Published:Updated:

கொரோனா அவஸ்தை... வீட்டுக்குள் முடங்கலாம்... ஆனால், பிழைப்புக்கு வழி?!

வெறிச்சோடிய சென்னை
வெறிச்சோடிய சென்னை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க `குவாரன்டைன் மோடு’க்கு போகுமாறு பிரதமர் தொடங்கி அனைவரும் அட்வைஸ் செய்யும் நிலையில், `வீட்டுக்குள் முடங்கினால் எங்களுக்குச் சோற்றுக்கு என்ன வழி?’ என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

உலக நாடுகளை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும், கூட்டம் சேரக் கூடாது, பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனப் பல அட்வைஸ்களை அரசுகளும் மருத்துவ நிபுணர்கள் தரப்பிலும் தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியம்தான். ஆனால், அது மட்டுமே போதுமா?

பெண் தொழிலாளர்கள்
பெண் தொழிலாளர்கள்

வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவில்லையென்றால் சுமைப்பணித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வணிகர்கள், சிறுகடை வியாபாரிகள் என அன்றாடம் பிழைப்பை நடத்துகிறவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இந்தத் தரப்பினரில் பலர் இப்போதே பாதிப்புக்கு ஆளாக ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் வாழ்க்கை கவலைக்குரியதாகியிருக்கிறது. முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களின் வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற இடங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சீனா உள்ளிட்ட கோரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வர வேண்டிய உதிரி பாகங்கள் வரவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பல கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிவந்த ஒப்பந்தத்தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர்
நம்மை மட்டும் அல்ல... AI-யையும் நெருக்குகிறது கொரோனா! #LongRead

விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதால், அதைச் சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் வேலையிழந்துள்ளதுடன், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்குப் சென்றுகொண்டிருக்கிறது.

இது குறித்து பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஜோதிசிவஞானத்திடம் பேசினோம். "ஏற்கெனவே நம் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அரசின் முதலீடு, செலவு என எல்லாமே குறைந்து நாட்டின் வளர்ச்சி விகிதம் கடைசிக் காலாண்டில் 4.7 சதவிகிதமாக இருந்தது. ஜி.டி.பி-யைக் கணக்கிடும் முறை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாற்றப்பட்டது. அப்படியும்கூட அது 4.7 சதவிகிதம்தான். இது மிக மிகக் குறைவு. இதை வளர்ச்சி என்றே சொல்ல முடியாது. இதன் காரணமாக, வேலையிழப்புகள் ஏற்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஜோதிசிவஞானம்
ஜோதிசிவஞானம்

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்களின் நடமாட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லையென்றால் வியாபாரம் நடக்காது. சர்வதேச அளவில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்துகிற பல பொருள்கள் சீனாவிலிருந்துதான் வருகின்றன. அந்த சப்ளை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் சீனா மிகப்பெரிய பாதிப்புகளுக்கு ஆளானது. ஆனாலும், அந்த பாதிப்பிலிருந்து சீனா விரைவிலேயே மீண்டுவந்துவிட்டது. சீனா அளவுக்கு எந்த ஏற்பாடும் இந்தியாவில் கிடையாது. நம்முடைய பட்ஜெட்டில் அடிப்படை சுகாதாரத்துக்கு ஒரு சதவிகிதம்கூட ஒதுக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது பெரிய பாதிப்பு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு இங்கு இல்லை. வெறும் அறிவிப்புகளைத்தான் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!

ஆனால், உரிய ஏற்பாடுகள் இல்லை. சீனாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதே, இங்கு முன்னேற்பாடுகளை நாம் செய்திருக்க வேண்டும். இப்போது, இங்கு பாதிப்பு வர ஆரம்பித்துவிட்டது. இதை எதிர்கொள்ள போதுமான ஏற்பாடுகள் இங்கு இல்லை. பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார் ஜோதிசிவஞானம்.

ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதே தற்போதைய சூழலில் சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று சொல்லப்படும் நிலையில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவருகின்றன.

திருச்செல்வம்
திருச்செல்வம்

இது குறித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலச்செயலாளர் திருச்செல்வனிடம் பேசியபோது, "அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்ற நிலையில் இருப்பவர்கள்தான், தற்போதைய சூழலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 60 லட்சம் பேர் நல வாரியங்களில் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கட்டுமானத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தினமும் காலையில் ஓர் இடத்தில் கூடித்தான் பல்வேறு இடங்களுக்கு வேலைக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இப்போது, கூடுவது தடைசெய்யப்பட்டிருப்பதால், அவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் என 17 நலவாரியங்கள் உள்ளன. கட்டுமான நல வாரியத்தில் ரூ.400 கோடிக்கு மேல் நிதி இருக்கிறது. ஆட்டோ நல வாரியத்தில் நிதி இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில், அந்த நிதியைக் கொண்டு தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணமோ, உதவித்தொகையோ வழங்கப்பட வேண்டும். நலவாரியங்களில் பதிவுசெய்தவர்கள், பதிவுசெய்யாதவர்கள் என தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடி முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும். குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்பிக்கையுடன் இத்தகைய இடர்பாடுகளை எதிர்கொள்வார்கள்.

உணவகங்கள்
உணவகங்கள்

சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்துவந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படாமல் சென்னையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் சரியாகும் வரை சம்பளம் கொடுத்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது அவர்கள் 200 பேர், 300 பேர் என ஒரே இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதனால், அவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது” என்ற எச்சரிக்கையுடன் முடித்தார் திருச்செல்வன்.

`லிப் சர்வீஸ்’ என்பது எளிது. ஆட்சியாளர்கள் வெறுமனே மக்களுக்கு அட்வைஸ் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்காமல், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அவர்களின் உணவுத்தேவைக்கும் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்திவருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் டாலர்கள் வழங்குவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்ததைப்போல, பிரதமர் மோடியும் நிவாரணத்தொகையை அறிவிக்க வேண்டும் என்பது இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு