Published:Updated:

சென்னை: கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் என்ன?

சென்னை
சென்னை

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4,000 பேர் புதிதாத கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். நாள்கள் செல்லச் செல்ல அது 1,000-க்கும் கீழ் இறங்கியது. ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு அது மீண்டும் அதிகரித்தது.

உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளானது தலைநகர் சென்னைதான். மொத்த பாதிப்பில் பெரும்பங்கு சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலில்தான் ஏற்பட்டது. சென்னையிலிருந்து வருபவர்களுக்குக் கண்டிப்பா கொரோனா இருக்கும் என்று மற்ற மாவட்ட மக்கள் கூறும் அளவுக்குச் சென்னையில் கொரோனாவின் தாக்கம் ருத்ரதாண்டவமாடிக்கொண்டிருந்தது.

ஊரடங்கு
ஊரடங்கு

அப்படி, சென்னையை மிரட்டிவந்த கொரோனா பரவல் நாள்கள் செல்லச் செல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. அதேநேரம் சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று இறங்குமுகமானது. அதற்கு சென்னை மாநகராட்சி மேற்கொண்ட துரித நடவடிக்கைகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

வீடு வீடாகச் சென்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய களப்பணியாளர்கள்; சென்னையில் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள்; கொரோனா சிகிச்சை முகாம்; அதிகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

களப்பணியாளர்கள்
களப்பணியாளர்கள்
GCC

இன்றுவரை இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களின் வரிசையில் அதிக எண்ணிக்கையில் ஆர்.டி- பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நகரம் சென்னைதான். அதேபோல கொரோனா சிகிச்சையிலிருந்து மீண்டு, வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் சென்னையில்தான் அதிகம். மரணங்களும் குறைந்த அளவில்தான் பதிவாகியிருக்கின்றன.

தற்போதைய நிலவரம் என்ன?

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4,000 பேர் புதிதாத கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். நாள்கள் செல்லச் செல்ல அது 1,000-க்கும் கீழ் இறங்கியது. ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு அது மீண்டும் அதிகரித்தது. நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர். ஒரு சில தினங்களில் அது குறைந்து 800-க்கும் குறைவானது.

காய்ச்சல் முகாம்
காய்ச்சல் முகாம்
GCC

கொரோனா பாதிப்பு மட்டுமல்ல... இறப்புகளும் குறையத் தொடங்கியிருக்கிறது. ஒருகட்டத்தில் நாளொன்றுக்கு 50-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகிக்கொண்டிருந்த நிலையில். தற்போது கடந்த மூன்று தினங்களாக நாளொன்றுக்கு 9, 7, 7 என்ற எண்ணிக்கையிலான மரணங்களே பதிவாகின்றன. ஆரம்பகாலத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பிணவறைக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தநிலை முற்றிலுமாக மாறியிருக்கிறது. தமிழக்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், இறப்புவிகிதத்தைக் கட்டுக்குள்வைப்பதும், குறைப்பதும்தான் முக்கிய இலக்கு என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

குறைக்கப்படும் களப்பணியாளர்கள்:

கொரோனா தடுப்புப் பணிகளில் மட்டும் மாநகராட்சி  நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்  என 45,000 பேருக்கும் மேல் பணியாற்றிவந்தனர். இதற்காக, பல தொண்டு நிறுவனங்களோடு மாநகராட்சி ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், தொண்டு நிறுவனங்கள் தங்களின் பணியை நிறுத்தியிருக்கின்றன.

களப்பணியாளர்கள்
களப்பணியாளர்கள்
GCC

அதோடு, களப்பணியாளர்கள் மற்றும் ஃபோகஸ்டு வாலன்டியர்ஸ் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் குறைக்கப்பட்டுவருகிறார்கள். இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ``தற்போது சென்னையில் பாதிப்பு கட்டுக்குள்தான் இருக்கிறது. தேவைக்கு ஏற்பதான் ஊழியர்களை பணியமர்த்த முடியும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்துவிட்டது. தேவை ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள்’’ என்றார்.

கொரோனா அச்சம்: முதியோர் இல்லங்களை சென்னை மாநகராட்சி எப்படி கையாள்கிறது?

குறைக்கப்படுகின்றனவா கொரோனா தடுப்பு முகாம்கள்?

சென்னையைப் பொறுத்தவரை 33-க்கும் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பு முகாம்களும் கொரோனா மருத்துவ முகாம்களும் செயல்பட்டுக்கொண்டிருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துவருவதாலும், பெரும்பாலான முகாம்கள் கல்வி நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் செயல்பட்டுவருவதாலும். அந்த முகாம்கள் காலி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி உயரதிகாரியிடம் பேசியபோது ``தற்போதைய நிலையில் சென்னையில் இயங்கிவரும் கொரோனா தடுப்பு முகாம்களில் 24,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கின்றன. இருந்தபோதிலும், கொரோனா தடுப்பு முகாம்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 700 பேர்தான். பெரும்பாலான தடுப்பு முகாம்கள் ஆட்கள் இல்லாமல் இருக்கின்றன.

சென்னை வர்த்தக மையம் முகாம்
சென்னை வர்த்தக மையம் முகாம்

அதோடு, சில கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகத்தைத் திரும்ப ஒப்படைக்கக் கேட்டிருக்கின்றன. இருந்தாலும், தற்போது சில பண்டிகைகள் தொடர்ந்து வரவிருகின்றன. அதனால், இரண்டு மூன்று வாரங்கள் வரை அனைத்துத் தடுப்பு முகாம்களும் மாநகராட்சியின் வசம்தான் இருக்கும். அதற்குப் பின்னர் கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் மட்டும் ஒப்படைக்கப்படும். மற்ற தடுப்பு முகாம்கள் தொடர்ந்து செயல்படும். மழைக்காலம் வரவிருப்பதால், முடியும் வரை அந்த முகாம்கள் தொடர்ந்து பராமரிக்கப்படும்’’ என்றார்.

குறைந்துவரும் கொரோனா பாதிப்புகளை பண்டிகைக் காலங்களில் அதிகரித்துவிடாமல் தடுக்க வேண்டியது மக்கள் ஒத்துழைப்பில்தான் இருக்கிறது. பண்டிகைகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிடப் பல மடங்கு உயிர்ப் பாதுகாப்பு முக்கியம் என்பதைக் கருத்தில்கொண்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு