்று ஏற்படுவதால், சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், இன்றைய கூலியே இன்றைக்கான உணவு எனும் சூழல் அகதி முகாம் மக்களிடையே நிலவுவதால், ஊரடங்கு காலத்தில் அரசால் வழங்கப்படும் பணக்கொடையை இரட்டிப்பாக வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்'' என்பதே ஒட்டுமொத்தமாக தமிழக முகாம்களில் வாழும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சமூகப் பரவல் ஏற்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாக இருக்கும் வேளையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் நிலையையும் கருத்தில்கொண்டு செயல்பட்டால், உலக மக்களிடையே போர் தொடுத்திருக்கும் கொடிய கொரோனா வைரஸிடமிருந்து அனைவரையும் பாதுகாக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு