Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: நாக்பூரில் ஒரு வாரத்துக்குப் பொதுமுடக்கம்!

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமான நாக்பூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாகப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மும்பையிலும் அக்டோபருக்கு பிறகு இப்போதுதான் முதம்முறையாக தினத் தொற்று 1,500-ஐ தாண்டியிருக்கிறது. ஏற்கெனவே முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ச்சியாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நிதின் ராவத்
நிதின் ராவத்

மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளாத பட்சத்தில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மும்பையை ஒட்டிய பன்வெல், தானே, பால்கர், கல்யாண்-டோம்பிவலி மற்றும் அகோலா, அமராவதி போன்ற பகுதியில் 50 சதவிகித அளவுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புனே, நாசிக், ஔரங்காபாத், ஜல்காவ் போன்ற மாவட்டங்களிலும் பரவலாகக் குறிப்பிட்ட அளவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் சனி உட்பட இரண்டு நாள்கள் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். அதோடு கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. கடைகள் மாலை 7 மணிக்கு அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக நாக்பூரில் வரும் 15-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்தார். நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,710 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் உள்ளுர் நிர்வாகமே பொதுமுடக்கம் குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். நாக்பூரில் அமல்படுத்தப்படும் பொதுமுடக்கத்தின்போது தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கும்.

ஆனால் அலுவலகங்கள் இயங்காது. அரசு அலுவலகங்கள் 25 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும் என்றும், மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்றும், வீட்டுக்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்தார். மேலும் அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் இருக்கும் என்றும், மக்கள் தேவையில்லாமல் தெருக்களில் நடமாட வேண்டாம் என்றும், கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திடீர் சோதனை செய்து கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 52,000 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையிலும் கொரோனாவிற்கு 11,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர்!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சில இடங்களில் பொதுமுடக்கம் தேவைப்படுகிறது. இது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும். மும்பை, நாசிக், அகோலா, புனே, நாக்பூர் போன்ற இடங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது” என்றார். மும்பையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு