Published:Updated:

குமரியில் 15 பேருக்குக் கொரோனா தொற்று! - மக்கள் கூட்டமாக நின்றால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி தனிமை வார்டு
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி தனிமை வார்டு

பெண் போலீஸ் ஒருவர் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் இருந்த மூன்று பேர் என நான்கு பேர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது சற்று வலுப்பெறுவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்ற நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர், நாகர்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த ஒருவர், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் என 4 பேர் மற்றும் சென்னை விமானநிலையத்தில் பணிபுரிந்த நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 5 பேருக்குக் கொரோனா இருந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 இருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தநிலையில் டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்களின் தொடர்பால் 5 பேருக்கும், சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மூலம் 3 பேருக்கும் கொரோனா பாதித்தது நேற்று கண்டறியப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் 8 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குமரியில் 14 ஆக உயர்ந்தது. மேலும் சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்து கொரோனா பாதித்தவரின் உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் பெண் போலீஸ் ஒருவர் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் தொடர்பில் இருந்த மூன்று பேர் என 4 பேர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குமரியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில், ``குமரியில் 15 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி. பொதுமக்கள் தனி மனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டால் 9566710110 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு ஜி.பி.எஸ் புகைப்படத்துடன் புகார் அனுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு