Election bannerElection banner
Published:Updated:

தஞ்சை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! - கலக்கத்தில் பெற்றோர்கள்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை ( ம.அரவிந்த் )

கொரோனா வேகமாகப் பரவி வருவதையடுத்து தற்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. முன்னர் கொரொனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவிவருவதையடுத்து 9-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பு வரை மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று கும்பகோணத்திலுள்ள ஒரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று மக்களைப் பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. மத்திய, மாநில அரசுகள் லாக்டெளன் நடைமுறைப்படுத்தி கொரொனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் குறைந்திருந்தது. இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில வாரங்களாகவே பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிவந்தனர்.

குறிப்பாக அம்மாபேட்டை பள்ளியில் 9 -ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படித்த 58 மாணவிகள், ஆசிரியை, பெற்றோர் உட்பட 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சியை மேற்கொண்டார். கொரோனா தொற்றுக்கு ஆளான பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா
கொரோனா

இதையடுத்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 11 பள்ளிகள், இரண்டு கல்லூரிகள், ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகியற்றைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி வேன் டிரைவர்கள் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். நேற்று பட்டுக்கோட்டையிலுள்ள பள்ளிக்குச் சென்றவர், ``கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் மாணவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சையும், தரமான உணவும் கொடுக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா வேகமாகப் பரவி வருவதையடுத்து தற்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. முன்னர் கொரொனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதேபோல் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடைகமுறைகளைக் கடைப்பிடித்து கொரொனா பரவுவதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத, கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சாவூரிலுள்ள தனியார் பள்ளிக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாக காவல்துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கும்பகோணத்திலுள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 11 பள்ளிகளில் 143 பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

இந்தநிலையில் கும்பகோணத்திலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியர், ஆறு மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மொத்தம் 1,200 மாணவர்களுக்குச் சோதனை செய்ப்பட்டிருந்தது. இதில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்காக தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுக்கும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு