Published:Updated:

ஊரடங்கு சமயத்தில் சென்னையில் வீடற்றவர்களின் நிலை என்ன?- மாநகராட்சி கமிஷனர் பதில்!

வீடற்ற குடும்பம்
வீடற்ற குடும்பம்

இந்நிலையில், 21 நாள்கள் ஊரடங்கை அடுத்து அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அறிய மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

கொரோனா வைரஸ் வெகு வேகமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற அனைத்துச் செயல்பாடுகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தடுப்பிற்காகத் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

உணவகங்கள் மூடப்பட்டு, முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், சென்னையில் தெருவோரங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து பலரின் மனதில் கவலை எழுந்தது. ஒருநாள் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதே, பல தன்னார்வலர்கள் சாலையில் வாழும் மக்களுக்கு ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகளைக் கொடுத்துச் சென்றிருந்தனர். இந்நிலையில், 21 நாள்கள் ஊரடங்கை அடுத்து அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அறிய மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

இது குறித்து அவர் கூறியதாவது, " ஒருநாள் ஊரடங்கின் போதே வீடற்றோர், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஒருநாள் தங்குவதற்குச் சென்னையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான காப்பகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே போல இந்த வசதி அடுத்த 21 நாள்களுக்கும் நீட்டிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 38 காப்பகங்கள், 13 சிறப்புக் காப்பகங்கள் என மொத்தம் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதரவு தேடி வரும் மக்களுக்கு அங்கேயே உணவு சமைத்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இதுகுறித்து மக்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்தியிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "பலருக்கு வாய்மொழி செய்தியாகத்தான், இந்தத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கின்றது. இது தவிர்த்து 'shelter coordinators' எனப்படும் இந்தக் காப்பகங்களில் ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல அதிகாரிகள் போன்றோர் நகர்வலம் சென்று உதவி தேவைப் படுபவர்களை அடையாளம் காண்பார்கள். அதுமட்டுமன்றி போலீசார், தன்னார்வலர்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தக் காப்பகங்களுக்கு மக்கள் வருகிறார்கள். வருவதற்கு விருப்பம் உள்ள மக்களைத்தான் நாங்கள் அழைத்து வருகிறோம், யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை" என்று பதிலளித்தார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கத் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், காப்பகங்களில் இவை எப்படிச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு,

"மாநகராட்சி காப்பகங்களில் அனைவர்க்கும் தனி அறைகள் வழங்குவதற்கான வசதிகள் எல்லாம் இல்லை, அது நடைமுறையில் சாத்தியமும் ஆகாது, டார்மெட்டரிகளில்தான் மக்கள் தங்கவைக்கப்படுகின்றனர். அவற்றில் அதிக மக்களை நெருக்காமல் இடைவெளிவிட்டுத் தங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காப்பகங்கள் தவிர்த்து மாநகராட்சி சமூகக் கூடங்களில் கூட வீடற்ற ஆதரவற்ற மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். சென்னை ரயில் நிலையத்தில் ரயில் இன்றி தவித்த வட இந்தியர்கள் பலரை மீட்டு, அவர்களையும் இந்தச் சமூக கூடங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான பள்ளிகளில் தங்க வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி காப்பகங்களில் இருக்கும் அனைவரையும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்" என்றார்.

கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்
கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்

மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைகள் பற்றி நேரடியாக அறிய, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைந்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மாநகராட்சி காப்பகங்களுக்கு ஒரு விசிட் அடித்தோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்களுக்கான இலவச தங்கும்விடுதிகளான அந்தக் கட்டடங்கள், சூழலின் அவசியம் கருதி வீடற்றவர்களின் ஆதரவு இல்லமாக மாறியிருந்தது.

ஆண்கள் காப்பகத்தில் சுமார் 20 பேரும், பெண்கள் காப்பகத்தில் சுமார் 10 பேரும் தங்கியிருந்தனர். அவர்களுக்கு உணவு, பாய், தலையணை ஆகியவை அளிக்கப்பட்டிருந்தன. வந்திருந்தவர்களில் சிலர் அதிகாரிகளால் மீட்டு அழைத்துவரப்பட்டவர்கள், சிலர் இதுபற்றி கேள்வியுற்று வந்தவர்கள். அறையில் அடைந்து கிடைக்க முடியாமல், பெரும்பாலும் அவர்கள் பகல் நேரங்களில் வெளியில்தான் இருக்கிறார்கள் என்று தகவல் சொன்னார் அங்கிருக்கும் வார்டன். அரசு தன்னால் இயன்றதைச் செய்கிறது. இந்த இக்கட்டான சூழலில் ஆதரவற்ற மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கு இப்படி ஒரு தீர்வு இருக்கிறது என்று தகவல் சொல்லுவது நமது கடமை.

மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர், மாநகராட்சியின் கீழ்க்கண்ட இடங்களில் உள்ள 51 காப்பகங்களில் தங்கி பயன்பெற்றுக் கொள்ளலாம்.

https://view.genial.ly/5e7d98fa7ad2780e3b58b8a4/interactive-image-

இந்த லிங்க்கை உங்களில் குழுக்களில் பகிர்ந்து இந்தத் தகவல் இன்னும் பலருக்கு சென்று சேர உதவுங்கள்.

தடுப்பூசி, மருந்து, தாமதம்... கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19
அடுத்த கட்டுரைக்கு