Published:Updated:

`புதிதாக ஒரு பாசிட்டிவ் கேஸ்..!' - 36 நாள்களுக்குப் பிறகு அதிர்ச்சி கொடுத்த ஈரோடு நிலவரம் #corona

ஈரோடு
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையிலிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல் கொரோனா பாதிப்பைச் சந்தித்த மாவட்டம் ஈரோடு. தாய்லாந்து நாட்டவர்கள், டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 70 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிரடியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளால் 69 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து புதிதாக ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ்கூட ஈரோட்டில் ரிப்போர்ட் ஆகாமல் இருந்தது. சிவப்பிலிருந்து - ஆரஞ்சு - பச்சை மண்டலம் என ஈரோடு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய சூழலில், 36 நாள்களுக்குப் பிறகு புதிதாக ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த 50 வயது ஆண் அவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் சிக்க, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணெய்க் கட்டு, மாவுக் கட்டு என கிராமத்திலேயே வைத்தியம் பார்த்தும் எந்தப் பலனும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து ஒரு சில மருத்துவமனைகளுக்கும் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறார். எந்த முன்னேற்றமும் இல்லாமல் வலி பின்னியெடுக்க, கடைசியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

கொரோனா
கொரோனா

ஈரோட்டிலோ, ‘காலில் செஃப்டிக் ஆனது போல் தெரிகிறது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குத்தான் நீங்கள் செல்ல வேண்டும்’ என அனுப்பி வைத்திருக்கிறார். அதன்படி சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே, அவரை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியதோடு, அவர்களுடைய குடும்பத்தாரின் சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு வரை இந்த 50 வயது நபர், கவுந்தப்பாடியில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறார். இதில் எங்கிருந்து அவருக்குக் கொரோனா பரவியிருக்கும் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் டிரேஸ் செய்து வருகின்றனர். மேலும், அவர் வசித்து வந்த தெருவை மட்டும் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!

சோதனையின் முடிவுகள் நாளை வந்தபிறகுதான், அந்த நபருடைய குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்பது தெரியவரும் என்கின்றனர் சுகாதாரத்துறைப் பணியாளர்கள்.

36 நாள்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோட்டில், புதிதாக ஒரு பாசிட்டிவ் கேஸ் ரிப்போர்ட் ஆகியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு