Published:Updated:

`விழிப்புணர்வு... நூதன தண்டனை!' - செங்கல்பட்டு காவல்துறையின் கொரோனா கெடுபிடி

தடியடி
தடியடி

நேற்று சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள் இன்று இருசக்கர வாகனத்திலேயே தங்கள் சொந்த ஊருக்குப் பயணித்தனர். சிலர் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஏறிச்சென்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் செங்கல்பட்டு பகுதியில் பொதுவெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அதைப் படித்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு பேருந்து நிலையம்
செங்கல்பட்டு பேருந்து நிலையம்

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்பிலிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

அதிகாலை முதலே காய்கறி வாங்குவதற்காக மக்கள் வழக்கம் போல திரள்வதைக் காண முடிந்தது. சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து வந்தார்கள். ஆனாலும், இருசக்கர வாகனங்களில் மக்கள் பயணித்துக்கொண்டேதான் இருந்தார்கள். இதையடுத்து முகக்கவசம் அணியாமல் வருபவர்களைப் போக்குவரத்து காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள். மேலும், அவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது லேசான தடியடியும் நடத்தப்படுகிறது.

பரனூர் டோல்கேட், செங்கல்பட்டு
பரனூர் டோல்கேட், செங்கல்பட்டு

அதுபோல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் டோல்கேட்டில் வாகனங்கள் சொற்ப அளவிலேயே இயங்கின. நேற்று சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள் இன்று இருசக்கர வாகனத்திலேயே தங்கள் சொந்த ஊருக்குப் பயணித்தனர். சிலர் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஏறிச் சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வாகனங்களில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களுக்கு கொரோனாவின் தீவிரம் பற்றி அறிவுரை வழங்கினர்.

காவல்துறையினர் அறிவுரை, கொரோனா
காவல்துறையினர் அறிவுரை, கொரோனா

பின்பு அவர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைக் கொடுத்து, அதில் உள்ள வாசகங்களைப் படிக்கச் செய்தனர். பின்பு அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு