Published:Updated:

`சென்னையில் 55; தமிழகத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி’ - சுகாதாரத்துறை தகவல்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இதுவரை 635 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,590-ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் புதிதாக 55 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 20-ம் தேதி மட்டும் 43 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். இன்று இந்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நேற்று மட்டும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 43 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 76 நபர்களுக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாகக் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள்!

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 55 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி 5, விழுப்புரம் 4, செங்கல்பட்டு 3, தஞ்சாவூர் 3, கள்ளக்குறிச்சி 2, கோயம்புத்தூர் 1, நாமக்கல்1, திருவாரூர் 1, காஞ்சிபுரம் 1 என 10 மாவட்டங்களில் 76 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்ஸ்
கொரோனா அப்டேட்ஸ்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு