Published:Updated:

`சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கான வாட்ஸ்ஆப் குரூப் தகவல்படி..’- சீனாவில் பணியாற்றும் தமிழர் ரூபன்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நான் பணியாற்றும் அலுவலகம் விடுமுறையில் சென்றவர்களுக்கு விடுமுறையை நீட்டித்திருக்கிறது. மறு அறிவிப்பு வரும்வரை விடுப்பிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.’

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சீனாவில் 4,515 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

China
China

இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சீனாவில் சுமார் 50,000 இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சீனாவில் வசிக்கின்றனர். வேலைக்காகச் சென்றவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

சீனாவின் தற்போதைய நிலை குறித்தும், இந்தியர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள, சீனாவில் பணியாற்றி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த ரூபன் துரைராஜிடம் பேசினோம். சீனா, பெய்ஜிங் மாநிலத்தில் சேங்பிங் மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார் ரூபன். பொங்கல் விடுமுறைக்காகப் புதுச்சேரி வந்திருக்கும் அவருக்கு, சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு மக்களிடம் அசைவ உணவுகளின் பயன்பாட்டைக் குறைக்கும்படி நேரடியான அறிவிப்புகளை வெளியிடவில்லை.
சீனாவில் பணியாற்றும் தமிழர் ரூபன்

"சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் யாருக்கும் இதுவரை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்திய வெளியுறவுத்துறையும் அதை உறுதி செய்துள்ளது. சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கென்று ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள், குடும்பமாக வசிப்பவர்கள் எனப் பலர் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் பரிமாறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தியர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்றே தெரியவருகிறது.

நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் சீனாவில் போக்குவரத்து, குழுவாக இயங்குதல் போன்றவற்றுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் சுகாதாரம் பேண வலியுறுத்தியும், வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது" என்றவர், இந்திய தூதரகமும் இந்தியர்களுக்கான உதவிகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது என்கிறார்.

Beijing
Beijing
`தொட்டாலே பரவும் கொரோனா; பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் 10 நாள்கள்!' -  அலட்சியம் காட்டியதா சீனா?

"நோய் பரவி வருவதால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாகத் தொடர்புகொள்வதற்கான பிரத்யேக ஹாட்லைன் நம்பர் ஒன்றை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஜனவரி 26-ம் தேதி, இந்தியக் குடியரசு தின விழா சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடப்பட இருந்தது. நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதால் பொது நிகழ்வு எதையும் நடத்த வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்த, குடியரசு தின விழா கைவிடப்பட்டது" என்கிறார் ரூபன்.

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு சீன மக்கள் மத்தியில் சற்று அச்சம் நிலவுகிறது. பொதுவாக, அங்கு ஷாப்பிங் மால்களில் எல்லாம் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளும் உயிருடனும் இருக்கும். விலங்குகளும் உணவுக்காக விற்பனை செய்யப்படும்.

Ruban
Ruban

தற்போது அசைவ உணவுகள் மற்றும் உயிருடன் இருக்கும் விலங்குகள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாம். அசைவ உணவுகளை அதிகம் விநியோகிக்கும் சில அலுவலக கேன்டீன்கள்கூட மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீன அரசு மக்களிடம் அசைவ உணவுகளின் பயன்பாட்டைக் குறைக்கும்படி நேரடியான அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஆனால், சைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறது" என்கிற ரூபன், தான் மீண்டும் சீனாவுக்குச் செல்வது தொடர்பாகத் தன் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளதாகக் கூறுகிறார். ''நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நான் பணியாற்றும் அலுவலகம் விடுமுறையில் சென்றவர்களுக்கு விடுமுறையை நீட்டித்திருக்கிறது. மறு அறிவிப்பு வரும்வரை விடுப்பிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது'' என்கிறார் ரூபன்.

China Newyear
China Newyear
Pixabay
`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus

கொரோனா பாதிப்பு காரணமாக, சீனாவில் புத்தாண்டு விடுமுறை நாள்களை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல