Election bannerElection banner
Published:Updated:

கொரோனா வைரஸ்: உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம் என்ன?! - விரிவான தகவல்கள்

உ.பி
உ.பி

குஜராத் மாநிலத்தில் தகனம் செய்யப்படுவதற்கு உடல்கள் காத்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்தது.

- திலகவதி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மோசமாக பரவிக்கொண்டிருக்கும் செய்திக்கு மத்தியில், மாநிலங்கள் அதை எவ்வாறு கையாளுகின்றன என்ற செய்தியும் இணைந்தே வந்துகொண்டிருக்கின்றன.

அதில் உச்சகட்டமாக, குஜராத் மாநிலத்தில் தகனம் செய்யப்படுவதற்கு உடல்கள் காத்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்தது. மேலும், சூரத்தில் இருக்கும் இடுகாடு ஒன்றில் தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்படுவதால் அங்குள்ள எரிஉலை உருகுகிறது என்ற செய்தியையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

படம்: AP
படம்: AP
Manish Swarup

இந்தநிலையில் குஜராத்தில் மட்டுமல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்திலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் லக்னோவில்.

உடல்களை தகனம் செய்யக் காத்திருக்கும் மக்கள்

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுவருகிறது. தலைநகர் லக்னோவில் உடல்களை தகனம் செய்யக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசுத் தரப்பில் தரப்படும் எண்ணிக்கையைக்காட்டிலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களால் எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக இரண்டு லட்சத்தைத் தாண்டியது அதில் முறையே மகராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டன.

இன்றும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் நிலை

உத்தரப்பிரசேத மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாஸ்க் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் லக்னோ, வாரணாசி உட்பட பத்து மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.

கங்கை
கங்கை
Rajesh Kumar Singh

கடந்த சில தினங்களுக்கு முன் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் கும்பமேளா

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலைமை சோமாக இருக்க, உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்த கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மார்ச் 11-ம் தேதியிலிருந்து நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 10 -14-ம் தேதிகளில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஹரித்வாரின் முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

கும்பமேளாவில் கலந்துகொண்ட பல சாதுக்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த சாது

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரில் கங்கா நதியில் நீராட ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால், கொரோனா நெறிமுறைகளை அமல்படுத்துவதில் பெரும் சிரமமான ஒரு சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு கும்பமேளாவில் பங்கேற்க வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மஹா நிர்வாணி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

உத்தரகாண்டின் முதல்வர் கும்பமேளாவில் கொரோனா நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாகவே தெரிவித்திருந்தார்.

மறுபுறம் பக்தர்கள் மாஸ்குகளை அணியாமல் நதிக்கரையில் குவிவதையும், சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் தடுப்பது மிகச் சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்: உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம் என்ன?! - விரிவான தகவல்கள்
Rajesh Kumar Singh

கும்பமேளாவில் மக்கள் நீராடும் புகைப்படங்களும், சாதுக்கள் கூட்டமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பலர் அந்நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துவருகின்றனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக்கொண்டு வரும் இந்தச் சூழலில் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் பல நிபுணர்களும் தெரிவித்துவருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த சூழலில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு