Published:Updated:

சென்னைக் காவல்துறையைக் குறிவைக்கும் கொரோனா! #ChennaiUpdate

காவல்துறையினர்
காவல்துறையினர்

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் காவல்துறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கூடுதல் போலீஸ் கமிஷனர் உட்பட இதுவரை 100 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள். இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் எனக் காவல்துறையினர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிவந்த நிலையில், கோயம்பேடு பகுதியை உள்ளடக்கிய அண்ணாநகர் காவல் நிலைய துணை ஆணையர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையினர்
காவல்துறையினர்

அவரைத் தொடர்ந்து, மேலும் இரண்டு உதவி ஆணையர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது, சென்னை மாநகரக் காவல்துறை கூடுதல் ஆணையர் உட்பட இரண்டு உயர் அதிகாரிகளுக்கு நேற்று (மே 12) கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதுவரை ஒரு கூடுதல் கமிஷனர், ஒரு துணை கமிஷனர், மூன்று உதவி கமிஷனர்கள், பத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் என இதுவரை சென்னையில் 100 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று (மே 12) 510 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 46 பேர் குழந்தைகளாவர். நேற்று ஒரே நாளில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 4,882 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கு மேல் மக்கள் தொகை சென்னையில் மட்டுமே இருக்கிறது. வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகளவில் இருந்த கொரோனா தொற்று, தற்போது தென்சென்னை பகுதிகளிலும் பரவிவருகிறது.

மருத்துவமனை
மருத்துவமனை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 700-க்கும் மேற்பட்டோரும், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் 400-க்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன. திரு.வி.க நகர் மண்டலத்தில் 124 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 116 தெருக்களும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 78 தெருக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 22 தெருக்களும் என மொத்தம் 690 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக வைக்கப்பட்டுள்ளன.

பல்லாவரம், தாம்பரம், பெருங்குடி, துரைப்பாக்கம், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளிலும் கடந்த சில நாள்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் நோய்க்கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலும், கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குச் சென்றுவந்தவர்கள் மூலமாகவே, இந்தப் பகுதிகளில் கொரோனா பரவுகிறது. வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தற்போது வெளிநாடுகளிலிருந்து பலர் இந்தியாவுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில், மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்த நான்கு பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை ‘ஹாட்ஸ்பாட்’ ஏன்?

தாம்பரத்தில் மொத்தம் 14 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களில் அனைவரும் குணமடைந்த நேரத்தில், புதிதாக 50 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாநகரில் ஒரே குடும்பத்தில் ஆறு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியான நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையரான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசியபோது, “அதிகமாக மக்கள்தொகையைக் கொண்டது சென்னை நகரம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் எட்டில் ஒரு பங்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். மேலும், கடந்த பத்து நாள்களுக்கு மேலாக சென்னையில் கொரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் காரணங்கள்தான், சென்னையில் தினந்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்குக் காரணம். வரும் வாரத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.

தொற்றுநோய் நிபுணர்கள் சிலரிடம் பேசியபோது, “பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள சமயத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றால் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்று அர்த்தம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்போது, பரிசோதனை தீவிரமாக இருந்தால் படிப்படியாக எண்ணிக்கை குறையும்” என்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை
`கேரளாவில் கொரோனா பரவல் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவுதான்!’ - முதல்வர் பினராயி விஜயன்

நோய்த்தொற்று அதிகரித்துவரும் நேரத்தில் ஊரடங்கைத் தமிழக அரசு தளர்த்துகிறது. இது என்ன மாதிரியான உத்தி என்பது புரியவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகளெல்லாம் திறந்திருப்பதால் சகஜநிலை திரும்பிவிட்டது போலவே இருக்கிறது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உணர்வெல்லாம் பெரும்பாலான மக்களிடம் காணாமல்போய்விட்டது என்பதைப் பார்க்க முடிகிறது. நோய்த் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், தமிழகத்தில் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.

அடுத்த கட்டுரைக்கு