Published:Updated:

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக சுகாதார நிறுவனம், சீனாவில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையை விட மீதம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை தரும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல், அந்த மாகாணம் மூடப்பட்டுள்ளது. முற்றுலுமாக அந்தப் பகுதி மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். அடிப்படை தேவைகள்கூட பெரும் கொடுமைகளுக்குப் பின்னரே அவர்களுக்குக் கிடைக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை சீனாதான் கொரோனா வைரஸ் நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இப்போதும் உலகம் முழுவதையும் கணக்கிட்டால், சீனாதான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. எனினும், அந்த வைரஸால் பாதிக்கப்படும் புதிய நபர்களின் எண்ணிக்கை சீனாவில் குறைந்து வருகிறது. இது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், உலகம் முழுவதும் புதிதாக இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 27 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம், சினாவில் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையை விட மீதம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தது.

இந்த எண்ணிக்கை கடந்த இருநாள்களில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் பிரேஸிலில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அன்டார்டிகா தவிர்த்து மற்ற அனைத்துக் கண்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை உலகம் முழுவதும் சுமார் 53 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.

கொரோனா
கொரோனா

இத்தாலியில் சுமால் 11 நகரங்கள் மூடப்பட்டுள்ளன. பிரிட்டன், ஜப்பான், இரான் உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்குத் தங்களின் விமானம் மற்றும் கப்பல் சேவையைப் பெருமளவு குறைத்துள்ளது. சீனாவில் வுகான் நகரம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. எனினும் மற்ற பகுதிகளில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள்.

கடனுக்கு சிக்கன் தராததால் கோபம்!- நெய்வேலியில் கொரோனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது

தற்போது வரையில் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 2867 பேர் பலியாகியுள்ளனர். அதே போன்று சுமார் 83,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, இரான் ஆகிய நாடுகள் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக, உலகப் பொருளாதாரத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு