Published:Updated:

கொரோனா... ரஷ்யாவை நேற்றுதான் கடந்ததா இந்தியா? #LongRead

Corona
Corona

நேற்று ரஷ்யாவைக் கடந்து, இந்தியா கொரோனா பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால்...

கொரோனா தொற்று எண்ணிக்கையில் தங்க விலையைப்போல் ஒவ்வொரு நாளும் புதியதோர் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது இந்தியா. கொரோனா இறப்புப் பட்டியலுடன், கொரோனாவால் வேலையிழந்தோர் பட்டியல், பசியால் இறந்தோர் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட்டால்தான், இந்தியாவின் உண்மை நிலை உலகுக்குத் தெரியும்.

அப்படியெனில் மற்ற நாடுகளில் இத்தகைய மரணங்கள் நடந்திருக்காதா என்றால், நிச்சயம் நடந்திருக்கும். ஆனால், இந்தியாவின் மக்கள் தொகைக்கு அந்த சதவிகிதம் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை. ஏனெனில், நம் எல்லோருடையை நம்பிக்கையின்படியும் சீனா இன்னும் முழுமையான எண்ணிக்கையை வெளியிடவில்லை. அதனால், இரண்டாம் இடமான இந்தியாதான் இந்தத் தகவல்களை வெளியிட வேண்டும்.

இந்தச் சூழலில் நேற்று ரஷ்யாவைக் கடந்து, இந்தியா கொரோனா பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் மக்களையும், மக்கள் அரசுகளையும் மாறி மாறி குற்றம் சுமத்திக்கொள்ளலாம். ஆனால், உண்மை நிலைமை, இந்தியாவில் இருக்கும் சாமான்யனின் பசிக்குத் தெரியும்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்பதுதான் தற்போதைய அதிர்ச்சியான செய்தி. இன்னும் இதை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமென்றால், கடைசி ஐந்து நாள்களில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சம். கொரோனா முதன் முதலில் பரவ ஆரம்பித்த போது, 5 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட எடுத்துக்கொண்ட நாள்கள் 86.

முதலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவை ரஷ்யாவுடன் ஒப்பிடுவது அடிப்படையில் தவறு. உண்மையில் கொரோனா தொற்று ஷாக் செய்திகளில் நாம் பார்க்க வேண்டியது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதல்ல. எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், எத்தனை பேர் சீரியஸாக இருக்கிறார்கள், எத்தனை டெஸ்ட்டுகள் எடுத்திருக்கிறோம், எத்தனை பேர் மீண்டிருக்கிறார்கள் என்பனவற்றை.

ரஷ்யா - இந்தியா... இந்த ஒப்பீட்டுப் பட்டியலைப் பார்த்தால் எளிமையாகப் புரியும்.

பாதிக்கப்பட்டவர்கள்... ரஷ்யா: 6,81,251 - இந்தியா: 6,87,760
மரணம் அடைந்தவர்கள்... ரஷ்யா: 10,161 - இந்தியா: 19,568
மீண்டவர்கள்... ரஷ்யா: 4,50,750 - இந்தியா: 4,18,945
டெஸ்ட்களின் எண்ணிக்கை... ரஷ்யா: 2,10,69,000 - இந்தியா: 97,89,000
மக்கள் தொகை... ரஷ்யா: 14 கோடி - இந்தியா: 138 கோடி.

10 லட்சம் மக்களில் எத்தனை பேர் சோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இந்தியாவில் மாநில வாரியாக லாக்டௌன் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல், ரஷ்யாவின் மக்கள் தொகைக்கும் இந்தியாவின் மக்கள் தொகைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

பலி எண்ணிக்கையின் அடிப்படையில் நாம் ரஷ்யாவை ஜூன் 15-ம் தேதியே கடந்துவிட்டோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், கொரோனாவால் இந்தியாவின் முதல் மரணம் நிகழ்ந்த தேதி மார்ச் 12. ஜூன்15-ம் தேதிவரை 10,000 உயிர்களை கொரோனாவுக்கு இரையாக்கியிருக்கிறோம். மொத்தம் 96 நாள்கள். கடந்த 20 நாள்களில் இன்னும் 10,000 உயிர்களை விலை கொடுத்திருக்கிறோம்.

மற்ற நாடுகள்

முதல் 2400 உயிர்பலிக்கு பாகிஸ்தான் எடுத்துக்கொண்ட காலம் 81 நாள்கள். கடந்த 24 நாள்களில், 2400 மரணங்கள் பாகிஸ்தானில் நிகழ்ந்திருக்கின்றன.

பிரேசிலில் கடந்த 30 நாள்களில் 32000 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அதேபோல், ரஷ்யாவில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, சமன் நிலைக்கு (flatten the curve) வந்து 40 நாள்களாகிவிட்டன. நாம் கொரோனாவை பெருக்கி, பொருளாதாரத்தை பூஜ்ஜியத்தை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறோம். ஊரடங்குக்குள் ஊரடங்கு, அன்லாக் 2.0, லாக்டௌன் 7.0 எனப் புதுப்புது பெயர்கள் சூட்டுகிறோமேயன்றி, மாற்றங்கள் எதுவுமில்லை. புதிய இந்தியா பிறக்கிறதோ இல்லையோ, கோவிட்-19 வைரஸ்கள் அனுதினமும் பிறந்துகொண்டே இருக்கின்றன.

ஒரு தேசத்தில், ஒரு நாளில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, அன்று நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டும் நாம் கொரோனாவில் இருந்து மீண்டுகொண்டிருக்கிறோம் எனப் பொருள். ஜூலை 4-ம் தேதி பதிவான பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,000; மீண்டவர்கள் எண்ணிக்கை 15,000. அதேபோல், இந்தியாவில் கொரோனா பரவலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் மாநிலங்களில் பாதிக்கட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதன் வேகம், இந்தியாவின் சராசரியைவிடவும் அதிகம் என்பதுதான் பெரும் சிக்கல். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,000.

'இவன் ஒரு ஆறுதல் செய்தியாவது சொல்கிறானா பார்...' என்கிறீர்களா? பிரேஸிலுடனும், அதன் அதிபர் போல்ஸோனாரோவுடனும் நம்மை ஒப்பிட்டு வேண்டுமானால் கொஞ்சம் ஆறுதல் அடைந்துகொள்ளலாம். ஏனெனில், எப்படி நம் எடப்பாடி பழனிசாமி, இன்னும் மூன்று நாள்களில் கொரோனா ஒழிந்துவிடும், பாசிட்டிவ் எல்லாம் நெகட்டிவாக மாறிவிடும் எனக் குறி சொன்னாரோ, அதேபோல், முதல் நாளிலிருந்தே கொரோனாவை ஏளனப் பார்வை பார்த்து வந்தவர் போல்ஸோனாரோ. அங்கு 33 லட்சம் பேருக்கு சோதனை செய்தால், 16 லட்சம் பேருக்குக் கொரோனா இருக்கிறதாம். அதே நேரம் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 10 லட்சம் பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா - ரஷ்யா கூட்டு எண்ணிக்கையைவிட இது அதிகம்.

கொரோனா எண்ணிக்கையில் பட்டியலில் இருக்கும் டாப் 4 நாடுகளுக்கு இருக்கும் பொதுவான ஒற்றுமை, நான்கு தேசங்களுமே, கொரோனாவின் ஆபத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆரம்பத்தில் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

'வெறும் 15 பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மிக விரைவில் பூஜ்ஜியம் ஆகிவிடும்' என்றார் ட்ரம்ப். தற்போதைய நிலவரப்படி, உலக அளவிலான கொரோனா இறப்புகளில், கால் பங்கு மரணங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி, போல்ஸோனாரோ, மோடி, ட்ரம்ப்... இவர்களில் யாருடைய கடந்தகாலப் பேச்சை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். இந்த நான்கு மாதங்களில் முரண்களின் மொத்த உருவாகப் பேசியிருப்பார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பாரதப் பிரதமர் மோடி, போல்ஸோனாரோவிடமும் ட்ரம்ப்பிடமும் தொலைபேசியில் பேசி, கொரோனாவை எதிர்கொள்ள நம்பிக்கை அளித்திருப்பதாக ட்வீட் செய்தார். அந்தப் பொன்னாளான ஏப்ரல் நான்காம் தேதியன்று பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்கள் 10,000 பேர். இந்தியாவில் 3,588. அமெரிக்காவில் 3.20 லட்சம்.

Modi Tweet
Modi Tweet
Modi Tweet
Modi Tweet

ஆனால், மிக விரைவிலேயே இப்படி அமெரிக்காவுக்கு அருகருகே குடிபெயர்வோம் என போல்ஸோனாரோவோ, மோடியோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என நம்புவோம்.

ஆகஸ்ட்-15 உரைக்கான விளம்பரமா `கோவாக்ஸின்?' #LongRead

ஆக, இன்னும் சில வாரங்களுக்கு நாம் மூன்றாம் இடத்தில்தான் இருக்கப்போகிறோம். வாரங்களில் மாறக்கூடிய கொரோனா உலக வரிசை எண் பற்றி நாம் கவலைப்பட்டிருக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அடுத்த ஜுலை வரை சிலவற்றுக்கு லாக்டௌன் தடைகள் தொடரும் என அறிவித்திருக்கிறது கேரளா. இத்தனைக்கும் கொரோனா நோய்ப்பரவல் தீவிரத்தில் தென் மாநிலங்களில் தப்பிப் பிழைத்தது கேரளம் மட்டும்தான். கேரளத்துக்கே ஜூலை 2021 வரை லாக்டௌன் தேவை என்றால், நாம் என்ன செய்யப்போகிறோம் பராபரமே?

இனி, ஷாக் வேல்யூ செய்திகளுக்காக 7 லட்சம், 8 லட்சம் என நாள்தோறும் பிரேக்கிங் செய்திகள் வரலாம். எத்தனை பேர் இன்னும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், கொரோனா வறுமைக் கொலைகளின் பட்டியலையும்.

அடுத்த கட்டுரைக்கு