Published:Updated:

கொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்

உலக அளவில் ஒரு பெருநோய்த்தொற்று பரவி முடக்கிப்போட்டுள்ள இந்தச் சூழலில், முழுப் பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்குக் கட்டணத்தை அறிவித்து, கடமையிலிருந்து விலகிக்கொள்ள நினைக்கிறது

பிரீமியம் ஸ்டோரி
மிழகம் ஓர் அசாதாரணமான பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம், மரண எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. `கொரோனாவால் வயதானவர்களே உயிரிழப்பார்கள்’ என்ற சர்வதேச நம்பிக்கையைப் பொய்யாக்கி, இளைஞர் முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி இறந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக இருக்கும் சென்னையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய நான்கும்தான் மக்களின் நம்பிக்கை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவமனை களையும் படுக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டிய மாநில அரசு, மெள்ள மெள்ளத் தன் பொறுப்பைக் கைகழுவி, தனியார் மருத்துவமனைகளின் பக்கம் கைகாட்டத் தொடங்கியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.4,31,411 வரை கட்டணம்!

கொரோனா தொற்று தொடங்கிய தருணத்தில் மருத்துவ மனைகளை மூடிவைத்து நேரம் பார்த்துக்கொண்டிருந்த தனியார் மருத்துவமனைகள், இந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. கட்டுப்பாடில்லாமல் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப் படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்திய மருத்துவச் சங்கம் வெளிப்படையாகவே, மிதமான பாதிப்புள்ள நோயாளி 10 நாள்கள் தங்கி சிகிச்சை பெற 2,31,820 ரூபாயும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு 17 நாள்கள் சிகிச்சையளிக்க 4,31,411 ரூபாயும் கட்டணமாகப் பெற பரிந்துரைத்திருக்கிறது. இவை வெறும் சிகிச்சைக்கான கட்டணம். சிறப்பு மருத்துவர் ஆலோசனை உட்பட இதர செலவுகள் தனி!

கொரோனா ட்ரீட்மென்ட்
கொரோனா ட்ரீட்மென்ட்

இதையடுத்து தமிழக அரசும் தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை வரையறுத்துள்ளது. `அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன்கூடிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 5,000 முதல் 7,500 ரூபாய் வரை வசூலிக்கலாம்’ என்றும், `தீவிர அறிகுறிகளுடன் இருப்பவர்களிடம் நாளொன்றுக்கு 15,000 ரூபாய் வசூலிக்கலாம்’ என்றும் அறிவித்துள்ளது. இதன்படி பார்த்தால், தனியார் மருத்துவமனைகளில் 17 நாள்கள் தங்கி சிகிச்சை பெறும் தீவிர அறிகுறி உள்ளவர்கள் 2.55 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

கடமையிலிருந்து விலகுகிறதா அரசு?

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 30 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின்கீழ் சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன்கூடிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 5,000 ரூபாயும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும்.

`உலக அளவில் ஒரு பெருநோய்த்தொற்று பரவி முடக்கிப்போட்டுள்ள இந்தச் சூழலில், முழுப் பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்குக் கட்டணத்தை அறிவித்து, கடமையிலிருந்து விலகிக்கொள்ள நினைக்கிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். ‘‘கோவிட்-19, விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு மிகுந்த தடுமாற்றத்துடன்தான் செயல்பட்டுவருகிறது. கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டு, தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிறது. சென்னையை கொரோனாவின் மையமாக மாற்றியது அரசின் தோல்வியே’’ என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

வழிகாட்டும் ஒடிசா!

ஒரு மருத்துவப் பேரிடர் ஏற்படும் சூழலில், மொத்த மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும் அரசு. அதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணம் ஒடிசா. ஜூன் 8-ம் தேதி, மாலை 5 மணி வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,994. அவர்களில் 1,993 பேர் குணமடைந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 11. சிகிச்சை பெற்றுவருபவர்கள் 990 பேர். கடந்த மார்ச் மாதமே கொரோனா வைரஸின் வீரியத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அதி தீவீரமாக அதிகாரிகளைக் களத்தில் இறக்கிவிட்டார். எந்த அரசியலும் இல்லாமல், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயலைத் தொடங்கிவிட்டார்கள்.

நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேய பாண்டியன்
நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேய பாண்டியன்

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் கார்த்திகேய பாண்டியன், ‘‘அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் வீரியமடையத் தொடங்கியதுமே நாங்கள் ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டோம். முதலில் உயிரிழப்பை எப்படிக் குறைப்பது என்று சிந்தித்தோம். கொரோனா தொற்று உள்ளவர்களை மற்ற நோயாளிகளோடு சேர்த்து சிகிச்சையளிப்பது ஆபத்து என்பதால், அவர்களுக்குத் தனி மருத்துவமனைதான் சரி என முடிவு செய்தோம். அரசு மட்டும் தனியாக இதைச் செயல்படுத்த முடியாது. தனியார் மருத்துவமனைகளை அழைத்துப் பேசி, அவர்களோடு ஒப்பந்தம் போட்டு மருத்துவமனைகளைக் கையகப்படுத்தினோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன், ஒடிசா ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன், மகாநதி கோல் ஃபீல்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சி.எஸ்.ஆர் நிதியை இந்த மருத்துவமனைகளுக்குச் செலவிட முன்வந்தன. ஒரே மாதத்தில் எல்லா அடிப்படை வேலைகளும் முடிந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு முதல் மருந்து வரை ஒரே தரத்தில் இலவசம். மருத்துவ வசதிகளை உருவாக்குவது மட்டும் அரசாங்கத்தின் வேலை இல்லை; அவற்றை அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கச் செய்வதும் முக்கியம். அதைத்தான் ஒடிசா அரசு செய்துவருகிறது’’ என்றார்.

இதைப் பற்றி, ‘கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஓடிசா மாடல்!’ என்ற தலைப்பில் 12.04.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். ஆரம்ப நாளிலிருந்து இன்றுவரையிலும் கொரோனா விஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டுள்ளது ஒடிசா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்தும் இலவசம்!

ஒடிசாவில் உருவாக்கப்பட்டுள்ள 35 கோவிட் மருத்துவமனைகளில், 17 மருத்துவமனைகள் தனியார்-பொதுத்துறை நிறுவனப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ளன. பெருநகரங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு, ஒரு படுக்கைக்கு 3,000 ரூபாயும், கிராமப்புறங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு 2,500 ரூபாயும், ஐ.சி.யூ-வுக்கு 5,000 ரூபாயும் வழங்குகிறது அரசு. மருத்துவமனையின் மொத்த உள்கட்டமைப்பு, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்... அனைத்தையும் அரசு பயன்படுத்திக்கொள்ளும். இதன்படிப் பார்த்தால் ஐ.சி.யூ-விலிருக்கும் ஒரு நோயாளிக்கு உத்தேசமாக 17 நாள்களுக்கு அரசு செலவு செய்யும் தொகை 85,000 ரூபாய்தான். அதேநேரம், சிகிச்சை, உணவு, மருந்துகள் அரசின் நேரடி கண்காணிப்பில். காப்பீட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் வேலைகூட நோயாளிக்கு இல்லை.

கொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்

இது மட்டுமல்ல... ஒவ்வோர் ஊராட்சியிலும் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அப்படி அமைக்கப்பட்டுள்ள 6,798 முகாம்களில் ஜூன் 8-ம் தேதி நிலவரப்படி 2.30 லட்சம் பேர் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கான உணவு, தேவைப்பட்டால் சிகிச்சை அனைத்தையும் பஞ்சாயத்து நிர்வாகமே வழங்குகிறது.

அதிகரிக்கப்பட்ட வசதிகள்!

ஒடிசா மாநில தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஷாலினி பண்டிட், ‘‘பிப்ரவரி இறுதியில் எங்களிடம் ஒரேயொரு பரிசோதனைக்கூடம்தான் இருந்தது. அதன் மூலம் இரண்டே இரண்டு கோவிட் சோதனைகள் மட்டுமே செய்ய முடியும். இந்த இரண்டு மாதங்களில், மாநிலம் முழுக்க ஒரு நாளில் சுமார் பத்தாயிரம் பரிசோதனைகள் செய்யும் அளவுக்குக் கட்டமைப்பை உருவாக்கி விட்டோம். மருத்துவப் பணியாளர்கள் தொடங்கி, தனிமைப்படுத்தப்படுபவர்கள் வரை அனைவருக்கும் முழுமையாகப் பயிற்சி அளிக்கிறோம். கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் அது பெரிய அளவில் உதவியது.

மார்ச் 26-ம் தேதி, ஒடிசாவின் முதல் கொரோனா மருத்துவமனை உருவாக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் மாநிலத்தின் அத்தனை மாவட்டங் களிலும் சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி விட்டோம். கோவிட் ஹெல்த் சென்டர்கள், கோவிட் கேர் சென்டர்களும் தனியாக உருவாக்கப் பட்டுள்ளன. இன்றைய தேதியில் ஒடிசாவில் 22,000 படுக்கைகளும், 500 ஐ.சி.யூ படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப் பட்டுள்ளது. கொரோனா மருத்துவ மனைகள் தனியாக அமைக்கப்பட்டதால், மற்ற நோய்களுக்கு மக்கள் தைரியமாக மருத்துவமனைகளை நாடுகிறார்கள். தடுப்பூசிகள் நிறுத்தப்படவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் நகரத்துக்கு வர அவசியமில்லாதவாறு அந்தந்தப் பகுதிகளிலேயே ஏற்பாடுகளைச் செய்திருக் கிறோம்’’ என்கிறார்.

ஓர் அரசு, பேரிடர் சூழலில் மக்களுக்கு அச்ச மில்லாத, நம்பிக்கையான, பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். பதற்றத்தைத் தானே ஏற்றுக்கொண்டு, மக்களை நிம்மதியாக வாழச் செய்ய வேண்டும். ஒடிசாவில் வாழும் தமிழரான லதா வேலுமணி அதை உணர்ந்து பேசுகிறார். ‘‘கொரோனா மட்டுமில்லாம ஒரு புயலையும் எதிர்கொண்டிருக்கு ஒடிசா. ஆனா, மக்கள் பதற்றமே இல்லாம இருக்காங்க. கொரோனா வந்தாக்கூட பயமில்லை. தரமான சிகிச்சை கிடைக்குது. ஊரடங்கு இருந்தாலும் காய்கறி, மளிகைப் பொருள்கள் எல்லாம் தாராளமாகக் கிடைக்குது. மக்கள் ரொம்பச் சரியா நடந்துக்கிறாங்க. நிம்மதியா இருக்கோம்’’ என்கிறார் அவர்.

ஒடிசா மக்களுக்குச் சாத்தியப்பட்ட நிம்மதியும் அமைதியும் ஏன் தமிழகத்துக்குச் சாத்தியப்பட வில்லை? கொரோனாவின் தீவிரத்தை அரசும் மக்களும் சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் காரணம். ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதியுறாத வாறு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது அரசு. பாதிப்பின் தன்மையை சரியாகக் கணித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. மக்களும் சிறிதும் விழிப்புணர்வின்றி தெருக்களில் அலைகிறார்கள். எல்லாம் சேர்ந்து இக்கட்டான நிலையில் தமிழகத்தை நிறுத்தியிருக்கிறது. இனி மேம்போக்கான நடவடிக்கைகள் பயனளிக்கப்போவ தில்லை. மனித உயிர்களின் மகத்துவத்தை ஆட்சி யாளர்கள் உணர்ந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும்!

‘‘மகாராஷ்டிரா, ஆந்திராவைப் பின்பற்றலாமே!’’

‘‘‘மகாராஷ்டிராவில் 80 சதவிகித தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. மும்பையில் மட்டும் தனியார் மருத்துவமனைகளின் 4,400 படுக்கைகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆந்திராவில் 19,000 படுக்கைகளை அரசு எடுத்திருக்கிறது. தமிழக அரசும் இதைத்தான் செய்ய வேண்டும். கூடுதல் படுக்கைகள் தேவையுள்ள இடங்களில் தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி, அதற்குத் தேவையான மனிதவளம், சிகிச்சைக்குத் தேவையான கவச உடைகள், உதவிகள் அனைத்தையும் அரசே வழங்க வேண்டும். அதைவிடுத்து தனியார் மருத்துவமனை களுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்வது தவறான அணுகுமுறை” என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளரான மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

நிரம்பிய படுக்கைகள்!

ஜூன் 8-ம் தேதி நிலவரப்படி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலுள்ள 450 படுக்கைகளில், 367 படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள 400 படுக்கைகளில், 398 படுக்கைகளில் நோயாளிகள் இருக்கின்றனர். அரசு தற்காலிகமாக 2,790 கோவிட் ஹெல்த் சென்டர்களையும், 7,612 கேர் சென்டர்களையும் உருவாக்கியுள்ளதாகச் சொல்கிறது. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டர், டி.ஜி வைஷ்ணவ் கல்லூரி, வேலம்மாள் இன்ஜினீயரிங் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேர் சென்டர்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

அநியாய பேக்கேஜ்!

மீபத்தில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த வசதியான பெண்மணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஆயிரம் விளக்கிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ‘படுக்கை இல்லை’ எனக் கைவிரித்தது மருத்துவமனை நிர்வாகம். பாதிக்கப்பட்டவர் தரப்பில், ‘செலவு பற்றிப் பிரச்னையில்லை’ என்று பேச, ‘‘சூட் ரூம்தான் இருக்கு. 14 நாள்களுக்கு மொத்தம் 16 லட்சம். ஆனால், மூன்று லட்ச ரூபாய்க்குத்தான் பில் தருவோம். விருப்பமிருந்தால் சேருங்கள்’’ என்றிருக்கிறார்கள். கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு, சிகிச்சை எடுத்துவருகிறார் அந்தப் பெண்மணி. `இந்த பேக்கேஜ் முறைதான் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் இருக்கிறது’ என்கிறார்கள்.

‘அட்மிட் செய்யும்போதே 14 நாள்களுக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். நோயாளி எட்டு நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினாலும், மீதிப் பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில், `பெட் இ்ல்லை’ என்று கைவிரிக்கிறார்கள். `இது செயற்கையாக டிமாண்டை உருவாக்கத்தான்’ என்கிறது சுகாதாரத்துறை வட்டாரம். `அரசு நிர்ணயித்த கட்டணத்தையெல்லாம் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மதிப்பதேயில்லை’ என்கிறார்கள். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் என்று வந்தால், ‘பெட் இல்லை’ என்ற பதில்தான். ‘எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்யத் தயார்’ என்றால் பெட் முளைத்துவிடும். உயிர் பயத்தில் எதையேனும் விற்று, செலவு செய்ய முனைகிறார்கள் மக்கள்.

‘‘இந்தக் கட்டணம் போதாது!’’

னியார் மருத்துவமனைகள்மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஜெயலாலிடம் பேசியபோது, ‘‘உண்மையில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தனியார் மருத்துவமனைகளுக்குப் போதுமானதாக இல்லை. எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரே கட்டணம் என்பதே தவறு. `100 படுக்கைகள்கொண்ட ஒரு மருத்துவமனையில் 25 படுக்கைகளை கொரோனாவுக் கென்று ஒதுக்க வேண்டும்’ என்கிறது அரசு. அப்படிச் செய்தால், பிற வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்வரை அனைவருக்கும் கவச உடைகள் வழங்க வேண்டும். இவையெல்லாம் நிர்வாகத்துக்குக் கூடுதல் செலவு. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்படும்பட்சத்தில் பிற நோயாளிகள் அந்த மருத்துவமனைக்கு வர யோசிப்பார்கள்; அதுவும் நஷ்டம். தவிர, அரசிடமிருக்கும் அளவுக்கு மனிதவளமும் தனியாரிடம் இல்லை’’ என்றார்.

இன்னொரு தனியார் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி, ‘‘அரசு மருத்துவமனையில் முழுச் சிகிச்சையையும் இலவசமாக வழங்குகிறார்கள். மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்கள், மருத்துவர்கள், மருந்துகள் உட்பட அனைத்துக்கான செலவுகளையும் கணக்கிட்டால், தனியார் மருத்துவமனைகள் பெறும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். அந்தத் தொகையை அரசு ஈடுசெய்கிறது. தனியார் மருத்துவமனைகள் எப்படி ஈடுசெய்வது? தற்போது தனியார் மருத்துவமனைகள் பெறும் கட்டணம் என்பது அது மாதிரியான நிர்வாகச் செலவினங்களுக்கு உட்பட்ட தொகைதான்’’ என்கிறார்.

ஒதுங்கிக்கொண்ட ராதாகிருஷ்ணன்!

சென்னை கொரோனாநோய்த் தடுப்புக்கான சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணனிடம் ஒடிசா மாடல், தனியார் மருத்துவமனை சிகிச்சை ஆகியவற்றை முன்வைத்துப் பேசினோம். ‘‘இது குறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது’’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு