Published:Updated:

கொரோனா முதல் அலை Vs இரண்டாம் அலை: எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!

``கொரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில் 66,000 பேர் மைதானத்திலிருந்து அந்தப் போட்டியைக் கண்டுகளித்தனர். அங்கும் சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலர் மாஸ்க்கூட அணியவில்லை.''

திரும்பும் பக்கமெல்லாம் மீண்டும் கொரோனா பற்றிய பேச்சுகளும், செய்திகளுமே நிரம்பியிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் நம்மை, கொரோனா எப்படி வாட்டி வதைத்துக் கொண்டிருந்ததோ, அதைப்போல... இல்லை அதைவிட சில மடங்குகள் அதிகமாகவே நம்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா முதல் அலை உச்சம் தொட 150 நாள்கள் ஆனது. இரண்டாம் அலையில் உச்சபட்ச பதிப்பு எண்ணிக்கையைத் தொட 40 நாள்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைக் காணமுடிகிறது.

ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்க வாரிசையில் நிற்பவர்கள்
ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்க வாரிசையில் நிற்பவர்கள்
ANI
மருத்துவமனை வாயிலில் கொரோனா நோயாளிகளோடு வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸுகள், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள், தங்கள் உறவினர்களுக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்க வரிசையில் நிற்கும் மக்கள் என முதல் அலையில் நாம் பார்த்திராத சில காட்சிகளை, இந்தியா முழுவதும் இரண்டாம் அலை நம் கண் முன்னே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 2,859 பேர் பாதிக்கப்படுவதாகவும், மூன்று நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பதாகவும் ஓர் ஆய்வில் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் அலையின்போது (இந்திய அளவில்) கொரோனா பாதித்தவர்களில், 41.5% பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. அதுவே இரண்டாம் அலையில் 54.5% பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல் சொல்கிறது. மேலும், இரண்டாம் அலையில் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்கள் அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனா நோயாளிகள்
கொரோனா நோயாளிகள்
Representational Image

இன்றைய நிலவரப்படி நாளொன்றுக்கு இந்திய அளவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக அளவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படியே ரீவைண்ட் செய்து பிப்ரவரி மாதத்துக்குச் சென்றால்... நாளொன்றுக்கு இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்திருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 500 பேர் மட்டுமே பாதித்திருக்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களைக் கண்டவுடன், இரண்டே மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது எப்படி என்கிற கேள்வி நம் மனதில் நிச்சயம் தோன்றும்.

 இரவு நேர ஊரடங்கு பயனளிக்குமா? - மோடி வலியுறுத்தும் `கொரோனா லாக்டெளனின்' அவசியம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படிப் பல மடங்கானது?

மார்ச் மாத தொடக்கத்தில், ``இந்தியா கொரோனா வைரஸின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது'' என்று பேசியிருந்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன். மத்திய அரசைச் சேர்ந்த பலரும் `நாம் கொரோனாவை வென்றுவிட்டோம்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வந்தனர். ஆனால், மருத்துவர்கள் சிலர் இரண்டாம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

ஃபிப்ரவரி மாத இறுதியில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். ஐந்து மாநிலங்களையும் சேர்த்து 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதாகவும் அறிவித்தது தேர்தல் ஆணையம். மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Corona
Corona

தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரங்களும், பேரணிகளும்தான் இரண்டாம் அலையின் மிகப் பெரிய தாக்கத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தொற்று நோய் நிபுணர்கள். இதோடு சேர்த்து வேறு சில காரணங்களையும் முன்வைக்கிறார்கள் அவர்கள்.

``தேர்தலையொட்டி பல்வேறு தலைவர்களும் பிரசாரங்களில் ஈடுபட்டனர். பிரசாரங்களில் எந்தவொரு கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படவில்லை. முகக் கவசம், சமூக இடைவெளி என அனைத்துக் கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

 சமூக இடைவெளியின்றி நடந்த தேர்தல் பிரசாரம்
சமூக இடைவெளியின்றி நடந்த தேர்தல் பிரசாரம்

இதையடுத்து மார்ச் மாதத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகளில் 50 சதவிகித அளவிற்குப் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு அனுமதி அளித்தது. குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில் 66,000 பேர் மைதானத்திலிருந்து அந்தப் போட்டியைக் கண்டுகளித்தனர். அங்கும் சமூக இடைவெளியானது கடைப்பிடிக்கப்படவில்லை. சிலர் மாஸ்க்கூட அணியவில்லை. பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள், குளிரூட்டப்பட்ட இடங்களில் காட்டுப்பாடின்றி அனுமதி என பல்வேறு விஷயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.

இந்தியா இங்கிலாந்து டி 20 போட்டி
இந்தியா இங்கிலாந்து டி 20 போட்டி
Twitter/ESPN

கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அரசே கண்டிப்பு காட்டவில்லை என்ற காரணத்தால், மக்களும் பெரிதாக எந்தவொரு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கவில்லை. சூழ்நிலை பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டதாக எண்ணி திருமணங்கள், விசேஷங்கள், சுற்றுலாத் தலங்கள் என எல்லா இடங்களுக்கும் செல்லத் தொடங்கினர். குறிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்பதைப் பலரும் மறந்தே போயிருந்தனர். இவை அனைத்தும்தான் கொரோனா இரண்டாம் அலையின் ருத்ரதாண்டவத்துக்கு காரணம்'' என்கிறார்கள் தொற்று நோய் நிபுணர்கள்.

வீணடிக்கப்பட்ட 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... முதலிடத்தில் தமிழ்நாடு!

மேலும், கொரோனா இரண்டாம் அலை குறித்து மருத்துவர்கள் பேசுகையில், ``கொரோனா இரண்டாம் அலை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், நிச்சயம் அதன் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம். நம்மிடமிருந்த அலட்சியம் காரணமாகத்தான் இரண்டாம் அலையின் தாக்கம் இவ்வளவு பெரிதாக இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம், அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருந்துவிட வேண்டாம். முதல் அலையின்போது கொரோனா குறித்த எந்தவொரு தெளிவும் நம்மிடம் இல்லை. இப்போது ஓரளவு அதைப்பற்றிய தெளிவும், முதல் அலையின்போது நமக்குக் கிடைத்த அனுபவும் இருக்கிறது. கூடவே தடுப்பூசியின் துணையும் இருக்கிறது. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை நாம் அனைவரும் சரியாகக் கடைப்பிடித்தால் இரண்டாம் அலையை விரட்டிவிட முடியும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு