Published:Updated:

`மனைவிக்கு வீட்டிலே பிரசவம்..’ - சமூக செயற்பாட்டாளரின் குற்றச்சாட்டும் சுகாதாரத்துறையின் விளக்கமும்

பெரம்பலூர்
பெரம்பலூர்

`நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண் குழந்தை பிறக்கும் வரையிலும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பது சட்டம். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பது என்பது தவறு இல்லையா?'

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சமூக செயற்பாட்டாளர். மரச்செக்கு தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி பேபிக்கு கடந்த 17-ம் தேதி வீட்டிலேயே பிரசவம் நடந்தது. ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்து சுகாதாரத் துறையினர் நான்கு நாள்களுக்கு முன்பு சதீஷ்குமார் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இதைத்தொடர்ந்து பேபியை ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்து ரத்தப் பரிசோதனை செய்ததில் ரத்தம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து ரத்தம் ஏற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறியதற்கு பேபியும் அவரின் கணவரும் மறுத்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வராததால் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் கீதா ராணி, தாசில்தார் பாரதி உள்ளிட்ட அதிகாரிகள் எவ்வளவோ பேசிப் பார்த்துவிட்டார்கள்.

முடியாத பட்சத்தில் போலீஸார் அழைத்து வந்து கைது செய்து அழைத்துச்செல்வோம் என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் இருவரும் வர முடியாது எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு தம்பதி இருவரும் அவர்கள் வாழ்ந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவான நிலையில் ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்
Representational Image

தம்பதி இருவரும் வீடியோவில், ``நான் சூழலியல் செயற்பாட்டாளர். தற்சார்பு பொருளாதாரத்தைப்பற்றி மக்களிடம் பேசக்கூடியவன். இந்த நிலையில், ஒரு பெண் என்பவள் கர்ப்பம் தரிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண்ணை ஒரு நோயாளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவமனைக்குப் போகக் கூடாது என்பதை முடிவெடுத்தோம். வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறா? அந்தக் காலகட்டத்தில் அப்படிதானே பார்த்திருக்கிறார்கள். நாமெல்லாம் ஆரோக்கியமாக வாழவில்லையா... நீங்களே யோசியுங்கள். ஜனநாயக நாட்டில் இயற்கையான முறையில் வீட்டில் வைத்து குழந்தை பெற்றது குற்றமா... என் மனைவியும் மகனும் திடகாத்திரமாக நல்லாதான் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று நல்லாயிருக்கும் உடலையும் மோசமாக்கிவிடுவார்கள்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

அந்த பயத்தில்தான் நாங்கள் இருந்தோம். சுகாதாரத்துறையினர், காவல்துறையை வைத்து எந்த அடிப்படையிலாவது எங்களைக் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான் வீட்டை விட்டு வெளியே வந்தோம். எங்கள் குழந்தையை நாங்கள் எப்படி வளர்ப்பது என்பது எங்களுடைய விருப்பம். ஏன் இந்த அதிகாரிகள் எங்களை மிரட்டுகிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண் குழந்தை பிறக்கும் வரையிலும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பது சட்டம். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பது என்பது தவறு இல்லையா? இம்மாவட்டத்தில் அதிக அளவு பெண் சிசுக்கொலை நடந்துகொண்டிருக்கும் சூழலில் இவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அந்த காரணத்தால்தான் அவர்கள் குடும்பத்தாரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு