Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: புதிய உச்சத்தில் கொரோனா... தடுப்பூசி, வீக் எண்ட் ஊரடங்கு! - கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதால் மளிகைக்கடை, மருந்துக்கடை மற்றும் காய்கறிக்கடை தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளையும் அடைக்க மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதோடு, புதிய கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 57,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதால் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து கடந்த சில நாள்களாகவே முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 5-ம் தேதியிலிருந்து வரும் 30-ம் தேதி வரை இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தகுந்த காரணம் இல்லாமல் வெளியில் வர அனுமதிக்கப்படாது. அவ்வாறு வந்தால் அபராதம் விதிக்கப்படும். இது தவிர பகல் நேரத்தில் ஐந்ஹு பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிக் கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

வரும் 30-ம் தேதி வரை காய்கறிக்கடை, மருந்துக்கடை, மளிகைக்கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். மற்ற அனைத்துவிதமான கடைகளும் அடைக்கப்படும். திறந்திருக்கும் கடை ஊழியர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

சினிமா தியேட்டர்கள், மால்கள், மல்டிபிளக்ஸ், நீச்சல் குளங்கள், வாடர் பார்க், வீடியோ பார்லர், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஜிம்கள், வழிபாட்டுத்தலங்கள், சலூன்கள், பார்கள் அடைக்கப்பட்டு இருக்கும். தனியார் அலுவலங்களும் அடைக்கப்படும். ஃபைனான்ஸ் மற்றும் வங்கி சார்ந்த தனியார் அலுவலகங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

லாக்டெளன்
லாக்டெளன்

ரெஸ்ட்ரன்ட்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பார்சல்கள் கொடுக்க மட்டுமே அனுமதிக்கப்படும். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் டெலிவரி பாய்கள் காலை 7 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படும். அவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடவில்லையெனில் டெலிவரி பாய்களுக்கு 1,000 ரூபாயும், சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு 10,000 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும். தொழிற்சாலைகள், கம்பெனிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். பொது போக்குவரத்து தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

இதற்கிடையே நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் கோவிந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க மத்திய குழு வரவிருக்கிறது. மும்பையைவிட புனேயில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இங்கு ஏற்கெனவே இரவு 6 மணியிலிருந்து காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு