Election bannerElection banner
Published:Updated:

தடுப்பூசி: `நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; பிரதமருக்கு கடிதம்!’ -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதற்கட்டமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள். செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் தடுப்பூசித் திட்டம், `முதற்கட்டமாக சுகாதாரத்துறை பணியார்களுக்கும், இரண்டாவதுகட்டமாக காவல், வருவாய் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும், மூன்றாவதுகட்டமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்படும்’ என்று மத்திய அரசு விதிகளை வரையறுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைக்கும் முதல்வர் நாராயணசாமி
கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைக்கும் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் இதுவரை 38,611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37,681 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர். அதேபோல 642 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 286 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை.

மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய ’கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி, கடந்த ஜனவரி 13-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. முதற்கட்டமாக ஒரு பாட்டிலுக்கு 10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்களில் 17,500 டோஸ் மருந்தை மத்திய அரசு அனுப்பிவைத்திருக்கிறது.

முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் மருத்துவப் பணியாளர் முனுசாமி
முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் மருத்துவப் பணியாளர் முனுசாமி

புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய எட்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று காலை 10:30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார். முதல் தடுப்பூசியை முனுசாமி என்ற மருத்துவப் பணியாளர் போட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனி என வாரத்தில் நான்கு நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த எட்டு மையங்களில் தடுப்பூசிகள் போடப்படும். இந்தத் தடுப்பூசிகள் ஒரு நாளுக்கு 100 பேருக்குப் போடப்படும். புதுச்சேரியில் 19,000 பேருக்கும், காரைக்காலில் 1,600 பேருக்கும், மாஹேவில் 897 பேருக்கும், ஏனாமில் 323 பேருக்கும் என 21,820 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொரோனா: `உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி; வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்!’ - பிரதமர் மோடி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார், ``ஜனவரி 13-ம் தேதி 17,500 பேருக்கான டோஸ் வந்தது. அதைப் போடும் பணி இன்று தொடங்கிவிட்டது. மாநிலங்கள் முழுவதுக்கும் மருந்துகள் தயாரித்துத்தான் அனுப்ப வேண்டும் என்பதால், அடுத்தடுத்து வந்துகொண்டேயிருக்கும். படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும்” என்றார்.

`முன்னுதாரனமாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்!’

கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்திருக்கிறார். முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவத்துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் போடப்படும். இரண்டாம்கட்டமாக களப் பணியாளர்கள், மூன்றாவதுகட்டமாக 50 வயது தாண்டியவர்கள் மட்டுமன்றி, நீரிழிவுநோய், ரத்த அழுத்தம், கேன்சர், இதயநோய் போன்ற வியாதி உள்ளவர்களுக்குப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசிகட்டமாக மற்றவர்களுக்குப் போடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள் 24,000 பேருக்குப் போடப்படுகிறது. ஒரு மையத்தில் 100 பேருக்குப் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 147 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வேகமாகப் போட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மாநில அரசு தயாராக இருக்கிறது.

ஆகவே, மத்திய அரசு அதற்கான மருந்தை விநியோகம் செய்ய முடியுமா? அப்படி இல்லையென்றால், மாநில அரசே எங்கள் நிதியிலிருந்து புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர், துணை அதிபர், இங்கிலாந்து நாட்டு ராணி, அவருடைய கணவர், ஜோடன் நாட்டு மன்னர் ஆகியோர் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் புதுச்சேரி மாநிலம் மட்டுமல்ல... இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இதற்கு முன்னுதாரணமாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்.

நாங்கள் எல்லோரும் போட்டுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு முதற்கட்டத்திலேயே முன்னுரிமை கொடுத்து, அவர்கள் போட்டுக்கொண்டால்தான் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த மருந்தின் மீது நம்பிக்கை வரும். அதற்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு