Published:Updated:

`அரசு கணக்கு 96; தி.மு.க கணக்கு 761' - குலைநடுங்க வைக்கும் `கொரோனா' மரணக் கணக்குகள்!

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

'கொரோனா மரண எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டுகிறது தமிழக அரசு' என குற்றம் சாட்டிவரும் தி.மு.க, அதற்கான ஆதாரங்களாக அதிர வைக்கும் புள்ளிவிவரங்களையும் காட்டுகிறது. அ.தி.மு.க அரசோ, இவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்கிறது.

'கொரோனா மரணங்களைக் குறைத்துக் காட்டுகிறது தமிழக அரசு' என்றக் குற்றச்சாட்டுதான், தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் நியூஸ். புள்ளிவிவரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளும், அமைச்சர்களில் ஆரம்பித்து முதல்வரை வரையிலாக அவரவர் தரும் விளக்கங்களுமாக 'அரசியல் கணக்கு'கள் அதிரவைக்கின்றன.

இதில், கொரோனா பேரிடரின் முன்கள வீரர்களாகப் பணியாற்றி வரும் மருத்துவர்களின் மரணங்கள் 40-க்கும் அதிகம் என்கின்றன எதிர்க்கட்சிகள். தமிழக அரசோ, இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவருகிறது. இந்த நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 'கொரோனாவால், தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அந்தச் செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த அரசு - தனியார் மருத்துவர் - செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ட்வீட்
உதயநிதி ட்வீட்

இதற்கிடையே, கொரோனா தொற்றினால், மாவட்ட வாரியாக இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கைக்கும் தமிழக அரசு அறிவிக்கிற மொத்த எண்ணிக்கைக்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பதாகவும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புள்ளிவிவர பட்டியலை ஆதாரங்களாக முன்வைக்கின்றன. மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்துப் பேசுகிற பழனிவேல்ராஜன், ''கொரோனா பாதிப்பினால் ஏற்படக்கூடிய மரணங்கள் குறித்த தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்துகிற மாதிரி இல்லாமல், முரண்பாடாக இருக்கின்றன. எனவே, உண்மையான - தெளிவான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிதான் வழக்கு தொடுத்துள்ளேன்.

ஏனெனில், தமிழ்நாடு முழுக்க மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் வழங்கிவரும் கொரோனா இறப்பு எண்ணிக்கையும், ஒட்டுமொத்த மாநிலத்தின் இறப்பு விகிதமும் ஒன்றுக்கொன்று பொருந்திப்போகவில்லை. இதுமட்டுமல்லாமல், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட புள்ளி விவரங்களைத் தருவதையும் தமிழக அரசு குறைத்துக்கொண்டே வருகிறது.

உதாரணமாக, கடந்த ஜூலை மாதத்தின் முதல் 2 வாரங்களில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 97 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதே மதுரை மாநகராட்சியிலுள்ள 2 மின் மயானத்தில் மட்டுமே 761 பேர் உடல்களை எரித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்

அதாவது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மேற்குறிப்பிட்ட 2 மயானங்களிலும் சராசரியாக ஒரு மாதத்தில் 430 உடல்களை எரித்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஜூலை முதல் 2 வாரங்களிலும் 215 உடல்கள் வரையிலும்தான் எரியூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 761 பேர் எரியூட்டப்பட்டிருக்கிறார்கள் என்றால், கூடுதலாக இறந்துபோனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 546 பேர். இதற்கான காரணம் என்ன?

கொரோனா பாதிப்பினால், இவர்கள் இறக்கவில்லை என்றால், எந்தப் பாதிப்பினால் இறந்தார்கள்... என்பதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்லவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம், ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டம் முழுக்கவே ஜூலை முதல் 2 வாரங்களில் 97 பேர்தான் இறந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் இதுகுறித்த விளக்கத்தை எனக்குத் தெரிவிக்கும்படி கேட்டு, மதுரை ஆட்சியருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்'' என்றவர், தமிழக அரசின் அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

''முதல் ஊரடங்கு முடிந்து, 2-வது ஊரடங்கு ஆரம்பித்த காலகட்டத்தில் தினமும் 30 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியென்றால், கொரோனா தொற்று என்பது இன்றைக்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, மக்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்தி, அவர்களது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்கமுடியும் என்பது உறுதியாகியிருக்கிறது.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

இந்தச் சூழலில், 'தொற்று அதிகரிக்கவில்லை. மரணங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன' என்றெல்லாம் தொடர்ந்து அரசு அறிவித்துக்கொண்டே இருக்கும்போது, அதைக் கேட்கின்ற மக்களும் உண்மையான நோய் தீவிரத்தை உணராமல் போய்விடுகின்றனர். இதனால், தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஆபத்தான சூழலைப் புரிந்துகொள்ளாமல், தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க அரசும், அரசியலுக்காக உண்மையை மறைத்தே பேசிவருகிறது. இதனால், உண்மை நிலவரம் தெரியாமல், மக்களும் நோய்த்தொற்று பயமின்றி உலாவுகின்றனர். இதன் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பும் இறப்புவிகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தப்பட்டது, அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர், நோய்த் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை என்ன என்பன போன்ற உண்மை நிலவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்தான் மக்களிடையே பயமும் நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்; இதன் தொடர்ச்சியாகத்தான் நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார் உறுதியாக.

இதற்கிடையே 'கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் முன்கள வீரர்களாக செயலாற்றிவரும் மருத்துவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இறந்துபோயுள்ளனர். ஆனால், தமிழக அரசோ, இந்த எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டி வருகிறது' என்றதொரு குற்றச்சாட்டும் தி.மு.க தரப்பிலிருந்து காத்திரமாக ஒலிக்கிறது. இதுகுறித்துப் பேசுகிற, அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-வும் மருத்துவருமான பூங்கோதை,

பூங்கோதை
பூங்கோதை

''தமிழ்நாட்டில், இதுவரையிலும் 43 மருத்துவர்கள் இறந்துபோயுள்ளனர் என இந்திய மருத்துவ சங்கமே அறிவித்திருக்கிறது; மற்றபடி எதிர்க்கட்சியான தி.மு.க இந்த புள்ளிவிவரத்தைச் சொல்லவில்லை. ஆனால், இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள, முதல்வரின் உறவினர் ஒருவரை வைத்தே, இந்தக் கணக்கை மறுக்கவும் செய்திருக்கிறார்கள். ஒரு மருத்துவரே சக மருத்துவரின் மரணத்தை மறைக்க முயல்வது எவ்வளவு பெரிய தவறு. இதுமட்டுமல்லாமல், 'இதுவரை 20 மருத்துவர்கள்தான் இறந்திருக்கின்றனர். மீதம் உள்ளவற்றை இப்போதுதான் கணக்கெடுத்து வருகிறோம்' என்கிறது தமிழக அரசுத் தரப்பு.

ஒரு மருத்துவர் என்ற வகையில், எனக்கு வரும் வாட்ஸப் தகவலின்படி மட்டுமே, இந்தக் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோன மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது 31 ஆக இருக்கிறது. இதிலும்கூட, நோய்த்தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இறந்துபோனவர்களின் கணக்கு எங்கள் கவனத்துக்கு வரவில்லை. மேலும், பல் மருத்துவர்கள் 2 பேர், செவிலியர் 2 பேர், லேப் டெக்னீஷியன் ஒருவர், 108-ல் உள்ள உதவியாளர் ஒருவர் என எங்களுக்குத் தெரிந்து மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 37 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா அல்லாத இறப்புகளையும்கூட, மருத்துவரைக் கொண்டு முறையாக சோதனை செய்து, 'கொரோனா தொற்றில் இறக்கவில்லை' என்று உறுதி செய்யவேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்துகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படியான எந்த நடைமுறையும் இல்லை. கொரோனா பரிசோதனைகள் 100-க்கு 70 சதவிகிதம் மட்டுமே தெளிவான முடிவுகளை காட்டும் என்கிற சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவுரையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது'' என்கிறார் அக்கறையாக.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற, தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள்,

''தமிழ்நாடு முழுக்கவே மாவட்டம் வாரியாக இறப்பு விகிதம் குறித்த ரிப்போர்ட்கள் முறையாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கொரோனா பாதிப்பினால் யாரேனும் இறந்திருப்பதாகத் தகவல்கள் தாமதமாகக் கிடைத்தாலும் அதையும் கணக்கில் சேர்த்தேதான் தமிழக அரசு சார்பில் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

பொதுவாகவே, பிறப்பு மற்றும் இறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய மரணங்களையும், ஃபார்ம் 4 வழங்கப்பட்டு பல்வேறு மயானங்களில் பதிவாகக்கூடிய மரணங்களையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் பொதுசுகாதார அதிகாரிகளும் ஆண்டுதோறும் சரிபார்ப்பார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை.

கொரோனா காலகட்டத்தில், இறப்பு விகிதங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவிப்புபடியே தமிழக அரசு பதிவு செய்துவருகிறது. அதாவது, கோவிட் 19-ன் நேரடி பாதிப்பினால் ஏற்படக்கூடிய இறப்புகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்த் தாக்குதலோடு கோவிட் 19-ன் பாதிப்பும் சேர்ந்ததினால் ஏற்படக்கூடிய இறப்புகள் மற்றும் எந்தவொரு இறப்பு என்றாலும் கோவிட் 19 பரிசோதனைகள் செய்து இறப்பின் தன்மையை உறுதி செய்வதென்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது'' என்கின்றனர்.

நெல்லை: சாப்பாட்டுக்கே கஷ்டம்; முதல்வரைச் சந்திக்க வந்த முதியவர்! போலீஸ் தடுத்ததால் ஏமாற்றம்

இந்த நிலையில், 'தமிழக அரசு, கொரோனா மரணங்களை மறைக்கிறது' என்ற எதிர்க்கட்சிகளின் புள்ளிவிவரக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசியபோது,

''இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே கொரோனா மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அகில இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுக் குழு கணக்கெடுத்து வருகிறது. இதற்காக மாநிலங்கள்தோறும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுதான் இந்தப் பணி நடைபெறுகிறது.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

கொரோனா தொற்று பரிசோதனை விவரம், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்தக் குழுவினர்தான் எடுத்துவருகிறார்கள். தினம்தோறும் மாலை 5 மணிக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, 6 மணி அளவில்தான் இறுதிப் பட்டியல் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதன்பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பாக தமிழக அரசும் இந்தப் புள்ளிவிவரங்களை அறிவித்து வருகிறது. எனவே, இதில் இறப்பு எண்ணிக்கையைக் கூட்டி, குறைத்துச் சொல்வதற்கு எந்த வழியும் இல்லை; அதற்கான தேவையும் தமிழக அரசுக்கு இல்லை.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காக ஆளுங்கட்சியைப் பற்றி குற்றம், குறை சொல்லிக்கொண்டிருக்கின்றது தி.மு.க.

விழுப்புரம்:`தாழிகள், எலும்புகள், மதுக்குடுவைகள்!’ - மண்ணுக்குள் புதைந்த பழைமையான நாகரிகம்

அடுத்ததாக, தமிழ்நாட்டில் இறந்துபோன மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் பொத்தாம்பொதுவான ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இது சம்பந்தமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கொடுத்துள்ள புள்ளிவிவரம் என்பது இந்த கொரோனா காலகட்டத்தில், இறந்துபோன மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கைதான். அதாவது வயதாகி ஓய்வில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட மருத்துவர்கள் பலரும் இந்த கொரோனா காலகட்டத்தில் இறந்துபோயுள்ளனர்.

அந்த மொத்த எண்ணிக்கையைக் கொண்டுவந்து, 'பணியில் இருந்த மருத்துவர்கள் இறந்துபோனதாக' பொய்யாக பிரசாரம் செய்துவருகின்றனர். கோயம்புத்தூரில்கூட, தனியார் மருத்துவமனையை நடத்திக்கொண்டிருந்த வயது முதிர்ந்த 2 மருத்துவர்கள் இறந்துபோயுள்ளனர். மதுரையில் இதுபோன்று 3 மருத்துவர்கள், சென்னையில் 4 மருத்துவர்கள் வரையிலும் இறந்திருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பணியில் இருந்துவரக்கூடிய தமிழக அரசு மருத்துவர்கள் பட்டியலில் நாம் சேர்க்கமுடியாது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில், ஒரு வீட்டில் ஓர் இறப்பு நிகழ்ந்துவிட்டது என்றால், அன்றைய தினமே மாநகராட்சியில் வந்து பதிவு செய்துவிட மாட்டார்கள். ஒன்றிரண்டு நாள் கழித்துத்தான் பதிவு செய்வார்கள். அதன்பிறகே அந்த இறப்பு குறித்து அதிகாரிகளும் விசாரணை செய்து இறப்பு சான்றிதழ் வழங்குவார்கள். இவையெல்லாம் நடைமுறை எதார்த்தங்கள். ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில், மருத்துவத் துறையினர் தினமும் இறந்தவர்களின் கணக்கெடுப்பை உடனடியாக மாலைக்குள் தெரியப்படுத்தி விடுகின்றனர்.

எனவே, கொரோனா பாதிப்பினால் இறந்துபோனவர்களின் பட்டியலில் தாமதமாக எண்ணிக்கை சேர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பினால் இறந்துபோனவர்களை எரியூட்டும் நடைமுறையே இதுவரை இருந்தது இல்லை. 15 அடி ஆழத்துக்கு குழி வெட்டி பாதுகாப்பான முறையில் புதைத்துதான் வந்திருக்கிறார்கள். அண்மையில்தான், 'புதைப்பது மட்டுமின்றி எரியூட்டவும் செய்யலாம்' என ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் அவ்வளவு எளிதாக யாரும் தலையிட்டு, உண்மைகளை மறைக்கவோ அல்லது மிகைப்படுத்தி சொல்வதற்கோ எள்ளளவும் வழியில்லை. அப்படியொரு தேவையும் தமிழக அரசுக்கு இல்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்'' என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு