Published:Updated:

`250 பெண்களுக்கு 1 குளியலறை!' நந்தம்பாக்கம் கொரோனா முகாமிலிருந்து கண்ணீர்க் குரல்

சென்னை சிகிச்சை மையம்
சென்னை சிகிச்சை மையம்

கொரோனா தொற்றுள்ளவர்களுக்காக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாமில் போதிய வசதிகளோ, ஏற்பாடுகளோ இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

கொரோனா தாக்கம் சென்னையில் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா அறிகுறி உடையவர்கள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையமும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், ஆண்களும் பெண்களும் தனித்தனியே தங்கவைக்கப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் இந்த மையத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் அங்குள்ள பணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் கவலையளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை வர்த்தக மையம்
சென்னை வர்த்தக மையம்

250-க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் நிலையில், மொத்தமே 20 கழிப்பறைகள் மட்டுமே இருப்பதாகவும், ஒரே ஒரு குளியலறை மட்டுமே இருப்பதாகவும் சொல்கிறார்கள். தங்கவைக்கப்பட்ட நபர் ஒருவர் அங்கிருந்து சென்றுவிட்டால், அவர் பயன்படுத்திய அறையைச் சுத்தம் செய்வதில்லை என்றும், அங்கிருந்து ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்க, காவல்துறையினர் சென்று சமரசம் செய்யும் அளவுக்கு நிலைமை சிக்கலாகியிருக்கிறது. இந்த நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் (பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டாம் எனக் கூறிவிட்டார்), தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை வருத்ததோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கொரோனா சூழலிலும் வேலைக்குச் சென்றிருந்தேன். அதன் மூலம்தான் எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எனக்கு அறிகுறி இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். இரண்டு தினங்கள் கழித்து, மருத்துவமனையிலிருந்து போன் செய்தனர். ‘உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அண்ணா நகரிலுள்ள தனியார் கல்லூரி மையத்தில் உங்களுக்கு கூடுதலாக சில சோதனைகள் செய்ய வேண்டும். ‘கோவிட் 19’ உறுதி செய்யப்பட்டால் ஏதாவதொரு மையத்தில் உங்களைத் தனிமைப்படுத்துவோம். எதற்கும் மாற்றுத்துணியுடன் வாருங்கள்’ என்றனர்.

சென்னை வர்த்தக மையம்
சென்னை வர்த்தக மையம்

உடனடியாகச் சென்றேன். அந்தக் கல்லூரியில் சில சோதனைகள் செய்துவிட்டு, எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்தார்கள். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அழைத்துச்சென்றனர். அப்போது மதியமாகிவிட்டது. பலமுறை குடிக்கத் தண்ணீர் கேட்டும் யாருமே கண்டுகொள்ளவில்லை. அன்று மாலை 4 மணிவரை சொட்டுத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. எனக்கு சர்க்கரை உள்ளிட்ட சில உடல்நல பாதிப்புகள் உள்ளன. அதைச் சொல்லியும்கூட அங்கிருந்த பணியார்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

உணவும் கொடுக்கவில்லை. எனக்கு சர்க்கரை அளவு 52-க்கும் குறைவாக இறங்கிவிட்டது. கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டு தலைச்சுற்றல் ஏற்படவே, அப்போது மருத்துவர் வந்தார். அவரிடம் என் நிலையைச் சொன்னதும், ‘உணவு தரச்சொல்கிறேன்’ என்றார். இதற்கிடையே, என் உறவினரிடம் போனில் விவரங்களைச் சொல்லியிருந்தேன். எனக்கான மருந்து மாத்திரைகளுடன் திருட்டுத்தனமாக உணவையும் ஒரு பையில் வைத்துக் கொண்டுவந்தார். வெளியாட்களுக்கு உள்ளே அனுமதியில்லை. எனவே, கொண்டுவந்த பையை பணியாளர் ஒருவர் மூலம் தூரமாக நின்றபடியே கொடுத்தனுப்பினார். அந்த உணவைத்தான் நான் மாலையில் சாப்பிட்டேன். பிறகு, இரவில்தான் நந்தம்பாக்கம் கொரோனா மையத்தில் எனக்கு உணவு கொடுத்தனர்.

சென்னை வர்த்தக மையம்
சென்னை வர்த்தக மையம்
`சுடு தண்ணீர்... மாஸ்க் தாங்க!' -போராட்டத்தில் இறங்கிய ராமநாதபுரம் கொரோனா நோயாளிகள்

அன்று எனக்கு ஒதுக்கிய அறையில் நுழைந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்த அறையில் அதற்கு முன்பு தங்கியிருந்த ஒருவர் பயன்படுத்திய பழைய மாஸ்க், வாழைப்பழத் தோல் எல்லாம் அப்படி அப்படியே கிடந்தன. அதையெல்லாம் நான்தான் சுத்தம் செய்தேன். இப்போதுவரை நாங்கள் தங்கியுள்ள அறைகளைச் சுத்தம் செய்வதே இல்லை. தினமும் துவைக்கும் ஆடைகளைத் தங்கியிருக்கும் சிறிய அறையிலுள்ள ஒரு சேரில்தான் காய வைக்கிறோம். அதேசமயம் மஞ்சள், மிளகு கலந்த பால் மற்றும் கபசுரக் குடிநீர், இரண்டு முட்டைகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். அந்த வகையில் எந்தக் குறையும் சொல்ல முடியாது” என்றவர், நேற்று நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்தார்.

“உணவு விஷயத்தில் முதல் நாள் மோசமான அனுபவம் கிடைத்தாலும், கடந்த சில நாள்களாகச் சரியான நேரத்தில் உணவு தருகிறார்கள். ஆனால், உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் புதிதாக இந்த மையத்தில் தங்கவைக்க வருபவர்களுக்கு முறையாக உணவு கொடுப்பதில்லை. இதுகுறித்துக் கேட்டாலே சண்டைதான் வருகிறது.

ஒரு பெண், நேற்று முன்தினம் வேகமாக நடந்துவந்துகொண்டிருந்தார். திடீரெனக் கீழே விழுந்தவர், அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இறப்புச் செய்தியை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவே இல்லை.
கொரோனா சிகிச்சை மையத்திலுள்ள பெண்

சுமார் 250 பெண்கள் இருக்கும் நிலையில், 20-க்கும் குறைவான கழிப்பிடங்களே உள்ளன. அனைவருக்கும் பொதுவாக ஒரு குளியலறை மட்டுமே உள்ளன. இதுபற்றியெல்லாம் கேட்டால், மோசமான பதில்களே கிடைக்கின்றன. ஒரு பெண் நேற்று முன்தினம் வேகமாக நடந்துவந்துகொண்டிருந்தார். திடீரெனக் கீழே விழுந்தவர், அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே அவரை ஆம்புலன்ஸில் கொண்டுசென்றனர். இறப்புச் செய்தியை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவே இல்லை. இதற்கிடையே, இறந்துபோன பெண்ணின் போன் அவர் பெட்டில் இருந்துள்ளது.

தொடர்ந்து போன் வரவே, அங்கிருந்த ஒருவர் நடந்த விவரங்களைத் தெரிவித்துவிட்டார். இதுபோன்ற சில விஷயங்களால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இங்கு நடக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் நேரில் வந்து சமாதானம் செய்துவைத்தனர்.

என்னுடைய இரண்டு வயது மகளைப் பிரிந்திருக்கும் கவலை ஒவ்வொருநாளும் என்னைக் கலங்கவைக்கிறது. இங்குள்ளவர்கள் அனைவருமே, தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்ற தகவலை அறிந்த நாள்முதலே மிகுந்த வேதனையில்தான் உள்ளனர். இதனுடன், சில பணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருக்கிறது.

Corona Test
Corona Test

கொரோனா பாதிப்பு இருப்பதாலும், உறவினர்களை விட்டுப் பிரிந்திருப்பதாலும், தனிமைப்படுத்தப்பட்டதாலும், ஒவ்வொரு நாளையும் கஷ்ட சூழலில் நகர்த்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், எங்களுக்கு கூடுதலான மன வேதனையை சில பணியாளர்கள் ஏற்படுத்துவது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. இதற்குத் தீர்வுகாண உதவினால், என்னைப் போன்று கொரோனா மையங்களில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு ஆறுதலாக இருக்கும்” என்ற அந்தப் பெண்ணின் குரலில் கடைசிவரை ஆதங்கம் குறையவே இல்லை.

கோவை: 3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாகும் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர்?

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை தொடர்புகொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்தோம். “நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலிருந்து எங்களுக்கு இன்று காலை புகார் வந்தது. உடனே அங்கு சென்றோம். அங்கு தங்கவைக்கப்பட்டவர்கள், ‘கழிப்பிட வசதி, குளியலறை வசதிகள் போதுமானதாக இல்லை’ உள்ளிட்ட சில புகார்களையும் ஆதங்கத்தையும் முன்வைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்துவைத்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறினோம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் எல்லோருமே கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால்தான் நல்ல சூழலுக்குத் திரும்ப முடியும். அதை உணர்ந்தாலே இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்” என்றனர் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு