Published:Updated:

கொரோனா நிவாரணம்: பதிவைப் புதுப்பிக்காத கட்டடத் தொழிலாளர்களுக்கு இல்லை - ரூ.3000 கோடி நலவாரிய நிதி எங்கே?

கட்டடத் தொழிலாள்ர்கள்
கட்டடத் தொழிலாள்ர்கள் ( For Representation Only )

நலவாரியத்தில் தங்களின் பதிவைப் புதுப்பிக்காத கட்டடத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் மறுக்கப்பட்டது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் அனுதினமும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காகவே, மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருக்கும் இடங்களில், அவ்வப்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாயிருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், பொற்கொல்லர், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 வகையான தொழில்களில் ஈடுபட்டுவரும் 75 லட்சம் தொழிலாளர்கள், அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்

இதில், கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்கள் மட்டுமே சுய நிதியைக் கொண்டு இயங்கி வருகின்றன. வேலை இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு ஓட்டுநர் மற்றும் கட்டுமான நல வாரியத்தில் பதிவுசெய்த 12.13 லட்சம் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1,000 நிவாரண நிதியுடன் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கிட 24.3.2020 -ம் தேதியன்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதே வாரியத்தில் பதிவு செய்துள்ள 14,57,526 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, மீதமுள்ள 15 பதிவுபெற்ற தொழிலாளர்கள் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் இன்றி, 1,000 ரூபாய் வீதம் இருமுறை நிவாரண உதவி மட்டும் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஓட்டுநர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அரசால் வழங்கப்படும் நிவாரண நிதி, நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்குக் கிடைக்காது என்று வெளியான செய்தி, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் சுமார் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 12.13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே பதிவை புதுப்பித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மீதமுள்ள 20.87 லட்சம் தொழிலாளர்கள் பதிவினை புதுப்பிக்காதவர்களே. நல வாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்கள், புதுப்பிக்காத காரணத்தினால் மட்டுமே அவர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்டடத் தொழிலாளர்களில் பலபேர் தினக் கூலிகளாகவே இன்று வரை இருந்துவருகின்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர், எந்த வாரியத்திலும் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. கொத்தனார், பேராள், சித்தாள் என அழைக்கப்படும் இந்த கட்டடத் தொழிலாளர்கள், 700 ரூ, 400 ரூ, 300 ரூ என்றபடியே தினக்கூலியைப் பெற்று வேலைசெய்துவருகின்றனர். தங்களை எந்த வாரியத்திலும் இணைத்துக்கொள்ளாத இவர்களும் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள போதிலும், அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் பொன்குமார் (முன்னால் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவர்).

அவரிடம் பேசினோம்.

“1982-ல் எம்.ஜி.ஆர் வீட்டின் முன்பாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான சட்டத்தைக் கொண்டுவரக் கோரி என்னுடைய தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 428 பேர் கைதுசெய்யப்பட்டு 17 நாள்கள் சிறையில் இருந்தோம். அதன்பின்னரே இச்சட்டத்தை 1982 ஜூலையில் கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர்.

பொன்.குமார்
பொன்.குமார்

நிரந்தர பணியிடம் இன்றி உள்ளோர் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுவர். அச்சட்டத்தின் அடிப்படையில் 1994-ல் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு திருமண உதவி, பேருகால உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம் போன்ற திட்டங்கள் அதில் கொண்டுவரப்பட்டன. இந்த வாரியத்தின் நிதி மூல ஆதாரம் எங்கிருந்து பெறப்படுகின்றது என்றால், தமிழகத்தில் எங்கு கட்டடம் கட்டினாலும் அந்தக் கட்டடத்தில் மொத்த மதிப்பீட்டில் இருந்து 1% தொழிலாளர்களுக்காக்க வசூலிக்கப்படுகிறது. அவ்வாறாக வசூலிக்கப்பட்ட பணம், நல வாரியத்தில் 3000 கோடிக்கும் மேல் தற்போது உள்ளது. இந்தப் பணம் முழுவதும் தொழிலாளர் நலனுக்கான பணமாகும்.

2006-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது, மற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 16 வகையான நல வாரியங்கள், 1982-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டன. அவற்றிலும் இதேபோன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதேபோல் 1996-ல் மத்திய அரசும் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக இந்தியா முழுதும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு இந்திய அளவில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் தற்போது 35,000 கோடிக்கு மேல் தொழிலாளர்கள் நலனுக்கான பணம் செலவழிக்கப்படாமலே உள்ளது. 'வேறு எதற்கும் இந்தப் பணத்தை பயன்படுத்தக்கூடாது. பணம், தொழிலாளர்கள் நலனுக்கானது. ஏன் இதை இன்னும் செலவிடவில்லை, தொழிலாளர்களுக்காக நல திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாமே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், அந்த நிதி அப்படியே உள்ளது.

கொரோனா நிவாரணம்
கொரோனா நிவாரணம்
`சாப்பாடு மட்டும் போதுமா?’ - முதியவர் மரணத்தால் கொரோனா வார்டில் மூண்ட மோதல்

டெல்லி மாநில அரசு, நல வாரியத்திலிருந்து அம்மாநில கட்டடத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை 5,000 ரூபாய் கொடுத்துள்ளது. பஞ்சாபில் 3,000 ரூபாய் என்ற வீதம் இரண்டு முறை கொடுத்துள்ளனர். ஹரியானா மாநிலம் 4,500 ரூபாயை ஒருமுறை கொடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாதத்துக்கு 1000 வீதம் 3 மாதம் தொடர்ந்து கொடுத்துள்ளது. ஆனால் தமிழக அரசு, 2000 ரூபாயைப் பதிவுசெய்து புதுப்பித்தவர்களுக்கு மட்டும் கொடுத்ததோடு நிறுத்திக்கொண்டது. ‘ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும்’ என்று நல வாரியம் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதன் பின், ஒருமாத காலத்திற்குள் அந்த தொழிலாளி புதுப்பிக்காதபோது அவர் நீக்கப்பட வேண்டும். அப்படி நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனில், அந்தத் தொழிலாளியும் நல வாரியத்தில் ஓர் உறுப்பினர்தான். அதை மையப்படுத்தியே நாங்கள் வழக்கு தொடுத்துள்ளோம்.

சவரத் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் நல வாரியம் போன்றவற்றில், பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் நிவாரணப் பணம் கொடுக்கிறார்கள். அப்படியிருக்க, நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டடத் தொழிலாளர்கள் பதிவை புதுப்பிக்கவில்லை எனக்கூறி, நிவாரண பணம் தருவதற்கு மறுக்கிறது அரசு. இது எந்த விதத்தில் நியாயம். பல்வகை அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும்.

கைத்தறி
கைத்தறி

தொடர்ந்து இடம் பெயரும் சூழ்நிலை கொண்டவர்கள் கட்டடத் தொழிலாளர்கள். அவர்கள் பதிவை புதுப்பிப்பதை ஞாபகம்வைத்து பின்தொடர்வது கடினம். அதையும் மீறி ஒரு தொழிலாளி புதுப்பிப்பதற்காகச் சென்றாலும் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மேல் பல காரணங்கள் சொல்லி அலைக்கழிக்கப்படுகிறார்கள். நல வாரியத்தில் பதிவைப் புதுபிக்காதவர்கள் என பிரித்துப் பார்க்காமல், பதிவு செய்த அனைவருக்கும் நிவாரண உதவியை அரசு வழங்க வேண்டும் என்பதையே எதிர்பார்கிறோம்.

ஊரடங்கு நீடித்தால் விவசாயிகள், தொழிலாளிகள், கடை வைத்திருப்பவர்கள் நிலை என்ன? #WhatAfterMay3

விடுபட்ட 20 லட்சம் கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2,000 கொடுத்தாலும் 200 கோடிதான் தேவைப்படுகிறது. கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள 3,000 கோடியில் 200 கோடியை தொழிலாளர்கள், வாடி வரும் இந்த கொரோனா காலத்தில் கொடுத்தால்தான் என்ன?'' என்றார் ஆதங்கத்துடன்.

நிலோபர் கபில்
நிலோபர் கபில்

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலிடம் பேசினோம்.

“பதிவு செய்த கட்டடத் தொழிலாளர்களுக்குத்தான் அந்த நிதி சென்று சேரும். மத்திய அரசு சட்டத்தின் விதியில், பதிவு செய்தவர்களுக்குத்தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளது. மற்றவர்களுக்கும் தரக்கூடாது என்று நாங்கள் நினைக்கவில்லை. நாம் சட்டத்தை மீற முடியாது. தொழிலாளர்கள் பதிவைப் புதுப்பிக்கவில்லை எனில் அவர்கள் பதிவு செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.

தற்போது மற்றொரு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், சென்னை உள்பட நான்கு பகுதிகளைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு கூறியுள்ளது. அதுவும் பதிவு செய்தவர்களுக்குத்தான். ஆட்டோ வாரியத்துக்கு தனியாக நிதி உள்ளது. அதிலிருந்து அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். மீதமுள்ள 15 நல வாரியத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அரசுதான் கொடுக்கிறது. முதல்வர் நல்லதுதான் செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு கஷ்டம் இருக்கும். அதனால் அவர்கள் வழக்கு தொடர்ந்திருக்கலாம். அதில் தவறு இல்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு