Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் கொரோனா பரவலின் உண்மை நிலை என்ன?

கொரோனா
கொரோனா

தமிழக்தில் படிப்படியாகக் குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி ஒரு வருடம் முடிவடைந்திருக்கிறது. இன்னும் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரவில்லை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைந்து காணப்பட்டது. தற்போது வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கடந்த மார்ச் 07-ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட கொரோனா சிகிச்சையில் மொத்தம் இருந்தவர்களில் எண்ணிக்கை 3,997. ஒருவர் உயிரிழந்திருந்தார்.

நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 07) 3,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 25,598 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த ஒரு மாத காலத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மற்ற மாநிலங்களில் நிலை என்ன.?

இந்தியாவில் கொரோனா பேரிடர் ஆரம்பித்த காலம் முதல் பெருமளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. நேற்றைய, நிலவரப்படி புதிதாகத் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,907. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 322. மகாராஷ்டிரா மட்டுமல்லாது கேரளா, கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

வேகமெடுக்கும் கொரோனா; அதிகரிக்கும் கிளைம்கள்! - ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சொல்வது என்ன?
பெங்களூருவில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களை மூடவும், பொது அரங்கங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,15,736 நபர்களுக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 6-ம் தேதி நிலவரப்படி 18,327 என்றிருந்த எண்ணிக்கை, தற்போது பன்மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் நிலை என்ன.?

இந்தியாவில் கொரோனா பேரிடரில் பெருமளவு பாதிக்கப்பட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த வருடத்தில் ஒரு நாள் பாதிப்பு 7000-க்கும் அதிகமாகப் பதிவாகி வந்த நிலையில், அரசின் பல்வேறு நடவடிக்கையால் தொற்றின் விகிதம் படிப்படியாகக் குறைந்து 400-க்கும் குறைவாகக் கொண்டுவரப்பட்டது. கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவது குறைந்தது தற்போதைய பரவலுக்கு முக்கிய காரணம் என்று அரசு தெரிவிக்கிறது.

கொரோனா
கொரோனா

மார்ச் மாதத்தில் அரசியல் கூட்டங்களில், திருவிழா, திருமண நிகழ்வுகள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

தமிழகத்துக்கு ஊரடங்கு வருமா.?

தமிழக அரசு சார்பில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருகின்றன.

கொரோனா பரவல்: தடைகள்.. புதிய கட்டுப்பாடுகள்! - அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? முழுத் தகவல்

நாமெல்லாம் வீட்டுக்குள் முடங்கியிருந்தபோதும் மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்து முன்களப் பணியாளர்களும் தங்களின் குடும்பங்களை மறந்து கொரோனாவோடு போராடி நமக்கு இந்த இயல்புநிலையை மீட்டுக் கொடுத்திருக்கின்றனர்.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த கால கட்டங்களில், நம்மிடையே இருந்த விழிப்புணர்வு, தற்போது இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, முறையாக கை, கால்கள் சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை நாம் தீவிரமாக பின்பற்ற வேண்டியது அவசியம்.

அதைவிட மிக முக்கியமான ஒன்று தற்போது நமக்கு கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. உங்கள் வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்வதும் உங்களைப் பாதுகாக்கும் என்று அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தின் நிலை தற்போது மோசமாகவில்லை, கட்டுக்குள் இருக்கிறது என்று தான் அரசு தரப்பில் கூறப்படுகிறது. சுகாதாரத்துறையும் சரி, இதர அரசு துறைகளும் சரிமனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி கொரோனா கட்டுக்குள் இருப்பதும் கட்டவிழ்ந்து போவதும் மக்களாகிய நமது கையில் மட்டுமே இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு