Published:Updated:

`உதவும் வெப்பநிலை?; தினமும் 9,000 அழைப்புகள்..!' -கொரோனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குழந்தைகள் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை என யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸால் தற்போதுவரை 30 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து, அந்நாட்டை பெரும்பாடு படுத்திவிட்டது. பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர், வைரஸ் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், இந்த வைரஸ் தாக்கம் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. குறிப்பாக இத்தாலி, தென்கொரியா, இரான் போன்ற நாடுகளில் அதிக அளவில் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா வந்த சில பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டு உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்களும் சோதனை செய்யப்பட்டனர்.

`சந்தையில் ரகசிய வாழ்க்கை.. கொரோனா அச்சம்!’ - சீன அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சில அறிவுரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. சுத்தமாக கைகளை கழுவ வேண்டும், மற்றவர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்க்கலாம் உள்ளிட்ட சில வழிமுறைகள் மக்களுக்கு அறிவுரைகளாக வழங்கப்பட்டன. 2015-16-ம் ஆண்டில் எடுத்த ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் முறையாக கைகழுவுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. வறட்சி மாநிலங்களில் 40% மக்கள் தங்கள் வீட்டில் தேவையான தண்ணீர் இல்லாத காரணத்தால், கைகழுவுவதற்கு அதிக அளவு தண்ணிரை வீணடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பல வீடுகளில் கைகழுவுவதற்கான சானிடைஸரோ, சோப்போ இல்லாமல் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கொரோனோவை எதிர்கொள்வதில் பெரும் சிக்கலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கொரோனா
கொரோனா

எனினும் இந்தியாவில் தற்போது நிலவும் தட்பவெட்பநிலை, கொரோனாவை எதிர்கொள்ள சாதகமாக அமையும் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ``ஒரு வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வது மிக முக்கியம். 38 டிகிரி வெப்பநிலையில் அல்லது அதற்கு மேல் வெப்பநிலையில் இந்த வைரஸின் செயல்பாடு கணிசமாகக் குறைகிறது. வறட்சியான வானிலையில் இதன் பரவல் தடுக்கப்படலாம்" என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் இதன் செயல்பாடு கட்டுப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது வெறும் கணிப்புதான். மக்கள் சுத்தமாக இருப்பதன் மூலம் இதன் பரவலைத் தடுக்கலாம் என்பது உலக சுகாதார மையம் சொல்லும் வழிமுறை!


``கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் உதவுமா?" - மருத்துவரின் ஆலோசனை

இந்தியாவில், டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தினமும் 4,500 நபர்களிடம் தொலைபேசியில் இரண்டுமுறை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அதாவது 9,000 அழைப்புகள். இது தவிர கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களை தெரிந்துகொள்ள மக்களும் அழைப்பதுண்டு

கொரோனா
கொரோனா

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு விமான நிலையத்திலே முதற்கட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். அதில் எந்த அறிகுறிகளும் தென்படாதவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். எனினும் கொரோனா வைரஸ் என்பது 14 நாள்களுக்குப் பின்னர் கூட வெளிகாட்டும் என்பதால் தினமும் இரண்டு முறை அதிகாரிகள் அந்தப் பயணிகளிடம் அறிகுறிகள் தொடர்பாக பேசிவருகிறார்கள். டெல்லி விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்துவந்த பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இதுவரை டெல்லி விமான நிலையத்தில் மட்டும் தற்போது வரை சுமார் 1.3 லட்சம் பயணிகளுக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அதிக நேரம் பணி செய்வதாகவும் கூறுகிறார்கள்.

சீனாவில் குறைகிறது, உலக நாடுகளில் பரவுகிறது... கொரோனாவின் உண்மை நிலைதான் என்ன?! #Corona360

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க டெல்லியில் பயோ - மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்ய பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குழந்தைகள் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை என யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது!

அடுத்த கட்டுரைக்கு